Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அப்பாடா.... இந்தியாவில் இவர்களுக்கென ஒரு கழிப்பறை கிடைத்துவிட்டது !

ரு கழிப்பறை, ஒரு குளியல் அறையைக் கட்டிக் கொடுப்பது ஒரு சாதனையா? அதுவும், ஒரு பேரூராட்சி சார்பில் கட்டித் தருவது சாதனையாக கருதப்படுமா? அதுவும், விண்வெளிக்கு ‘டஜன்’ கணக்கில் ராக்கெட் அனுப்பும் தேசத்தில், கழிப்பறை கட்டுவதெல்லாம் ஒரு சாதனையா? என ஆயிரம் கேள்விகளை எழுப்பலாம். ஆனால், ஓமலூர் பேரூராட்சி செய்தது சாதனைதான் என்பதில் சந்தேகமே இல்லை. ஏனென்றால், அங்கு அமைக்கப்பட்டுள்ள கழிப்பறையும், குளியல் அறையும் திருநங்கைகளுக்காக கட்டப்பட்டது. 

68 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில், திருநங்கைகளை சகமனிதர்களாகப் பார்க்கவே நாம் இன்னும் பழகவில்லை; மனதளவில் அதை யாரும் முழுமையாக ஏற்கவில்லை. திருநங்கைகளை கேலியாக, அருவெறுப்பாக, சந்தேகமாக அல்லது தவறாகப் பார்க்கும் மனோபாவம்தான் எல்லோரிடமும் இன்னும் இருக்கிறது. படித்தவர், படிக்காதவர், குழந்தைகள், சிறுவர், மூத்தவர் என்று எந்தப் பேதமும் அதில் கிடையாது. இதில், அவர்களுக்கு என்று தனிக்கழிப்பறை, குளியல் அறை என்பதை கற்பனையே செய்ய முடியாது. பொது இடங்களில், சாதரணமான பெண்களுக்கே, இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்கான இடத்தைத் தேடுவதில் ஆயிரம் சிக்கல்கள் உண்டு. திருநங்கைகளுக்கு என்றால், அது சித்ரவதைதான். அரிதாக பொதுஇடங்களில் இருக்கும் பொதுக்கழிப்பிடங்களில், ஆண்களின் கழிப்பறைகளை திருநங்கைகள் பயன்படுத்தமுடியாது. பயன்படுத்த நினைத்தால், அதனால் ஏற்படும் அபாயங்களை யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை; பெண்களின் கழிப்பறைப் பக்கம்கூட அவர்களை யாரும் அனுமதிப்பதே இல்லை. இந்தச் சித்ரவதையை, பல ஆண்டுகளாக அனுபவித்துக் கொண்டிருந்த, திருநங்கைகளுக்குத்தான் புரியும். 

சேலம் மாவட்டம், ஓமலூர் பேரூராட்சி நிகழ்த்தி இருக்கும் சாதனையின் அளவு. ஏனென்றால், இந்தியாவின் தலைநகர் டெல்லியில் திருநங்கைகளுக்கு தனிக் கழிப்பிடம் கிடையாது; திருநங்கைகள் அதிகம் வசிக்கும் மும்பையில் கிடையாது; நாட்டின் மிகப்பெரிய நகரான கொல்கத்தாவில் கிடையாது. வேறு எந்த மாநிலமும் இதுவரை சிந்திக்கவே இல்லாத விஷயத்தை, தமிழகம் சாத்தியப்படுத்தி உள்ளது.இதுகுறித்து, சேலம் மாவட்டம் ஓமலூர், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தின் கீழ் செயல்படும் திருநங்கைகள் நலச்சங்கத் திட்ட மேலாளர் குமாரிடம் பேசினோம்.

 ‘பெற்றோர்களை புறக்கணிக்கும் பரிதாபத்துக்கு உரியவர்கள் திருநங்கைகள். அவர்கள் வாழ்வில் படும் துன்பங்கள் கொடூரமானவை. அதில் அவர்கள் கழிப்பிடங்களைத் தேடி அலைவது என்பது உச்சக்கட்ட கொடுமை. இதையடுத்து சேலம் திருநங்கைகள் நலச்சங்கத்தின் சார்பாக கடந்த மாதம் நடந்த மக்கள் குறைத்தீர்ப்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனுக்கொடுத்தோம். மனுவை வாங்கிய ஆட்சியர் சம்பத், ஓமலூர் தேர்வு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணிக்கு மனுவை அனுப்பிவைத்தார். அவரும் உடனடியாக இந்த திட்டத்தை செய்துதருவதாக உறுதியளித்தார். இதனையடுத்து முறையாக தீர்மானம் நிறைவேற்றி, இடத்தை தேர்வு செய்து பணிகளைத் தொடங்கினார். அதோடு, கூடுதலாக குளியல் அறையும் கட்டித்தருவதற்காக ஏற்பாடு செய்தார். இப்போது நாங்கள் நிம்மதி அடைந்து இருக்கிறோம். தற்போது உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால், திறப்பு விழாவிற்காக காத்திருக்கிறோம்’ என்றார்.

திருநங்கைகள் நலச்சங்கத்தின் தலைவர் பூஜா, ‘‘இந்தியாவிலேயே அதிகளவு வாழக்கூடிய மும்பையில் கூட எங்களுக்கென்று தனியாக பாத்ரூம் வசதி கிடையாது. தமிழ்நாட்டில் பல்லாயிரம் திருநங்கைகள் கூடும் கூவகம் கூத்தாண்டவர் கோவிலில் கூட பாத்ரூம் வசதி இல்லை. தற்போது எங்களுக்கென்று ஓமலூர் பேருந்து நிலையத்தில் பாத்ரூம் வசதி செய்து கொடுத்திருப்பதை சமூக மாற்றத்திற்கான அடையாளமாகப் பார்க்கிறேன்’’ என்றார்.

ஓமலூர் பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணியிடம் பேசிய போது, ‘‘ கலெக்டர், பேரூராட்சி தலைவர், வார்ட் கவுன்சிலர்கள், திருநங்கைகள் நலச்சங்கத்தின் நிர்வாகிகளின் பங்களிப்போடு, இதில் என்னுடைய பங்களிப்பும் இருக்கிறது. கலெக்டர் மனுவை எனக்கு அனுப்பியதும், அது குறித்து விசாரித்தேன். ஓமலூர் தேர்வு நிலை பேரூராட்சியில் 30 கிராமங்கள் இருக்கின்றன. 12 ஆயிரம் பேர் வசிக்கிறார்கள். சுமார் 80-க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள் இருக்கிறது. ஒரு நாளைக்கு ஓமலூர் பேருந்து நிலையத்திற்கு மட்டும் ஒரு லட்சம்பேர் வந்து செல்கிறார்கள். இந்தப் பகுதியில், 200-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசிக்கிறார்கள். 300-க்கும் மேற்பட்ட திருநங்கைகள், ஓமலூர் பேருந்து நிலையத்திற்கு நாள்தோறும் வந்து செல்லுகிறார்கள் என்ற தகவல்கள் கிடைத்தன.

அதையடுத்து பேரூராட்சி தலைவரிடம் சொல்லி முறையாக தீர்மானம் நிறைவேற்றி ஓமலூர் பஸ் நிலையத்தில் திருநங்கைகளுக்கான கழிப்பிட வசதி, குளியல் அறையை கட்டி இருக்கிறோம். கட்டி முடித்த பிறகு தான் இந்தியாவிலேயே இங்கு கட்டப்பட்டது தான், திருநங்கைகளுக்கான முதல் கழிப்பறை என்று தெரிந்தது. இது மகிழ்ச்சிக்கான விஷயம் அல்ல; இந்தியா போன்றதொரு மிகப்பெரிய நாட்டில், இயற்கை உபாதையைக் கழிப்பதற்கு மனிதர்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் அல்லாடிக்கொண்டிருப்பது எத்தனை வேதனையான விஷயம். எனவே, ஓமலூரில் சாத்தியப்பட்டதை, மற்ற இடங்களிலும் சாத்தியப்படுத்த அரசாங்கம் உதவ வேண்டும். உள்ளாட்சித் தேர்தல் முடிந்ததும் விரைவில் ஆட்சியர் தலைமையில் திறப்புவிழா நடத்த இருக்கிறோம்’ என்றார்.

- வீ.கே.ரமேஷ், ஜோ.ஸ்டாலின்
படங்கள்: க.தனசேகரன். 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ