Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தலாக்... தலாக்... தலாக்... பற்றிக்கொண்ட விவகாரம்!

இந்தியாவின் வடக்கே நூற்றாண்டு பகையாக காஷ்மீர் பற்றி எரிந்து கொண்டிருக்கும் சூழலில், மற்றொரு நெருப்பாக இந்தியா முழுக்கவே மெள்ள பரவத் துவங்கியிருக்கிறது இஸ்லாமியர்களின் விவகாரத்தான தலாக் தொடர்பான சட்ட விவாதங்கள்!

'தலாக் என்று சொல்லி விவகாரத்து செய்வது இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டப்படி சரியானதல்ல. பொதுசிவில் சட்டமே இந்தியாவுக்கு அவசியம். அதன்படிதான் அனைத்து மதத்தினரும் விவகாரத்து செய்ய முடியும். பாகிஸ்தான் உட்பட இஸ்லாமிய நாடுகள் பலவற்றிலும் மணவாழ்க்கை தொடர்பான இஸ்லாமிய சட்டங்களில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன'
- இப்படி தன் தரப்பை உச்ச நீதிமன்றத்தில் எடுத்து வைக்க மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசு தயாராகிக் கொண்டிருக்கிறது என்கிற செய்திகள் கசிந்து, மேலும் அனலைக் கிளப்பிக் கொண்டுள்ளன.


மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த இஷ்ரத் ஜகான் என்ற பெண், சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஒரு மனுதான் இதற்கெல்லாம் அச்சாரம்.

'என்னுடைய கணவர், தொலைபேசி மூலமாக மூன்று முறை தலாக் சொல்லி, விவாகரத்து பெற்று விட்டதாகச் சொல்லிவிட்டார். இதனால், நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். 7 முதல், 12 வயதுள்ள மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் ஆகியோரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும்' என தன் மனுவில் தெரிவித்திருந்தார் இஷ்ரத் ஜகான். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இஸ்லாமியர்களைப் பொறுத்தவரை இந்த விஷயத்தில் ஷரியத் சட்டம் என்பது நடைமுறையில் உள்ளதால், உரிய விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசு மற்றும் அகில இந்திய இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

கொலைகளைத் தடுக்கும் தலாக்!

இதற்கு, 'பெண்ணைவிட ஆண் வலிமையாக உள்ளதால் தலாக் கொடுக்காவிட்டால் மனைவி மீது கணவன் வன்முறையைக் கையாள நேரிடலாம். எனவே தலாக் முறை கட்டாயம் அவசியம். ஆண்கள் தங்களின் மனைவியைக் கொலை செய்வதை தடுக்கவும், தவறான உறவுக்கு வழிவகுக்காமலும், பலதார முறைக்கு தடை விதிக்கும் வகையிலும் இருப்பது தலாக் முறைதான்' என்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த தமது பதிலில் குறிப்பிட்டது அனைத்திந்திய இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம்.

இத்தகைய சூழலில்தான் மத்திய அரசு தன்னுடைய தரப்பை தற்போது உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யத் தயாராகி வரும் விஷயம் வெளியாகியிருக்கிறது.


இமெயில், வாட்ஸ்அப், போன், தபால் என்பது போன்ற வழிகளில் ’தலாக்’ செய்யும் முறையால் பெண்களும் குழந்தைகளும் பாதிக்கப்படுகின்றனர் என்றும்... தலாக் ஒன்றே இஸ்லாம் பெண்களுக்கு பாதுகாப்பானது என்றும் மாறி மாறி விவாதங்கள் சூடுபிடிக்கின்றன.

ஆணுக்கு தலாக்!

இஸ்லாமிய மதத்தைப் பொருத்தவரை மனைவியை விவாகரத்துச் செய்ய நினைத்தால், சம்பந்தபட்ட கணவன், ஜமாத்தில் உள்ள மதகுருமார்களை அணுகி முதல்முறை ‘தலாக்' என்று சொல்ல வேண்டும். பிறகு மனைவியின் ஒரு மாதவிடாய் காலம்வரை அவருடன் உடன்பாடு ஏற்படாவிட்டால் அடுத்த மாதம் இரண்டாவது ‘தலாக்‘ சொல்லிவிட்டு, அடுத்த மாதவிடாய் காலம் வரை காத்திருக்க வேண்டும். அந்த காலகட்டத்துக்குள்ளும் உடன்பாடு நிகழவில்லை என்றால், மூன்றாவது முறையாக ‘தலாக்' என்ற வார்த்தையை உச்சரித்து, மூன்றாவது மாதவிடாய் காலம்வரை காத்திருக்கலாம். இந்த மூன்று மாதங்களுக்குப் பிறகும் மனைவியுடன் உடன்பாடு நிகழவில்லை என்றால், இருவரும் பிரிந்துவிடலாம்.

பெண்ணுக்கு குலா!

மனைவியானவள், கணவனைப் பிரிவதற்கும் இஸ்லாத்தில் வாய்ப்பளிக்கப்படுகிறது. இதற்கு ’குலா’ என்று பெயர். இந்த முறையில் மனைவியானவள் 'குலா' சொன்ன பிறகு, 3 மாதங்களுக்குப் பிரிந்திருக்க வேண்டும். அதன்பிறகும் மனைவிக்கு வாழ விருப்பம் இல்லாவிட்டால் பிரிந்துவிட வேண்டியதுதான். கணவன் விரும்பினாலும் பிரிந்து செல்லும் உரிமை, மனைவிக்கு வழங்கப்படுகிறது. ஆனால், பொதுவாகவே இப்படி குலா என்று சொல்வது குறைவே. தலாக் என்பதுதான் அதிகமாக இருக்கிறது.

சரி, இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த இவர்கள் எல்லாம் இந்த தலாக் பற்றி என்ன நினைக்கிறார்கள்?

அநீதி இழைப்பதில்லை!

ஃபாத்திமா முசாஃபர் (தமிழக முஸ்லீம் பெண்கள் கூட்டமைப்புத் துணைத் தலைவர்): ''இறைவன் குர்ஆன் மூலம் விதித்த கட்டளைகள் அனைத்துமே சரியானவைதான். காலப்போக்கில் சில குருமார்கள் தவறான வழியில் புரிதல் இல்லாமல் அவற்றைப் பயன்படுத்துகிறார்கள். முதல் வாய்ப்பிலேயே பொறுப்புடனும் பொறுமையுடனும் சிந்தித்துச் செயல்பட வைக்கவே, இஸ்லாத் வழிவகை செய்கிறது. மாறாக பெண்களுக்கு இது அநீதி இழைப்பதில்லை.

ஃபாத்திமா முசாஃபர்

 

அதேசமயம், கணவன் -- மனைவி இருவரிடையே புரிதலே ஏற்படாத வகையில் வாட்ஸ்அப், மெயில், போன் மூலம் தலாக் அனுப்புவது இஸ்லாத்துக்கு எதிரானது. இதைவிடக் கொடுமையானது, ஜமாத்துக்கு நேரில் வராமல் தன் உறவினர்கள் மூலம் கணவன் தலாக் சொல்லிவிடுவதும், அதன் அடிப்படையில் தலாக் அளிப்பதும். இவையெல்லாம் முற்றிலும் தவறானது.’’


சட்டம் தன் கடமையைச் செய்யட்டும்!

சல்மா (எழுத்தாளர்): ''இஸ்லாமிய நாடுகள் என்று சொல்லப்படுகிற மேற்குலக நாடுகளில்கூட தலாக் நடைமுறையைப் பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை. குர்ஆனில் சொல்லப்படாதவைகளைக்கூட தலாக் என்ற பெயரில் செயல்படுத்தும்போதுதான் சிக்கல் நிகழ்கிறது. தலாக் குறித்த புரிதலையும் அதைச் சரியாக நடைமுறைப்படுத்துவதையும் சட்டமும் நீதிமன்றமும்தான் முன்னின்று செய்ய வேண்டும். இந்தச் சட்டதை தவறாகப் பயன்படுத்துவோரின் அதிகாரத்தைக் குறைக்கும் நடவடிக்கைகள் அவசியம்.’’

சல்மா

 

நீதிமன்ற தலையீடு தேவையே இல்லை!

நஜ்மா (வுமன் இந்தியா மூவ்மென்ட், தமிழ்நாடு மாநிலத் தலைவர்): ''ஆண், பெண் இருவருக்குமே இஸ்லாம் சம உரிமையை அளித்துவருகிறது. ஆனால், இஸ்லாத் மீது அவதூறு பரப்பும் விதமாகவும், இஸ்லாமியர்களை பழமைவாதிகள் எனச் சித்தரிக்கும் நோக்கத்துடனும் சிலர் தவறாகப் பிரசாரம் செய்து வருகிறார்கள். மதத்தை மதிக்காமல் தன்னிச்சையாக செயல்படுவது தவறு. உச்ச நீதிமன்றம் இதில் தலையிடுவது தேவையற்றது.’’

கௌஸர் நிஸார் (வழக்குரைஞர், சென்னை உயர் நீதிமன்றம்): ''பொதுச்சட்டப் பிரிவில்கூட, பிற மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு விவாகரத்து வாங்குவதில் சிக்கல் இருக்கலாம். ஆனால், இஸ்லாத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் தனிநபர் சட்டத்தில் எந்தச் சிக்கலும் இல்லை. இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்களால் மூன்று மாத இடைவெளி என்னும் மிகக் குறுகிய காலத்தில் உரிமையைப் பெற முடிகிறது. நீதிமன்றங்களில் வழக்குத் தொடரும் கணவன் -மனைவியிடம்தான் பிரச்னை இருக்குமே தவிர, இஸ்லாமிய சட்டங்கள் மீதோ, ஜமாத்தைச் சேர்ந்தவர்கள் மீதோ எந்த வகையிலும் குற்றம் சொல்ல முடியாது.’’

இனி, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது. ஆனால், அது உறுதியானதா என்பதை காலம்தான் சொல்ல வேணடும்!

- பொன்.விமலா

குர்ஆன் என்ன சொல்கிறது?

* தலாக் உச்சரிக்கும் மூன்று மாத கால இடைவெளியில் கணவன்-மனைவிக்கு இடையே புரிதல் உண்டாக வாய்ப்புத் தரவேண்டும். அப்படியும் புரிதல் இல்லாதபட்சத்தில் அந்தக் கணவன், மனைவியைப் பிரியும்போது அவளை முழு சுதந்திரத்துடன் இயங்கவிடுவதுடன், அவளுடன் நல்ல நட்புடன் பிரிவது அவசியம். அவனிடம் தங்க மாளிகையே இருந்தாலும் அதை மனைவிக்குப் பரிசாகக் கொடுக்க வேண்டும்.


* அவசரப்பட்டு தலாக் சொல்லிவிடக் கூடாது என்ற எண்ணத்தில்தான் கணவன்-மனைவி இருவருக்குமான கால அவகாசம் அவசியமாக வழங்கப்படுகிறது. ஒருவேளை ஆண்கள் அவசரப்பட்டு தலாக் கொடுத்துவிட்டு பிறகு மனம் மாற்றம் ஏற்பட்டு தன் மனைவியுடன் மீண்டும் திருமணம் செய்து கொண்டு வாழ விரும்பினால், அந்தப் பெண் வேறு ஒருவரைத் திருமணம் செய்து, அவரைத் தலாக் செய்துவிட்டு பிரிந்திருக்க வேண்டும். இல்லையெனில் பிரிந்த கணவன், மனைவியுடன் சேர வாய்ப்பில்லை.

இன்றைக்கு இஷ்ரத் ஜகான்... அன்றைக்கு ஷாபானு!

இன்றைக்கு இந்த விவகாரம் வெளிவருவதற்குக் காரணம்... மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த இஷ்ரத் ஜகான் என்ற பெண் உச்ச நீதிமன்ற படியேறியதுதான். 'என் கணவர் போன் மூலமாகவே தலாக் சொல்லி விவகாரத்து செய்துவிட்டார். குழந்தைகளோடு நான் பாதிக்கப்பட்டுள்ளேன். எனக்கு நீதி வேண்டும்' என்று அவர் உச்ச நீதிமன்ற படியேறியுள்ளார் தற்போது. ஆனால், இந்த தலாக் விஷயம் சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பும் நீதிமன்றப் படியேறியிருக்கிறது. இதைச் செய்தவர்... ஷா பானு.

அப்போது அது மிகவும் பரபரப்பான விஷயமாக இந்தியா முழுக்க, ஏன் உலகம் முழுக்கவே விவாதிக்கப்பட்டது. அந்த வரலாற்று வழக்கு பற்றிச் சொல்கிறார், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ரோஜா ரமேஷ்.

 

''மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூர் நகரைச் சேர்ந்த வசதியான வழக்கறிஞர் முகம்மது அகமதுகான், ஷா பானுவைத் திருமணம் செய்து 5 குழந்தைகளைப் பெற்றார். 14 ஆண்டுகளுக்குப் பின் மற்றொரு இளம்பெண்ணை திருமணம் செய்துகொண்டு இரு மனைவிகளுடன் வாழ்ந்து வந்தார். 62 வயது ஷா பானுவை, 5 குழந்தைகளுடன் 1978-ம் ஆண்டு வீட்டைவிட்டு வெளியேற்றினார். சிறிது காலம் மாத ஜீவனாம்சமாக அவருக்குக் கொடுத்துவந்த தொகையையும் நிறுத்திவிட்டார்.

இதையடுத்து, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 125-வது பிரிவின்படி கணவரிடமிருந்து மாதம் 500 ரூபாய் ஜீவனாம்சம் பெற்றுத்தரும்படி இந்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார் ஷா பானு. இஸ்லாமிய ஷரியத் சட்டப்படி தலாக் சொல்லி விவாகரத்து அளிக்கப்பட்ட மனைவிக்கு, "இதத்" காலத்துக்கு (3 மாதங்களுக்கு) கொடுக்கப்படவேண்டிய ஜீவனாம்சம் வழங்கப்பட்டுவிட்டது. திருமணத்தின்போது மணக்கொடையாக பெற்ற 3000 ரூபாய் மஹர் பணத்தை ஏற்கெனவே நீதிமன்றம் மூலமாக ஷா பானுவின் கணக்கில் செலுத்திவிட்டதால், அவருக்கு ஜீவனாம்சம் வழங்கவேண்டியது இல்லை என்று வாதிட்டார் கணவர்.

இதை ஏற்க மறுத்த நீதிமன்றம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், மதம் தாண்டி, இந்தியர் அனைவருக்கும் பொதுவானது என்றும், இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டம், இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை பாதிக்காது. எனவே, ஷா பானுவுக்கு மாதாமாதம் 25 ரூபாய் ஜீவனாம்சமாக வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தது.

25 ரூபாய் போதாது என்று மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார் ஷா பானு. மனுவை விசாரித்து ஜீவனாம்சத்தை 179 ரூபாய் 20 காசுகளாக உயர்த்தியது உயர் நீதிமன்றம். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார் அகமது கான். வழக்கை விசாரித்த 2 நீதிபதிகள், வழக்கின் முக்கியத்துவத்தை கருதி 5 நீதிபதிகள் குழுவுக்கு மாற்றினர்.
இதனிடையே, சில இஸ்லாமிய அமைப்புகள் இந்த வழக்கில் தங்களைத் தரப்பினராகச் சேர்த்துக் கொண்டன. 1985, ஏப்ரல் 23 அன்று, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, ஷா பானுவுக்கு ஆதரவாக வந்தது. அரசியல் அமைப்பு பிரிவு 44-ன் படி பொது சிவில் சட்டம் தேச நலனுக்கு உகந்தது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.

இந்தத் தீர்ப்பு பெண்கள் அமைப்பு மற்றும் நடுநிலையாளர்கள் மத்தியில் வரவேற்பையும், இஸ்லாமிய அமைப்புகளிடம் எதிர்ப்பையும் பெற்றது. தங்கள் மதச்சட்டத்தில் தலையிடுவதாக இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் இறங்கின. அன்றைக்கு மத்தியில் ஆண்டுகொண்டிருந்த காங்கிரஸுக்கு நெருக்கடி அதிகமானது.

1986-ல், ஷா பானு வழக்கின் தீர்ப்பை செல்லாததாக்க முஸ்லிம் பெண்கள் (மணமுறிவு உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 1986 என்ற சட்டத்தை இயற்றியது காங்கிரஸ் அரசு. இச்சட்டத்தின்படி, விவாகரத்து அளிக்கப்பட்ட மனைவிக்கு, இந்தக் காலத்துக்கு (3 மாதங்களுக்கு) மட்டும்தான் ஜீவனாம்சம் கொடுக்கப்படவேண்டும். தலாக் செய்யப்பட்ட பெண்ணின் உறவினர்களில் (கணவரைத் தவிர்த்து), யார் அந்தப் பெண் இறந்த பிறகு அவளுடைய சொத்துக்கு வாரிசுதாரர் ஆகிறார்களோ, அவர்கள் அந்தப் பெண்ணுக்கு ஜீவனாம்சம் வழங்கும்படி நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கலாம். அப்படிப்பட்ட உறவினர்கள் யாரும் இல்லை என்றாலோ அல்லது இருந்தும் ஜீவனாம்சம் வழங்கக்கூடிய சூழ்நிலையில் அவர்கள் இல்லை என்றாலோ, அந்தப் பெண்ணுக்கு வக்ஃப் வாரியம் ஜீவனாம்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவிடலாம் என்றெல்லாம் சொன்னது புதிய சட்டம்.

இந்த நிபந்தனைகள், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 125-வது பிரிவுக்கு முற்றிலும் முரணாக அமைந்தததோடு, கணவனால் தலாக் செய்யப்பட்ட இஸ்லாமியப் பெண்கள், மற்ற மதத்தைச் சேர்ந்த பெண்கள் போன்று ஜீவனாம்சம் பெற வழியில்லாமலும் போனது. இந்தச் சட்டம் இஸ்லாமிய அமைப்புகளால் வரவேற்கபட, பெண்கள் அமைப்புகள் மற்றும் நடுநிலையாளர்கள் எதிர்த்தனர்.
இந்தச் சட்டம் அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமைகளுக்கு எதிரானது. எனவே, இதை ரத்து செய்ய வேண்டுமென லத்திப் என்பவர் 2001-ல் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இவர், ஷா பானு வழக்கில் அவருக்கு வழக்கறிஞராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முடிவில், முஸ்லிம் பெண்கள் (மணமுறிவு உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 1986 சட்டம் செல்லும் என தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அதனுடன் கீழ்க்காணும் விளக்கத்தையும் சொன்னது...

‘முஸ்லிம் பெண்கள் (மணமுறிவு உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 1986 சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 125 வது பிரிவுக்கு எதிரானது அல்ல. ஒரு முஸ்லீம் கணவர், விவாகரத்து செய்த மனைவியின் எதிர்காலத்துக்கு, நியாயமான ஏற்பாடு, அவரது பராமரிப்பு செலவுகள் உட்பட, செய்ய வேண்டும். விவாகரத்து செய்த மனைவி, மறுமணம் செய்துகொள்ளும்வரை, அவரைப் பராமரிக்கக் கடமைப்பட்டவர் கணவர்’' என்று விளக்கமாகப் பேசிய ரோஜா,

''தற்போது, ஜீவனாம்சம் கோரும் இஸ்லாமியப் பெண்கள் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 125 வது பிரிவின்படியோ அல்லது முஸ்லிம் பெண்கள் (மணமுறிவு உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 1986 சட்டத்தின் படியோ மனு செய்யலாம். ஆனால், நடைமுறை வசதி கருதி, பெரும்பாலும் குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 125 வது பிரிவின்படிதான் இஸ்லாமியப் பெண்கள் நீதிமன்றத்தில் ஜீவனாம்சத்துக்காக மனுசெய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது’’ என்று சொன்னார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close