Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

' பணக்கார கிரிமினல்களுக்குத் துணை போகலாமா?'  - மோடியைச் சாடும் சீதாராம் யெச்சூரி

பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து கடன்பெற்று திருப்பித் தராத நிறுவனங்களைப் பட்டியலிட்டு பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார் சி.பி.எம் கட்சியின் சீதாராம் யெச்சூரி. ' வராக்கடன்களை வசூலிக்க மத்திய அரசு தயக்கம் காட்டுகிறது. பணக்காரக் கிரிமினல்களுக்கு அரசு சலுகை காட்டுகிறது' எனவும் கொதிக்கிறார். 

இந்தியாவில் உள்ள வங்கிகளில் இருந்து 8.5 லட்சம் கோடி ரூபாயை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு முறைகேடாக மத்திய அரசு வழங்கியுள்ளதை, வெளிக்கொண்டு வந்தார் சி.பி.எம் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி. ' வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட இந்தப் பணத்தைத் திரும்பப் பெறுதல் சாத்தியமில்லை' எனவும் அவர் அதிர வைத்தார். இதுகுறித்து பிரதமருக்கு விரிவான கடிதமும் எழுதினார். தற்போது மீண்டும் ஒரு கடிதத்தை பிரதமர் மோடிக்கு அனுப்பியிருக்கிறார் சீதாராம் யெச்சூரி. அந்தக் கடிதத்தில், ' நான் கடந்த ஜூலை 7-ம் தேதி அன்று தங்களுக்கு எழுதிய கடிதம் தொடர்பாக மீண்டும் தங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் செயல்படா சொத்துக்கள் என்ற பெயரில் உள்ள பணத்தின் மதிப்பு மிகவும் அதிகமான அளவில் அதிகரித்திருப்பது குறித்தும் அவற்றை வசூலிக்க மத்திய அரசு தயக்கம் காட்டுவது குறித்தும் குறிப்பிட்டிருந்தேன். இவற்றை வசூலிப்பதற்கு, மத்திய அரசின் சார்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வராக்கடன்களின் அளவு என்பது 2015-16-ல் பல வங்கிகளில் இரட்டிப்பாகவும் சில வங்கிகளில் மும்மடங்காகவும் உயர்ந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவற்றை வசூலிப்பதற்கு உருப்படியான நடவடிக்கை எதுவும் எடுப்பதற்குப் பதிலாக, கடன் வாங்கிய கார்ப்பரேட்டுகள் மற்றும் முதலாளிகளுக்கு 2015-16-ம் ஆண்டில் 59,547 கோடி ரூபாய் அளவிற்கான கடன் தொகையைச் செலுத்த வேண்டாம் என்கிற முறையில், இத்தொகையை மத்திய அரசு தள்ளுபடி செய்திருக்கிறது. வறட்சியால் பாதிக்கப்பட்டு வறிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள விவசாயிகளுக்கு அளித்த கடன் தொகையை வசூலித்திட கடும்நடவடிக்கை எடுக்கும் அதே சமயத்தில், முதலாளிகளுக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் இவ்வாறு சலுகை அளிக்கப்பட்டிருக்கிறது.

முதலாளிகளும் கார்ப்பரேட்டுகளும் பணத்தைத் திருப்பிச் செலுத்தாவிட்டால் அதற்கு ஈடாக அவர்களிடமிருந்து சொத்துக்களை பறிமுதல் செய்திட முடியும். எனினும் அதற்கான அரசியல் உறுதி மத்திய அரசிடம் இல்லை. மாறாக, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் நிலுவையில் உள்ள ‘வராக்கடன்கள்’ அனைத்தையும் ஒன்றுபடுத்தி, ஒரே வங்கியின் கணக்கிற்குக் கொண்டுவரவும், அவ்வங்கிக்கு ‘வராக் கடன் வங்கி’  என்று பெயர் வைக்க இருப்பதாகவும் அதற்கான முன்மொழிவுகள் தயாராகிக் கொண்டிருப்பதாகவும் தெரிகிறது. 

நாட்டின் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிடம் பணம் பெற்று திருப்பிச் செலுத்தாத நாணயமற்றவர்களை சுதந்திரமாக நடமாட அனுமதித்திட அரசு இத்தகைய முடிவினை எடுத்துள்ளது. இது, நம்நாட்டின் பெரும்பான்மை மத்தியதர மற்றும் ஏழைகளின் சேமிப்புத் தொகையை எடுத்து, சலுகைசார் முதலாளிகளுக்கு அவர்களின் சீர்கெட்ட நடவடிக்கைக்காக பரிசளிப்பது போல் இருக்கிறது. இவ்வாறு ‘வராக்கடன் வங்கி’ உருவாக்கப்படுவதை இந்திய ரிசர்வ் வங்கியின் முந்தைய ஆளுநர் ரகுராம் ராஜன் வெளிப்படையாகவே நிராகரித்திருந்தார். இதிலிருந்த ஆபத்தை அவர் அடையாளம் காட்டியிருந்தார். பெருமளவில் கடன் வாங்கிவிட்டுத் திருப்பித்தராத கார்ப்பரேட்டுகளுக்கும் முதலாளிகளுக்கும் திரும்பத் திரும்ப அந்த வங்கிகள் பணம் கொடுத்துக் கொண்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டி இருந்தார். இப்படி மத்திய அரசு இதுவரை 1 லட்சத்து 12 ஆயிரத்து 089 கோடி ரூபாய் வராக் கடன்களைத் தள்ளுபடி செய்திருக்கிறது. இதன்மூலம் அது சலுகைசார் முதலாளித்துவத்துக்கு வெண் சாமரம் வீசிக் கொண்டிருக்கிறது. 

பொதுத்துறை வங்கிகளிடமிருந்து கடன் பெற்றுவிட்டு, திருப்பிச் செலுத்தாத முதல் மிகப்பெரும் 100 கடன்காரர்களிடமிருந்து கடன்தொகையைத் திரும்பப்பெற மத்திய அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியமாகும். அவர்களின் பெயர்களை முதலில் வெளிச்சத்துக்கு கொண்டு வருவதிலிருந்து இதனைத் தொடங்கிட வேண்டும். இதனைச் செய்ய உங்கள் அரசு தவறுமேயானால், பணக்கார கிரிமினல்களுக்கு நீங்கள் துணை போவதாகவே அர்த்தமாகும். இது இயற்கை நீதிக் கோட்பாட்டிற்கு எதிரானதாகும்.‘வராக்கடன் வங்கி’ தொடங்கும் முன்மொழிவை நிராகரிப்பீர்கள் எனவும் கார்ப்பரேட்டுகளிடமும் முதலாளிகளிடமும் அளித்த கடன்தொகைகளை வசூலித்திட நடவடிக்கைகள் எடுத்திடுவீர்கள் என்றும் நம்புகிறேன். இதனைச் செய்யத் தவறினால், நாட்டின் பிரதமர் என்றமுறையில் தங்களுக்கு அளிக்கப்பட்ட அரசமைப்புச் சட்டக் கடமையை நீங்கள் செய்யத் தவறுகிறீர்கள் என்றே பொருள்படும்' எனக் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார் சீதாராம் யெச்சூரி. 

- ஆ.விஜயானந்த் 
 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ