Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எங்கள் ஆட்சியில் தலித்துகள் மீதான தாக்குதல் குறைந்திருக்கிறது- நரேந்திர மோடி

குஜராத்தில், பசுவதை தடுப்பு ஆர்வலர்கள் சிலர் பொது இடத்தில் தலித் இளைஞர்களை அடித்து உதைத்த சம்பவம் நாடெங்கும் பெரும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியது. ஏற்கெனவே தலித் விரோத சக்தியாக மத்திய அரசையும் மோடியையும் குற்றம்சாட்டி வரும் நிலையில், உனா விவகாரம் இப்பிரச்னையை மேலும் அதிகரித்தது.
 
ஆனாலும், இதுவரையிலும் இவ்விவகாரத்தில் நேரடியாக பதில் சொல்லவில்லை பிரதமர். இந்த நிலையில், சிலநாட்களுக்கு முன், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்துப் பேசிய மோடி, "நாங்கள் நாட்டின் முன்னேற்றத்தில்தான் அக்கறை கொண்டிருக்கிறோம். அது இந்த நாட்டு மக்களுக்குத் தெரியும். முந்தைய ஆட்சியை ஆதரித்தவர்களும், இந்த ஆட்சிக்கு எதிராக இருப்பவர்களும்தான் இப்படியான பிரச்னைகளை எழுப்புகிறார்கள். அவர்களுக்கு முன்னேற்றம்தான் பிரச்னை. அதனால்தான் எல்லாவற்றையும் அரசியலாக்குகிறார்கள்.
 
சில வன்முறைகளை பொறுத்தவரை எவ்வித பாரபட்சமும் இன்றி அது கண்டிக்கப்பட வேண்டியதே.  ஆனால் குறிப்பாக ஒருசில குற்றங்களில் மட்டும் 'என் மீது தவறு' என ஏன் குற்றம் சுமத்துகிறார்கள்? அவ்வாறு செய்வதால் அவர்களுக்கு என்ன கிடைத்துவிடப் போகிறது? தலித்துகள் மீதான ஒடுக்குமுறைகளும்,பழங்குடியினர் மீதான வன்முறைகளும் சென்ற ஆட்சியைவிட எங்கள் ஆட்சியில் குறைந்திருக்கிறது. ஆனாலும் இப்படி ஒப்பிட்டுச் சொல்வதால் தீர்வு கிடைத்துவிடப்போவதில்லைதான். நமது நாடு பல பண்பாடுகளையும் நாகரிகங்களையும் கடந்து வந்துள்ளது. இதனிடையே பல பிரச்னைகளையும் ஒதுக்கிவிட்டே கடந்து வந்துள்ளது. ஒதுக்கப்பட்ட  அத்தனையுமே சமூகப் பிரச்னைகள். சமூகப் பிரச்னைகளுக்கு அரசியல் முலாம் பூசுவது சமூகத்தை சீர்கேடாக்கும். அந்த சீர்கேட்டைத்தான் இவர்கள் செய்துவருகிறார்கள். நான் அம்பேத்கரின் 125-வது பிறந்தநாளைக் கொண்டாடியதையும் ஐ.நா சபையில் உள்ள 102 நாடுகளும் அவரது பிறந்தநாளைக் கொண்டாடியதையும்கூட அவர்கள் எதிர்க்கிறார்கள்.
 
நான் அவர்களிடமும் என் கட்சியைச் சேர்ந்தவர்களிடமும் கூறிக்கொள்வதெல்லாம் ஒன்றுமட்டும்தான். மீடியா முன்னிலையிலும் பொது இடத்திலும் சாதி பேசாதீர்கள். பிறகு மக்களுக்கு பதில் சொல்ல வேண்டியது நாம்தான். சமூகப் பிரச்னைகளுக்கு அரசியல் புலம் தேடாதீர்கள். பல ஆயிரம் வருடங்களாக இழைக்கப்படும் அநீதியில் மேலும் சில காயங்கள் ஏற்பட்டாலும் அது பெரும் பிரச்னையே. நமது நோக்கம் காயம் ஏற்படாமல் தவிர்ப்பது. அது மட்டுமே சமூகத்தை ஒன்றுபடுத்தும்" என்று சொல்லியிருக்கிறார்.               
உத்திரப் பிரதேசம், குஜராத், கர்நாடகா என பாரதிய ஜனதா கட்சி பலமாக இருக்கும் மாநிலங்களில் அடுத்தடுத்து தேர்தல் வரவிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில், மோடியின் இந்த பதில் கட்சியின் உள்ளேயும் வெளியேயும் பரபரப்பையும் கவனத்தையும் ஒருசேர ஏற்படுத்தியிருக்கிறது!               
 
-ஐஷ்வர்யா 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ