Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டெல்லியில் 'அவள்' ஆட்டோ வந்தது ஏன்?

டெல்லி... இந்தியாவின் தலைநகரம். பெண்களுக்கு நரகம். நினைத்துக்கூட பார்க்க முடியாத அவலங்களை பெண்களுக்கு எதிராக அசாத்தியமாக நிகழ்த்தும் பூமி. இத்தகைய நகரில்  ஆட்டோ ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த ஆட்டோவில் ஏறினால் பெண் தலைவர்களின் புகைப்படங்கள்தான் உங்களை வரவேற்கும். மணிப்பூர் இரோம் ஷர்மிளா பார்த்து  சிரித்துக் கொண்டேதான் நீங்கள் இருக்கையில் அமர வேண்டும். பக்கவாட்டில் இருந்து கேரளாவின் தலித் ஆட்டோ டிரைவர் சித்ரலேகா உங்களை வரவேற்பார். ஆட்டோ முழுவதுமே  பெண் தலைவர்களின் புகைப்படங்களும் பெண் சுதந்திரத்துக்காக போராடியவர்களின் படங்கள்தான் அலங்கரிக்கின்றன.

ஆட்டோவுக்கு அழகையும் வாடிக்கையாளர்களுக்கு  ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ள இந்த ஐடியாவும் பெண் ஒருவரின் மனதில் உதித்ததுதான்.  '' ஆண்களுக்கு பெண்கள் நிகர்' என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கை உண்டு. இதில் இடம் பெற்றுள்ள தலைவர்களின் வரைபடங்கள் அனைத்துமே ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து பெண் சுதந்திரத்துக்காக போராடியவர்கள்தான். முதலில் இது போன்ற புகைப்படங்களை வரைந்து சமூக வலைதளங்களில் வெளியிட்டேன். அதற்கு பெரியதாக வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால், ஆட்டோவில் வரைந்த போது, எக்கச்சக்க வரவேற்பு கிடைத்தது'' என்கிறார் இதற்கு அடித்தளமிட்ட டிசைனர் ருத்திகா சுசார்லா.

டெல்லியில் ககன் தாக்குர் என்பவரின் ஆட்டோவில்தான் முதன் முதலாக பெண் தலைவர்களின் வரைபடங்கள் இடம் பெற்றன. இப்போது ககன் தாக்குரின் ஆட்டோவைப் பார்த்தால், பெண்கள் யோசிக்காமல் வந்து ஏறிக் கொள்கின்றனராம்.  இவரது ஆட்டோ நின்றால், வேறு ஆட்டோவில் பயணிக்க பெண்கள் விரும்புவது இல்லையாம். ககன் தாக்குர் 'ஏன் எனது ஆட்டோவில் வர விரும்புகிறீர்கள் என்று கேட்டால், பாதுகாப்பாக உணர்வதாக பதில் வருகிறதாம்.

அனைத்து மெட்ரோ நகரங்களிலுமே ஆட்டோ டிரைவர்கள் மக்களிடையே அடாவடியாக நடந்து கொள்கிறார்கள் என்ற எண்ணம் பொதுவாக இருக்கிறது. 'ஏய்  வீட்டுல சொல்லிட்டு வந்துட்டியா ' அப்படிங்கற வார்த்தைல இருந்து... அத்திப் பூத்தாற் போல், 'பார்த்து இறங்குமானு' சொல்லும் சென்னை ஆட்டோக்களை நாமும் தினசரி கடந்து கொண்டுதான் இருக்கிறோம். டெல்லியை பொறுத்தவரை, வாடிக்கையாளர்களிடம் ஆட்டோ ஓட்டுநர்கள் அன்பாக நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காக 'மானஷ்' என்ற அமைப்பு போராடி வருகிறது. ஆட்டோ ஓட்டுநர்கள் மத்தியில் அதற்காக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

மானஷ் அமைப்புடன் மும்பையைச் சேர்ந்த டாக் ஷி ஃபேஃப்ரிக் நிறுவனமும் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. இந்த ஆட்டோவைப் போலவே மும்பையில் சில டாக்சிக்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்த வரை படங்கள் இடம் பெற்றுள்ளன. இது குறித்து மானஷ் அமைப்பைச் சேர்ந்த மன தத்துவ நிபுணர் நவீன் குமார் கூறுகையில், ''ஆட்டோக்களில் இது போன்ற தலைவர்களின் படங்கள் இடம் பெறும் போது, அதன் ஓட்டுநர்களுக்கு நமது வாடிக்கையாளர்களின் பாதுகாப்புக்கு நாம்தான் உத்திரவாதம் என்ற பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும். படிப்படியாக டெல்லியில் இன்னும் பல ஆட்டோக்களில் பெண் தலைவர்களின் புகைப்படங்கள் இடம் பெறும்'' என தெரிவித்தார்.

'அவள் ஆட்டோ' குறைந்தபட்ச மாற்றத்தையாவது ஏற்படுத்தினால் சந்தோஷம்தான்!

-எம். குமரேசன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ