Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாலியல் வன்கொடுமை : ஒரு தந்தையின் ஆதங்கம்!

 

நாட்டில் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை அதிகரித்து வரும் நிலையில், பாலிவுட் கதாசிரியரும் படத்தயாரிப்பாளருமான ஃபரான் அக்தர், தனது மகள்களுக்கு ஒரு ஓபன் லெட்டர் எழுதியுள்ளார். இவருக்கு பதினாறு வயதிலும் ஒன்பது வயதிலும் இரு பெண் குழந்தைகள். மூத்த மகள் பதினாறு வயதை எட்டிய நிலையில், ஃபரான் அக்தர் கொட்டியுள்ள ஆதங்கம் அந்த கடிதம் வாயிலாக வெளிப்படுகிறது.

''ஒரு தந்தையாக  நானோ அல்லது எனது இடத்திலும் வேறு எந்த தந்தையாக இருந்தாலும் பாலியல் வன்புணர்வு போன்ற விஷயங்களை மகள்களிடம் விவாதிக்க விரும்பமாட்டார்கள். ஆனால், இப்போது நமது சமூகம் போய்க் கொண்டிருக்கும் சூழலில் இது குறித்த விவாதம் தேவையானதாகவே எனக்குத் தெரிகிறது. எனது அருமை மகளே...எனது தோழிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை குறித்து உன்னிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அந்த சம்பவம் நடக்கும்போது,  உனக்கு வயது பன்னிரென்டுதான் ஆகியிருந்தது. இப்போது நீ 16 வயதினை எட்டி விட்டாய். அதனால், உன்னிடம் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.

இளம் வக்கீலான அவளை அழகான சிரிப்பு கொண்ட அவளை எந்த பயமும் இல்லாமல் பாலியல் வன்புணர்வு செய்து கொலையும் செய்தது ஒரு கும்பல். ஒரு ஆட்டுக்குட்டி போல படுகொலை செய்யப்படவா அவள் பிறந்தாள்... வளர்ந்தாள்?. அவளது கண்ணீருக்கு இந்த நாட்டில் நீதி கிடைத்ததா?. நாம் இந்த விஷயத்தில் மாற்றத்தைக் காண வேண்டும் . ஒவ்வொன்றையும் சீரமமைக்க வேண்டும். சமூகத்தின் சிந்தனைகள் மாற வேண்டும். இந்த விஷயத்தில் என்ன பிரச்னை வந்தாலும் சமரசம் செய்து கொள்ளாதே நீ எந்த மாதிரியான சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறாய் என்பதை உணர்ந்து நடந்து கொள்.

இப்போதே உனக்குத் தலைச் சுற்றலாம்.  இந்த நாடு  பெண்களை இவ்வளவு கேவலமாக நடத்துகிறதா என சிந்திக்கத் தொடங்கியிருப்பாய். பெற்றோரான எங்களால் முடிந்தவரை மாற்றத்தை விதைக்க முயற்சிக்கிறோம். இரு பாலாரும் சமமானவர்கள் என்பதை உணர்த்த பாடுபடுகிறோம். சிறுவர் சிறுமியர்களுக்குள் எந்த வேறுபாட்டையும் விதைக்காமல் வளர்க்க முயற்சிக்கிறோம். குட் டச், பேட் டச் குறித்து கூட ஓப்பனாக விவாதிக்கிறோம். யாராவது உன்னைத் தொடுவதில் அசவுகர்யமாக உணர்கிறாய் என்றால், அதனை மீண்டும் ஒரு முறை அனுமதிக்காதே. அந்த மனிதரிடம் 'இந்த மாதிரியில்லாம் தொடாதீங்க. எனக்கு பிடிக்கவில்லை' என்று நெற்றிப் பொட்டில் அடித்தாற் போல கூறி விடு. ஏனென்றால்... என் மகளே நீ சிறியவள். உன்னிடம்தான் எளிதாக சாதித்துக் கொள்ளலாம் என கருதலாம். ஒரு தந்தையாக நான் அணைப்பதை நீ விரும்பவில்லை என்பதை நான் உணர்ந்தால் கூட, உன்னைத் நான் தொட மாட்டேன். உன் தந்தையாகிய நானே இவ்வளவு யோசிக்கும்போது அந்நியர்களிடம் நீ எப்படி நடந்து கொள்ள வேண்டும். இது உனது உடல். உன்னைத் தொடுவதில் இருந்து அரவணைப்பதில் இருந்து ஒவ்வொன்றையும் நீதான் முடிவு செய்ய வேண்டும்.

உனது ஃபேஸ்புக் பதிவுகளை நான் பார்க்கிறேன்.  அதில் இருந்து நீ அதிக சுதந்திரத்தை விரும்புகிறாய். என்பதை புரிந்திருக்கிறேன்.  உண்மையான சுதந்திரத்தை அடைய விரும்புகிறாய் என்றே நினைக்கிறேன். நீ விரும்பிய ஆடையை உடுத்தக் கூட உரிமை இல்லையா.. என்ற ஆதங்கம் உனக்குள் இருக்கிறது உனக்கென்று தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ள ஆசைப்படுகிறாய். ஆனால் ஒரு விஷயத்தை புரிந்துகொள், நாம் பாதுகாப்பற்ற ஆண்- பெண் ஏற்றத் தாழ்வுகள் நிறைந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாங்கள் ஒரு போதும் 'இந்த உடை உடுத்தாதே... ' 'அங்கே போகாதே இங்கே போகாதே' என்று சொல்லவில்லை. சொல்லவும் போவதில்லை. உனது கூந்தலைக் கூட  உன் விருப்பப்படி அழகுபடுத்திக் கொள்ளலாம். எனது மகள் தன்னம்பிக்கையுடம் சுயமரியாதை கொண்ட சுதந்திரமான பெண்ணாக வளர்வதையே நான் விரும்புகிறேன். பாலிவுட் படங்கள் குறித்து நீ என்னிடம் பேசலாம். பெண்களை சினிமாக்களில் போகப் பொருளாக சித்தரிக்கிறீர்களே என கேள்வி எழுப்பலாம்.  உனது ஒவ்வொரு கேள்விகளுக்கும் நான் பதில் தர முயற்சிப்பேன். பெண்கள் உரிமை, ஆண் -பெண் பேதம் குறித்து என்னிடம் நீ கருத்துக்களை பரிமாறினால் நான் இன்னும் அளவற்ற மகிழ்ச்சி அடைவேன்.

பாலிவுட்டிலுமே பேதம் இருக்கிறது. நான் என் தலையை மண்ணுக்குள் புதைத்து வைத்து விட்டு பேசி விட முடியாது. நானும் உன் அத்தை ஸோயாவும் கூட அரைவேக்காட்டுத்தனமான காட்சிகளையும் அநாகரிகமாக காட்சிகள் குறித்து விவாதிப்பது உண்டு. பெண்களின் உடலுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பிற விஷயங்களுக்கு அளிப்பதில்லை என்ற குற்ற உணர்வு எனக்கும் உண்டு. ஒரு படத் தயாரிப்பாளனாக அதுபோன்ற காட்சிகளை எடுப்பதில் உடன்பாடு இல்லைதான். கண்ணை மூடிக் கொண்டு சினிமாவுக்காகத்தான் எடுக்கிறோம் என்றும் சொல்லி விட்டு ஒளிந்து விடவும் விரும்பவில்லை.  இந்தக் காட்சிகள் பார்வையாளனிடம் வேறுவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் உணராமல் இல்லை. என் அருமை மகளே... ஆக நானும் கூடத்தான் சுதந்திரமாக இல்லை. பேச்சு சுதந்திரத்துக்காக போராடுகிறேன். கிரியேட்டிவிட்டி சுதந்திரத்துக்காகப் போராடுகிறேன். எனது கருத்துக்களை சுதந்திரமாகச் சொல்ல இன்று வரைப் போராடிக் கொண்டிருக்கிறேன்.

நீ எதுவென்றாலும் என்னிடம் வெளிப்படையாக பேசு. எப்போது வேண்டுமானாலும் என்னை அழை. நீ வெளியே இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஒரு தந்தையாக நான் ரொம்பவே 'ஒரி 'செய்து கொள்கிறேன். வளர வளர  நீ என்னிடம் ஒரு நண்பனை காண்பாய் என நம்புகிறேன். உனது லட்சியங்களை நீ சுதந்திரமாக துரத்திக் கொண்டு செல்லலாம். நீ விரும்பிய உனது வாழ்க்கையை சுதந்திரமாக வாழலாம்.  எது பாதுகாப்பு என்று உனது அறிவுக்குத் தெரியும்.

சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் குறித்து உனக்கு இப்போது கோபம் எழலாம்.  ஏன் இவ்வளவு கோபம் வருகிறது என்று உனக்கே கூட வியப்பு ஏற்படலாம். மனித மிருகங்கள் குறித்து குழப்பம் வரலாம். ஆனால், எந்த சூழலிலும் ஒரு தந்தையாக நான் உன் பக்கத்தில் இருப்பேன்.

மீண்டும் ஒரு முறை சொல்கிறேன்... 'நீ எந்த மாதிரியான சமூகத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறாய்' என்பதை மட்டும் நினைவு வைத்துக் கொள்...!''

- எம். குமரேசன்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close