Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காலணி வீச்சு... பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் மீது பாயும் ராகுல் காந்தி!

லக்னோ: காலணி வீசுவது போன்ற சம்பவங்கள் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ்.சுக்கு உரியவை என்று ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார்

உத்தரபிரதேச சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. 25 ஆண்டுகளுக்கு மேலாக உத்தரபிரதேசத்தில் ஆட்சியை இழந்துள்ள காங்கிரஸ் கட்சி, இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று அரசு அமைக்க வேண்டும் என்று தீவிரமாக களமிறங்கி உள்ளது.

இதற்காக காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, உத்தரப் பிரதேசத்தின் தியோரியா பகுதியில் இருந்து கடந்த 6-ந் தேதி டெல்லி நோக்கி 2,500 கி.மீ. தூரத்துக்கு மகா யாத்திரை மேற்கொண்டுள்ளார். இந்த பேரணியின்போது, மாநிலம் முழுவதும் மக்களை சந்தித்து அவர் ஆதரவு திரட்டி வருகிறார். விவசாயிகளுக்கு ஆதரவாக இந்த பேரணியை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, ஆங்காங்கே விவசாயிகளுடன் கலந்துரையாடல் கூட்டங்களையும் நடத்தி வருகிறார்.

இந்த பேரணி நேற்று லக்னோ மண்டலத்துக்கு உட்பட்ட சீதாபூரை அடைந்தது. ராகுல் காந்தி திறந்த வேனில் நின்றபடி பேரணியாக சென்று கொண்டிருந்தார். அப்போது, சீதாபூரில் இருந்து சிறிது தூரம் பேரணி சென்ற நிலையில், சாலையோரம் நின்றிருந்த இளைஞர் ஒருவர், திடீரென தனது காலணியை (ஷூ) கழற்றி ராகுல் காந்தியை நோக்கி வீசினார்.

ஆனால், அதிர்ஷ்டவசமாக அந்த ‘காலணி’ ராகுல் காந்தி மீது விழவில்லை. உடனே போலீசார், காலணி வீசிய அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அப்போது, அவரது பெயர் ஹரியோம் சர்மா என்றும், அருகில் உள்ள சாஸ்திரி நகரை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.

இது தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், ஹரியோம் சர்மாவுக்கு அரசியல் தொடர்பு எதுவும் இல்லை என்று தெரியவந்ததாக போலீசார் கூறினர். எனினும் அவரிடம் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் பேரணியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டதுடன், உத்தரபிரதேச காங்கிரசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து ராகுல் காந்தி கூறுகையில், ''காலணி வீசுவது போன்ற சம்பவங்கள் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வுக்கு உரியவை. இந்த யாத்திரையை சீர்குலைப்பதற்கான முயற்சி இது. ஆனால், அவர்களுக்கு நான் பயப்படமாட்டேன். நான் திரும்பி போகவும் மாட்டேன். என்னிடம் அன்பும், சகோதரத்துவமுமே உள்ளது. அனைத்து விதமான வெறுப்புணர்ச்சியும் அவர்களிடம் உள்ளது" என்று ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜனதா மீது ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார்.

 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ