Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

போராளிகள் ஆக வேண்டாம். கொலைகாரர்கள் ஆகாமல் இருப்போம்! #WildLifeWeek

"ஒரு குழி தோண்டி, செடி நட்டு, தண்ணீர் ஊற்றி, அதை வளர்த்து உறுதியான மரமாக்காத வரையில்... நீங்கள் பேசிக் கொண்டு மட்டுமே இருக்கிறீர்கள். வேறெதுவும் செய்யவில்லை..."      - வங்காரி மாத்தாய். 

 

அது ஏதோ ஒரு காடு... ஏதோ ஒரு ஊர்வன உயிரினம். ஏதோ ஓர் இடத்தில் ஊர்ந்து சென்று கொண்டிருக்கிறது. அது கருவுற்றிருந்தது... அதன் வயிற்றில் இந்த உலகை வெகு விரைவில் காணும் ஆசையோடு சில கருக்கள் இருந்தன. அது ஒரு கல்லைக் கடந்தது... அடுத்து அங்கு இன்னொரு பொருள் இருந்தது... அது உடைபட்ட கண்ணாடி சில்லுகள் என்பது அதற்கு தெரியாது. அந்தக் கல்லை எப்படி கடந்ததோ... அதே போல் இந்தக் கண்ணாடியையும் கடக்க முற்பட்டது. ஒரு நொடி தான்... அந்தக் கண்ணாடி சில்லு அதன் வயிற்றைக் கிழித்தெறிந்தது... அதன் கரு முட்டைகள் ரத்தத்தில் மிதந்தன. அந்த உயிரின் தலைமுறைத் தொடர்ச்சி அதோடு வேரறுக்கப்பட்டது. அந்தக் கண்ணாடி பாட்டிலை அங்கு உடைத்தது யாரோவாக இருக்க வாய்ப்பில்லை... நிச்சயம் நீங்களோ, நானோ தான்.

இந்த வாரம் " வன உயிரின பாதுகாப்பு " வாரமாக கொண்டாடப்படுகிறது. இந்திய வனங்களின் பரப்பளவு சுருக்கப்படுகிறது, காடுகள் அழிக்கப்படுவது குறித்து எத்தனையோ கணக்குகள் இருக்கின்றன. அதை வைத்து தான் வன அழிவை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை. குடிக்கும் தண்ணீர் நஞ்சானதில் இருந்து, சுவாசிக்கும் காற்றில் நச்சுத் தன்மை கலந்திருப்பது என, அனுதினமும் இயற்கைக்கு எதிராக நாம் செய்த துரோகத்திற்கான பலனை அனுபவித்துக் கொண்டுதானிருக்கிறோம். இந்த வருடம், " வன விலங்குகளுக்காக சேர்ந்து பணிபுரிவோம்" என்ற அடிப்படையில் "வன உயிரின பாதுகாப்பு" வாரம் கொண்டாடப்படுகிறது. 

தமிழகத்தில் 5 தேசியப் பூங்காக்கள், 15 வனவிலங்கு சரணாலயங்கள், 14 பறவைகள் சரணாலயங்கள் இருக்கின்றன. இவையனைத்தும் வனங்களையும், வன விலங்குகளையும் பாதுகாப்பதற்காக ஏற்படுத்தப் பட்டவை. 2013யில் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் சில சமூக ஆர்வலர்களின் கேள்விக்கு... "இந்தியாவில் தினம் 300க்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவிலான காடுகள் அழிக்கப்படுகின்றன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலக்கரிச் சுரங்கம், அனல் மின் நிலையம், நீர்த் திட்டங்கள் போன்ற காரணங்களுக்காக அரசு காடுகளை அழிக்கிறது. மேலும், ரெசார்ட்டுகள், பண்ணை வீடுகள் கட்டுவது என பணம்படைத்தோர் தங்கள் பங்கிற்கு காடுகளை அழிக்கின்றனர். 

" காடுகள் அழிவது குறித்து இன்னும் பேசிக் கொண்டே இருப்பதில் ஏதொரு பயனும் இல்லை. இனி தொடர் வேலைகளில் இறங்குவது தான் ஒரே வாய்ப்பு. கணக்கிற்காக மரம் நடுவது... காசிற்காக வனப் பாதுகாப்பில் ஈடுபடுவது போன்று நடிப்பது என அர்த்தமற்ற செயல்கள் ஒரு போதும் நம்மைக் காக்கப் போவதில்லை. நாம் நலமாக வாழ, நம் பிள்ளைகள் நலமாக வாழ வேண்டுமென்றால் வனங்களை மேம்படுத்த முடியாவிட்டாலும் கூட, அதை தொந்தரவு செய்யாமலாவது இருக்க வேண்டும். நம் வனங்களை மீட்க இங்கு எந்தவொரு மீட்பரும் இல்லை. காடுகளைக் காக்கவும், உருவாக்கவும் வல்லமை கொண்ட ஒரே இனம் ஆதிவாசிகள் தான். அவர்களை பல காரணங்கள் சொல்லி காட்டைவிட்டு வெளியேற்றுகிறோம். 10 மரங்களை வெட்டுவதை விட மோசமானது ஓர் பூர்வகுடியை காட்டில் இருந்து வெளியேற்றுவது... தனி மனிதர்கள் திருந்தினால் மட்டுமே மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு" என்று சொல்கிறார் கோவையைச் சேர்ந்த மருத்துவரும், இயற்கை ஆர்வலருமான டாக்டர் டால்ஸ்டாய். 

காடுகளைக் காக்கும் போராளிகளாக மாறாவிட்டாலும் பரவாயில்லை, வனங்களை ரணமாக்கும் "கொலைகாரர்களாக" மாறாமல் இருக்க இந்த "வன உயிரின பாதுகாப்பு" வாரத்தில் உறுதி கொள்வோம்.      

- இரா.கலைச்செல்வன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close