Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்த 10 விஷயங்களைத் தவிர்த்தால்... வளமாகச் சேமிக்கலாம்!

                                                                 

சேமிப்பு பழக்கம் இல்லாதவர்கள், பண ரீதியான பல சிக்கல்கள் வரும்போது திக்கு முக்காடி விடுகிறார்கள். 'இன்றைக்கு நல்லா சம்பாதிக்கிறோம்...சந்தோஷமாக செலவு செய்றோம்....நாளைய தேவைக்கு அப்போது பார்த்துக்கலாம்' என்ற எண்ணம்தான் பலரிடமும் மேலோங்கி நிற்கிறது. சிலரோ சம்பாதிப்பது குடும்பச் செலவுகளுக்கே போதுமானதாக இருக்கிறது. இதில் சேமிப்பு எப்படி சாத்தியம் என்ற கேள்விகளை முன்வைப்பார்கள். தேவையற்ற செலவுகளைக் குறைத்தால் சேமிப்பு சாத்தியமே. இதோ நீங்கள், சேமிப்பை கடைபிடிக்க தவிர்க்க வேண்டிய பத்து விஷயங்கள்: 

1. வீட்டில் சமைத்து வைத்திருப்பது நினைவில் இருந்தும் வெளியே அவுட்டிங் சென்ற இடத்திலே ஹோட்டல்களில் சாப்பிட்டுவிட்டு வருவது. வீட்டில் சமைக்காமல் அடிக்கடி ஹோட்டல்களிலேயே சாப்பிடுவது போன்ற செயல்களைக் குறைத்துக்கொண்டால் மாதம் தோறும் பல நூறுகளில் இருந்து சில ஆயிரம் ரூபாய் வரை சேமிக்க முடியும்.

2. ஒவ்வொரு மாதம் தோறும் அல்லது குறிப்பிட்ட நாளைக்கு ஒருமுறை ஷாப்பிங் போவதை பலரும் வாடிக்கையாகக் கொண்டிருப்பார்கள். அப்படி போகும்போதெல்லாம் புதிய ஆடைகளை வாங்குவதோடு அதனை ஒருசில முறை மட்டுமே பயன்படுத்துவார்கள். இவ்வாறு செய்வதைத் தவிர்த்து, தேவைக்கேற்ற உடைகளை வாங்கி அவை நீடித்து உழைக்கும்வரை பயன்படுத்தினால் கூடுமான தொகையை சேமிக்க முடியும்.

3. நண்பர்கள், உறவினர்கள் புதிதாக ஒரு பொருளை வாங்கிவிட்டார்கள். அவர்களுக்கு போட்டியாக நாமும் அதே போல அல்லது அதைவிட சிறந்த பொருளை வாங்க வேண்டும் என்று நினைப்பதை தவிர்க்க வேண்டும். இத்தகைய செயல்கள் நம் வரவுக்கு மீறிய செலவுகளைக் கட்டாயமாக ஏற்படுத்தும்.

 

                                                               

 

4. பலரது வீட்டின் முகப்பில் செருப்பு விடும் பகுதியில் கலர் கலராக செருப்பு, ஷூ இருக்கும். என்ன காரணங்களுக்காக ஆயிரக்கணக்கில் செலவழித்து இத்தனை ஷூ, செருப்புகளை வாங்கினோம் என, பல நேரங்களில் நாமே நினைப்பதுண்டு. அதிகபட்சமாக ஒன்றிரண்டு ஷூ, செருப்புகள் இருந்தாலே போதுமானது. எனவே இதுபோன்ற தேவையற்ற செலவீனங்களைக் கட்டாயமாக தவிர்க்கலாமே.

5. முடிந்தவரையில் நடந்து செல்லக்கூடிய பகுதிகளுக்கு பைக்/கார் போன்றவற்றைத் தவிர்க்கலாம். மேலும் சில நேரங்களில் ஒருநபர் மட்டுமே வெளியே செல்லும்போது, கார்களை தவிர்த்து ஆட்டோ, பஸ் போன்றவற்றில் பயணம் செய்யவதால் நிச்சயமாக மாதம் சில நூறுவரை பணத்தைச் சேமிக்கலாம்.

6. ஃபேன், ஏசி, மின் விளக்குகள் போன்ற மின்சாதனப் பொருட்களை இயக்க நிலையில் விட்டுவிட்டு கொஞ்சம் நேரம்தானே.... ஓடிட்டுப்போகுது என தெரிந்தோ அல்லது மறதியிலோ செல்வதைத் தவிர்த்து, அத்தகைய சமயங்களில் மின்சாதனங்களை அணைத்துவிட்டுச் செல்லலாம். இதனால் உங்கள் மின்கட்டணத்தில் குறைந்த அளவேணும் சேமிக்க முடியும்.

 

                                                              

 

7. விற்பனைக்கு வரும் புதுமாடல் வாகனத்தைப் பார்த்து, நன்றாக இயங்கிக்கொண்டிருக்கும் பைக்/ஸ்கூட்டி/காரை விற்றுவிட்டு புது வாகனம் வாங்குவதைத் தவிர்க்கலாம்.

8. பலர் அடிக்கடி அழகு சாதனப் பொருட்களை வாங்கி அவற்றைச் சரியாக பயன்படுத்தாமல், அவை முழுமையாக தீர்ந்து போவதற்குள் புதியவற்றை வாங்குவது, தங்கள் உடலுக்கு பொருத்தமாகவில்லை என அவற்றை ஒருசில முறை பயன்படுத்தியதுமே தூக்கி எறிவது போன்ற செயல்களைச் செய்வார்கள். தங்கள் உடலுக்கு ஒப்புக்கொள்ளும் பொருட்களை மட்டுமே வாங்கி, அவற்றை வீண் செய்யாமல் முறையாக பயன்படுத்துவதாலும் பணத்தை மிச்சம் செய்யலாம்.  

 

                                                               

 

9. ஒரே முறையில் மொத்தமாக பணம் செலுத்தி வாங்க முடியாத பொருட்களை, பலரும் இ.எம்.ஐ என்னும் 'தவணை முறை'யில் வாங்குவார்கள். இதனால் மாதச் சம்பளத்தில் பெரும்பகுதியை வாங்கிய பொருளுக்கான மாத தவணையாகவே செலுத்த நேரிடும். எனவே முடிந்தவரையில் அவசிய தேவையற்ற பொருட்களை இ.எம்.ஐ-யில் வாங்குவதைத் தவிர்க்கலாம். 

10. பெற்றோர்களும், பொருளாதார நிலை தெரிந்த படித்தவர்களுமே சேமிப்பின் அவசியத்தையும், நம் வரவுக்கு மீறிய செலவீனங்களையும் உணராமலும் செலவு செய்தால், நம்மைப் பார்த்து நம் பிள்ளைகளும் ஆடம்பர செலவுகளை கட்டாயமாக செய்யக்கூடும். எனவே பிள்ளைகளுக்கு சிறு வயது முதலே சேமிப்பின் அவசியத்தை சொல்லி வளர்க்கலாம். மேலும் சிறு பிள்ளைகளுக்கு உண்டியல் வாங்கிக் கொடுத்து, சேமிக்கக் கற்றுக்கொடுக்கலாம்.

மேற்கண்ட தேவையற்ற செலவீனங்களைக் குறைத்து மாதம் தோறும் ரூ.2000-லிருந்து தங்களால் இயன்ற அளவு அல்லது தங்கள் வருமானத்தில் 10 சதவீத தொகையை சிறந்த நிதி ஆலோசகரை அணுகி மியூச்சுவல் ஃபண்டில் சேமிக்கலாம். இந்த சேமிப்பு 30-35 ஆண்டுகள் கழித்து பல லட்சங்களாக உயர்ந்திருக்கும். இதன்மூலம் பிள்ளைகளின் உயர்கல்வி, மருத்துவம், சுப நிகழ்வுகள், வீடு, வாகனம் வாங்குதல் போன்ற பல காரியங்களை சிக்கல் இன்றி செய்ய உதவும்.
 

 - கு.ஆனந்தராஜ் 
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ