Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அர்விந்த் கெஜ்ரிவால் மீது ஒரு சர்ஜிக்கல் அட்டாக்!

பாகிஸ்தான் இராணுவம் நம் எல்லைக்குள் வந்து தாக்குவதும், இந்திய இராணுவம் பாகிஸ்தானுக்குள் அதிரடி தாக்குதல் நடத்துவதுமாக, இந்தியா- பாகிஸ்தான் இடையேயான எல்லைப்பகுதியில் நாளுக்கு நாள் பதற்றம் ஏறிக்கொண்டே இருக்கிறது. இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய உரி ராணுவ முகாம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியப் படையினர், பாகிஸ்தானுக்குள் 'சர்ஜிக்கல் அட்டாக்' மூலம் பதிலடி கொடுத்தனர்.

உண்மையில் சர்ஜிக்கல் அட்டாக் நடந்ததா?

இந்திய இராணுவம் சர்ஜிக்கல் அட்டாக் நடத்திய செய்தி வெளியானதும் இந்தியா முழுவதும் உள்ள மக்கள்  அந்தத் தாக்குதலை வரவேற்றனர். இந்திய இராணுவத்தையும், பிரதமர் மோடியையும், மத்திய அரசையும் பாராட்டித் தள்ளினர். 

ஆனால் மறுபக்கம், இந்த சர்ஜிக்கல் அட்டாக் தொடர்பாக இந்திய இராணுவத்தின் மீது சில அரசியல் தலைவர்கள் எழுப்பியுள்ள சந்தேகம், பல விமர்சனங்களையும் விவாதங்களையும் இந்திய அரசியல் சூழலில் கிளப்பியது. இந்திய இராணுவம் உண்மையிலேயே பாகிஸ்தான் எல்லையில் சர்ஜிக்கல் அட்டாக்கை நடத்தியதா என்பதே அந்த சந்தேகம்.

சந்தேகத்துக்குக் காரணம்? 

இந்திய ராணுவம் சர்ஜிக்கல் அட்டாக் நடத்தியது என்பதை பாகிஸ்தான் மறுத்ததே இத்தகைய சந்தேகம் எழுந்ததற்கு காரணம். இந்தியா நடத்திய சர்ஜிக்கல் அட்டாக், பெரும்பாலான சர்வதேச ஊடகங்களிலும் முக்கியச் செய்தியாக ஆனது. இதனால் பாகிஸ்தான் அப்படி ஒரு அட்டாக்கும் நடக்கவில்லை. இந்தியா துப்பாக்கிச் சூட்டில் மட்டுமே ஈடுபட்டது. இதனால் எங்களுக்குப் பெரிதாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றெல்லாம் அறிக்கை விட்டது. இதனை சர்வதேச ஊடகங்கள் உலகம் முழுவதும் பரப்பின.

இதனால், இந்தியாவின் நற்பெயர் உலக அரங்கில் களங்கமடைந்திருப்பதாகவும், சர்ஜிக்கல் அட்டாக் நடந்ததற்கான ஆதாரத்தை இராணுவம் வெளியிட வேண்டும் என்றும், இந்தத் தாக்குதலை வைத்து பாஜக அரசு அரசியல் நடத்தாமல் ஆதாரத்தை வெளியிட வேண்டும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். இவர் இப்படி கூறியதும் கூடவே சேர்ந்து சில காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் இந்த சந்தேகத்தைக் கிளப்ப, பாகிஸ்தான் ஊடகங்கள் இந்த சந்தேகத்தை தலைப்புச் செய்தியாக வெளியிட்டன. இது கெஜ்ரிவால் மீது பெரும் கருத்து தாக்குதல்கள் நடத்த காரணமானது. 

கெஜ்ரிவால் மீது சர்ஜிக்கல் அட்டாக்!

முன்னாள் இராணுவ தளபதிகள், "இராணுவத்தின் வீரத்தை நிரூபிக்க ஆதாரம் கேட்பது சுத்த முட்டாள்தனம்" என்று விமர்சித்தனர். இதுதான் பெரும்பாலானோரின் குரலாகவும் இருந்தது. பாஜக ஆதரவாளர்கள் இன்னும் இறங்கி அவரை கடுமையாக விமர்சித்தனர்.  இராணுவத்தைச் சந்தேகிக்க அரவிந்த் கெஜ்ரிவால் யார், என்று டைம்ஸ் நவ்-வில் அர்னாப் கோஸ்வாமி உச்ச டெசிபலில் கத்தினார். ஆனாலும் ஒரு பக்கம் சிலர் இதனை சந்தேகிக்கவும் செய்தனர். ஆதாரத்தை வெளியிட்டால்தான் என்ன? என்று கேட்கத் தொடங்கினர். 

இறுதியில் இந்திய இராணுவம் ஆதாரத்தை வெளியிட ஒப்புக்கொண்டது. சர்ஜிக்கல் அட்டாக் நடத்தப்பட்ட விடியோவை அரசுக்கு இராணுவம் அளித்துள்ளது. பிரதமர் மோடியின் பார்வைக்குப் பிறகு அந்த விடியோ வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆதாரம் கேட்ட கெஜ்ரிவால் ஆதாரம் வெளியிடப்படும் என்று தெரிந்த பிறகு வாய் திறக்காமல் இருப்பது ஏன் என்று பாஜக தேசிய செயலர் ஶ்ரீகாந்த் ஷர்மா கேள்வி எழுப்பியுள்ளார். 

கெஜ்ரிவால் கேட்டது கிடைத்த பிறகும் அவர் மெளனமாக இருப்பதிலிருந்தே அவரது நோக்கம் நன்றாகத் தெரிகிறது என்று எல்லோரும் அவரைச் சாடத் தொடங்கினர். இந்த நிலையில் சர்ஜிக்கல் அட்டாக் தொடர்பான ஆதாரங்கள் வெளியிடப்படுவது சந்தோஷம் அளிக்கிறது. அரசு இந்த ஆதாரத்தை முழுமையாக வெளியிட்டு பாகிஸ்தானின் பொய் பிரசாரத்தை உலக அரங்குக்கு அம்பலப்படுத்த வேண்டும் என்று தனது ட்விட்டரில் கெஜ்ரிவால் பதிவிட்டார்.

கெஜ்ரிவால் தனது ஆட்சி தொடர்பான விவரங்களைப் பொது வெளியில் வெளியிட வேண்டும் என்று பலர் அவரது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளனர். கெஜ்ரிவாலுக்கு இது தேவையா?

- ஜெ.சரவணன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ