Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

2 ஆண்டுகளில் 32 நாடுகளைப் பின்னுக்கு தள்ளிய இந்தியா... எதில்... எப்படி?

லகப் பொருளாதார மையம் ஒவ்வொரு ஆண்டும் துறைகள் சார்ந்து உலக நாடுகளின் போட்டித் திறன் பட்டியலை வெளியிடும். அந்தப் பட்டியலின்படி 2016-17 அறிக்கையில் இந்தியா 39-ம் இடத்தைப் பிடித்திருக்கிறது. கடந்த 2015-16-ல் 55-வது இடத்தைப் பிடித்திருந்தது. 2014-15-ல் 71-ம் இடத்தில் இருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில் பொருளாதாரத்தில் கணிசமான அளவுக்கு முன்னேற்றம் கண்டு 32 நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி முன்னேறியிருக்கிறது. மொத்த மதிப்பெண் ஏழு என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்தியா 4.52 மதிப்பெண்கள் பெற்றுள்ளது.

மற்ற நாடுகள் எப்படி?

முதல் இரண்டு இடங்களில் ஸ்விட்சர்லாந்து, சிங்கப்பூர் நாடுகள் உள்ளன. அமெரிக்கா மூன்றாம் இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு பத்தாம் இடத்தில் இருந்த இங்கிலாந்து இப்போது ஏழாம் இடத்துக்கு முன்னேறி உள்ளது. ஜெர்மனி கடந்த ஆண்டை விட ஒரு இடம் சறுக்கி 5-ம் இடத்திலும், ஜப்பான் இரண்டு இடங்கள் சறுக்கி 8-ம் இடத்திலும் உள்ளது.

இந்தியா எப்படி முன்னேறியது?

தொழில்துறை, சேவைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏற்பட்ட சிறுசிறு மாற்றங்களால்தான் இந்தியா முன்னேற்றத்தை அடைய முடிந்தது. இதனால், முன்பைவிட அனைத்துத் துறைகளும் சற்று வளர்ச்சியடையத் தொடங்கின. ஹெல்த்கேர், அடிப்படைக் கல்வி ஆகியவை ஓரளவுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளன. 2007-ல் 62 வயதாக இருந்த வாழ்நாள், தற்போது 68 வயதாக உயர்ந்துள்ளது. சிசு இறப்பு 2007-ல் 1000 பேருக்கு 62 என்ற நிலையில் இருந்தது, தற்போது 37.9 ஆகக் குறைந்துள்ளது. தொடக்கக் கல்வி பெறுவோரின் சதவிகிதம் 93.1 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

அதேபோல் வளர்ச்சிக்கு மிக முக்கியமாக, தொழில் செய்ய ஏதுவான சூழலிலும் இந்தியா முன்னேறியிருக்கிறது. உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பட்டுள்ளன. நாடுகளுக்கிடையிலான கொள்கைகளும் எளிமைப்படுத்தப்பட்டு, புதுப் புது முதலீடுகள் வந்தவண்ணம் இருக்கின்றன.

வங்கித் துறை, நிதி நிறுவனங்கள் மற்றும் முதலீடு ஆகிய துறைகளில் ரிசர்வ் வங்கி மற்றும் சந்தைக் கட்டுப்பாட்டு ஆணையம் போன்ற அமைப்புகள் சிறப்பாகச் செயல்பட்டு வருவதன் மூலம் பெருமளவிலான பொருளாதாரக் குற்றங்கள் குறைக்கப்பட்டுள்ளதோடு நாட்டுக்கும் மக்களுக்குமான பெரும் நஷ்டங்களும் இழப்புகளும் கூட குறைந்துள்ளன. வரி அமல்படுத்தலில் மாற்றம், பட்ஜெட்டுகளில் மாற்றம் என அதிரடி மாற்றங்களும் நடந்துள்ளன.

இந்தியாவின் தனிநபர் ஜிடிபி, வாங்கும் திறன் அடிப்படையில் கடந்த எட்டு ஆண்டுகளில் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. 2007-ல் தனிநபர் வாங்கும் திறன் 3587 டாலராக இருந்தது. தற்போது 6599 டாலராக உயர்ந்துள்ளது. ஆனால் 2008-ல் உலக அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபிறகு நம்முடைய பொருளாதார வளர்ச்சி குறையத் தொடங்கியது. 2012-13 ஆண்டுகளில் மிகவும் குறைந்தது. அதன் பிறகு இந்தியா தனது பொருளாதார மற்றும் அரசியல் கொள்கைகளை மாற்ற வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானது. கடந்த இரண்டு ஆண்டுகளில் நடைபெற்ற மாற்றங்களின் விளைவாக 2014-லிருந்து இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சியை நோக்கி நகரத் தொடங்கியது. 2015-ல் சீனாவை முந்தி அந்த ஆண்டின் வேகமாக வளரும் சந்தையாக இந்தியா மாறியது.

மோடிதான் காரணமா?

இந்த வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் காரணம் மோடிதான் என்றால், பதில் சொல்வது மிகவும் சிரமமான காரியம். அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பல ஆண்டுகளாகவே நிலுவையில் இருந்த மாற்றங்கள்தான் பெரும்பாலும் இப்போது நிகழ்ந்துள்ளன. ஆனால் அதே சமயம், பிரதமர் மோடி பல நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து அந்நாட்டு பிரதமர்களையும் அரசியல் தலைவர்களையும் சந்தித்துப் பேசி வருவதால் ஓரளவுக்கு, பிற நாடுகளுடனான உறவில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளன. அதன் காரணமாக இந்தியாவுக்கு முதலீடுகள் கிடைத்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

- ஜெ.சரவணன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close