Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பெண்களுக்கான ஜீரோ எஃப்.ஐ.ஆர்...! 'பிங்க்' படத்தில் வரும் சட்டம் பற்றிய அறிமுகம்

 

அவ்வப்போது திரைதொடும் ஆச்சர்யப் படைப்புகளுள் ஒன்றாக சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்றிருக்கும் பாலிவுட் திரைப்படம், 'பிங்க்'! இந்தியப் பெண்களை ஆண்டாண்டு காலமாக இறுக்கிக்கொண்டிக்கும் மரபு விலங்குளை கேள்விக்குள்ளாக்கி, அவர்களுக்கான சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் தைரியமாகப் பேசிய திரைமொழி அது.

மூன்று இளம் பெண்கள், அவர்களைப் பிரச்னைக்கு உள்ளாக்கிய இளைஞன், நீதிமன்றத்தில் நகரும் காட்சிகள் என விரிகிறது படம்.  பெண்களுக்குச் சாதகமான, பெண்கள் அவசியம் அறிய வேண்டிய சட்டங்கள் பற்றி திரைக்கதையில் அக்கறையுடன் கோத்திருக்கிறார், இயக்குநர் அனிருதா ராய் சௌத்ரி.

''பொதுவாக, 'லா ஃபிலிம்' எனச் சொல்லப்படும் நீதிமன்றக் காட்சிகள் நிறைந்த படங்களில், மக்கள் அறிய வேண்டிய சட்டங்கள் பற்றி எடுத்துச் சொல்ல வாய்ப்பிருந்தும் அதை முழுமையாகப் பயன்படுத்திருக்க மாட்டார்கள். ஆனால் 'பிங்க்' படம், பெண்கள் அறிய வேண்டிய ஐந்து முக்கியச் சட்டங்கள் பற்றி காட்சிகளின் ஊடே கடத்தியிருப்பது வரவேற்கத்தக்கது'' என்று சொல்லும்
மதுரை, உயர் நீதிமன்ற வழக்கறிஞர்  எஸ். ஸ்ரீனிவாச ராகவனிடம், அது குறித்த தகவல்கள் பெற்றோம்.

''ஜீரோ எஃப்ஐஆர்

பொதுவாக, ஒரு குற்றம் தொடர்பான புகார் குறித்து பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கையான  எஃப்ஐஆர் (FIR-First Information Record), சம்பவம் நடந்த ஏரியாவின் சட்ட எல்லைக்குட்பட்ட காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். ஆனால் பெண்களைப் பொருத்தவரை, ஆபத்து நேரங்களில் அவர்கள் எந்தக் காவல் நிலையத்திலும் FIR புகாரைப் பதிவு செய்யலாம். அது ஜீரோ
எஃப்ஐஆர்(Zero FIR)ஆகப் பதிவு செய்யப்பட்டு, பின்னர் சம்பவம் நடந்த இடத்தின் அடிப்படையில் அது எந்தக் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட வேண்டுமோ அங்கு மாற்றப்பட்டு,  அந்தப் புகார் விசாரிக்கப்படும்.

 

'பிங்க்' படத்தில் டாப்ஸி பன்னுவின் 'மினல்' கதாப்பாத்திரம், தற்காப்புக்காகத் தான் தாக்கிய ஆணும், அவன் நண்பர்களும் தன்னையும் தன் தோழிகளையும் ஆபத்துக்கு உட்படுத்துவது பற்றி காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சொல்வார். அப்போது அந்தக் காவல் அதிகாரி, சம்பவம் நடந்த இடம் தங்கள் காவல் நிலையத்தின் சட்ட எல்லைக்குள் வராததால் எஃப்ஐஆர் பதிவு
செய்ய முடியாது என்று கூறிவிடுவார்.  பின்னர் ஒரு சீனியர் அதிகாரி மூலமாக டாப்ஸிக்கும் நமக்கும் ஜீரோ எஃப்ஐஆர் பற்றித் தெரியப்படுத்தியிருப்பார் இயக்குநர்.

சனி, ஞாயிறுகளிலும் பெண்களுக்கு பெயில்!

ஒரு குற்றம் பற்றிய புகாருக்கு காவல்துறை நடவடிக்கை எடுக்கும்போது, குற்றம் சுமத்தப்பட்டவர் 24 மணி நேரத்துக்குள் காவல்துறையால் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படுவார்.  பின்னர் இருதரப்பு வாதங்களின் அடிப்படையில், குற்றம் சுமத்தப்பட்டவர் 15 நாட்களுக்கு நீதிமன்ற உத்தரவின் கீழ் சிறையில் அடைக்கப்படுவார். கொலை, கொள்ளை, பெருங்காயம் என குற்றத்தின் தீவிரத்தைப் பொருத்து, அது பிணைவிடா குற்றம்(Non - Bailable Offense) எனில், பிணை(Bail) மனு அளித்து, நீதிமன்ற உத்தரவின் கீழ்
அவரை காவலில் இருந்து வெளியே எடுக்க முடியும்.

பொதுவாக, சில முக்கிய மற்றும் அவசர வழக்குகள், சனி, ஞாயிறுகளில் சம்பந்தப்பட்ட நீதிபதியின் இல்லத்தில் விசாரிக்கப்பட,  தலைமை நீதிபதியின் உத்தரவு பெறப்பட வேண்டும். ஆனால், பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பொருத்தவரை, நேரடியாகவே சம்பந்தப்பட்ட நீதிபதியின் இல்லத்தில் வழக்குகளும், பெயில் மனுக்களும் விசாரிக்கப்படலாம் என்பது பெண்களுக்குச் சாதகமான அம்சம்.

'பிங்க்' திரைப்படத்தில் டாப்ஸி வார இறுதி நாட்களுக்கு முன் கைது செய்யப்பட, அவருக்கு பெயில் கிடைக்க முயற்சிக்கும் அவர் தோழிகளிடம், 'வீக் எண்டில் பெயில் கிடைக்காது, திங்கட்கிழமை பார்க்கலாம்' என்பார் ஒரு வழக்கறிஞர். சீனியர் வழக்கறிஞர் 'தீபக் சேகர்' கேரக்டராக வரும் அமிதாப்பச்சன், வார இறுதி நாட்களிலும் பெண்களும் குழந்தைகளும் பெயில் பெற
முடியும் என்பதைக் கூறுவார்.

செக்‌ஷன் 354

'பிங்க்' திரைப்படத்தில் ராஜ்வீர் மீது செக்‌ஷன் 354-ன் கீழ் குற்றம் பதிவு செய்யப்படும். இந்தியப் பெண்களுக்குக் கைகொடுக்கும் கூரான சட்ட ஆயுதம், இந்த இந்தியத் தண்டனைச் சட்டம். வெளியிடத்தில் மட்டுமல்ல, வீட்டிலும்கூட ஒரு பெண்ணின் கண்ணியத்தைக் குறைக்கும் விதமான வார்த்தைகள் தாக்குதலோ அல்லது உடல் ரீதியான தாக்குதலோ நிகழ்த்தும் எவரின் மீதும், இந்தச் சட்டத்தின் கீழ் பெண்கள் புகார் அளிக்கலாம்.

செக்‌ஷன் 503

'பிங்க்' திரைப்படத்தில் டாப்ஸியும் அவர் தோழிகளும் செக்‌ஷன் 503-ன் கீழ், தங்களை ஆபத்தாகத் தொடரும் ஆண்களின் மேல் புகார் பதிவு செய்வார்கள். இந்திய தண்டனைச் சட்டத்தின் இந்தப் பிரிவின்படி...

* ஒருவர் தன்னைக் காயப்படுத்தி மிரட்டினால்

* தன் கண்ணியத்துக்கு களங்கம் விளைவித்தால்

* கட்டாயப்படுத்தி சட்டத்துக்குப் புறம்பான செயலை தன்னைச் செய்யவைத்தால் பாதிக்கப்பட்டவர் அந்த நபர் குறித்து செக்‌ஷன் 503-ன் கீழ் புகார் அளிக்கலாம்.

செக்‌ஷன் 164

நீதிமன்ற விசாரணையின்போது, டாப்ஸியின் வழக்கறிஞர் அவரிடம் மிகவும்  பெர்சனலாக கேள்விகளைக் கேட்பார். அப்போது நீதிபதி குறுக்கிட்டு, டாப்ஸி தன் வாக்குமூலங்களை தனியறையில், கேமரா பதிவின் கீழ் வழங்கும் உரிமையை அவருக்கு வழங்குவார். ஆனால் அதை அவர் மறுப்பதாக அமைகிறது திரைக்கதை.

குற்றவியல் நடைமுறைச் சட்டம் (Criminal Procedure Code) செக்‌ஷன் 164ன் படி, காவல் நிலையம், நீதிமன்றம் என எங்கும், ஒரு பெண்ணின் அந்தரங்கம் சம்பந்தப்பட்ட எந்த விசாரணைகளும் தனியறையில், ஒரு பெண் கான்ஸ்டபிள் உடனிருக்க நடத்தப்பட வேண்டும் என்பது சட்டம். 'சொல்லும்மா... அவன் உன்ன என்ன பண்ணினான்?' என்று போலீஸ் ஸ்டேஷனில் பலரின் முன்னிலையில் ஒரு பெண் விசாரிக்கப்படும்போது, அங்கு தலைகுனிய வைக்கப்படுவது சம்பந்தப்பட்ட பெண்ணுடன் சட்டமும்தான்.''

பெண்கள் 'நோ' சொல்ல வலியுறுத்திய 'பிங்க்'...  சட்டம் பெண் கையில் என்பதை வலியுறுத்தியிருப்பதையும் கவனிப்போம்.


- ஜெ.எம். ஜனனி
படம்:  சு. ஷரண் சந்தர்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ