Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காவிரி விவகாரம்: இதுவரை நடந்தது என்ன? ஒரு அப்டேட்...! #2MinRead

காவிரி விவகாரம் தொடர்பாகக் கடந்த செவ்வாய் அன்று கூடிய உச்ச நீதிமன்றம், அதன் மீதான தனது அடுத்த விசாரணை தொடங்கும்வரை, ‘கர்நாடகம் இரண்டாம்கட்டமாக விநாடிக்கு 6,000 கன அடி நீரைத் தமிழகத்துக்குத் திறந்துவிட வேண்டும்’ என்று ஆணை பிறப்பித்தது. இதற்குப் பதிலளித்த கர்நாடகம், மக்களுக்குக் குடிக்கும் நீர் மட்டுமே இருக்கும் சூழலில் நீர் திறந்துவிடுவது இயலாத காரியம் என்று கூறி மறுத்தது. தற்போது, இந்த விவகாரத்தை விரைந்து முடிக்கும் சூழலில் இரண்டு மாநிலங்களும் உள்ளதால் இதுதொடர்பான இரு தரப்பு உயர்மட்ட குழுக் கூட்டம் இன்று நடைபெற இருக்கிறது. இதுநாள்வரை இந்த விவகாரத்தில் என்ன நிகழ்ந்துள்ளது.? ஒரு ஷார்ட் அப்டேட்.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டிய கர்நாடகா, ‘வியாழன்வரை தமிழகத்துக்கு 6,000 கன அடி நீர் திறந்துவிடுவது சாத்தியமற்றது’ என உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகக் கொடிபிடித்தது.

செப்டம்பர் 23 அன்று கூடிய கர்நாடக சட்டப்பேரவையில், ‘தன் மக்களுக்கான குடிநீர் தேவையை காரணம் காட்டி தமிழகத்துக்கு நீர் திறந்துவிட முடியாது’ என தீர்மானம் நிறைவேற்றியது.

‘இங்கு எல்லோருமே சட்டத்துக்குக் கட்டுப்பட்டாக வேண்டும்’ என்கிற சூழலில், தனது தீர்மானத்தை ஒதுக்கிவிட்டு ‘தமிழகத்துக்கு நீர் திறந்துவிட வேண்டும்’ என உச்ச நீதிமன்றம் பதிலளித்தது.

மேலும், இந்த விவகாரத்தில் ஏற்கெனவே தேவையான அளவு உச்ச நீதிமன்றம் விவாதம் செய்துவிட்டதால், மத்திய அரசு தலையிட்டு இந்த விவகாரத்தை விரைந்து முடிக்குமாறு நீதிமன்றம் வலியுறுத்தியது.

இந்த நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதால், இரு மாநில அமைச்சர்கள் கூட்டத்தில் அவருக்குப் பதிலாக மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் பழனிச்சாமி பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டது.

காவிரி விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே செப்டம்பர் 12 அன்று கலவரம் வெடித்ததால், மீண்டும் பிரச்னை ஏற்படாமல் இருக்க வரும் 30-ம் தேதி நள்ளிரவு வரை 144 தடை சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

மத்திய அமைச்சகம் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து இந்தப் பிரச்னைக்கான நிரந்தரத் தீர்வை எட்ட வேண்டும் என உச்ச நீதிமன்றம் பணித்தது.

செப்டம்பர் 12 மற்றும் 13 அன்று நடந்த கலவரம், கர்நாடகப் பொருளாதாரத்தைப் பெருத்த அளவில் பாதித்தது.

இன்று (29-09-16) மத்திய அமைச்சர் உமா பாரதி தலைமையில், இருமாநில முதல்வர்கள் மற்றும் நீர்வளத் துறை அமைச்சர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது.

கர்நாடகம், புதுவை, கேரளா, தமிழ்நாடு என நான்கு மாநிலங்கள் பங்கிட்டுக்கொள்ளும் நீரை, தமிழகமும் கர்நாடகமும் மட்டும் ஆண்டாண்டு காலமாக தொடர்ந்து அரசியலாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

- ஐஷ்வர்யா

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ