Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’ஒவ்வொரு பெண்ணும் ஹீரோயின்தான்!’ - சொல்கிறார் இந்த ஹீரோயின்!

“நான் ஏன் நடிகைகளை போல் இல்லை“ என்று புலம்பும் பெண்ணா நீங்கள்..? சோனம் கபூர் சொல்வதைக் கேளுங்கள்!

"ஒவ்வொரு நாளும் கண்ணாடி முன் நின்று நான் ஏன் சிவப்பாக இல்லை? நான் ஏன் ஸ்லிம்மாக இல்லை? என் கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையத்தை எப்படி மறைப்பது? என்று பல கேள்விகளை, உங்களைப் போலவே எனக்குள் நானே கேட்டுக்கொண்ட காலம் உண்டு. "இவ்வளவு குண்டா இருந்தா உன்னை யார் கல்யாணம் பண்ணிப்பா? ஒல்லியாக நான் சூப்பர் டயட் ஒண்ணு சொல்லவா?" என்னும் கேள்விகளையும்  அறிவுரைகளையும் கேட்டுக் கேட்டு காது போயிருக்கிறேன். 

என்னுடைய 13 வயதில் என் குடும்பத்தினருடன் கோவாவிற்கு சென்றேன். அப்போது வெள்ளை கலர் டாப்ஸ், ப்ளூ ஜீன்ஸில் ஒரு அழகான பெண் தன் நண்பர்களுடன் பிக்னிக் வந்திருந்தார். அந்த அழகான பெண் எங்கள் குடும்ப நண்பர் என்பதால் அன்று இரவு முழுவதும் எங்களுடன் இருந்தார். அந்த ஒரு இரவும் என் கண்கள் அவரைத் தவிர வேறு எதையும் பார்க்கவில்லை. அந்த பெண் வேறு யாருமில்லை... ஐஸ்வர்யா ராய்.  அவர் நிச்சயம் உலக அழகியாக இருப்பதற்கு 100% தகுதியானவர் தான். அத்தனை அழகு..! கூடவே நான் ஏன் இப்படி இல்லை என்னும் கவலையும் எனக்குள் வந்து ஒட்டிக்கொண்டது.

நடிக்க வருவதற்கு முன் நான் முதன் முதலில் டேட்டிங் செய்த நண்பன் ஒருவன் "சோனம்கபூர் அநியாயத்துக்கு குண்டா இருக்காடா" என்று தன் நண்பனிடம் கமெண்ட் அடித்தான். நடிக்க வந்தபின்பு நான் கஷ்டப்பட்டு ஒல்லியானேன். அப்போதும் என்னை "நீங்க பார்க்க பிளாட்டா இருக்கீங்க" என்று கலாய்த்தார்கள். இப்படி மறைமுகமாகவும் நேரடியாகவும் என்னை பலர் விமர்சித்துள்ளனர். அப்போதெல்லாம் மனதளவில், என்னை நானே வெறுத்துள்ளேன்.

18 வயதில் சஞ்சய் லீலாவின் "சாவாரியா" படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. படத்தில் நடிக்கப்போகிறேன் என்னும் சந்தோஷத்தை விட என் உடல் வாகு இப்படி இருக்கிறதே.., மக்கள் என்னை ஏற்றுக்கொள்வார்களா? என்ற கவலை தான் அதிகமாக இருந்தது. என்ன செய்வதென்றே தெரியாமல், பவர் யோகா செய்தேன்; ஆரோகியமற்ற டயட்டை எடுத்தேன்; 2 கிலோ குறைய ஒரு வாரம் முழுவதும் சாப்பிடாமல் இருந்தேன்; ஏன்..? யாரோ சொன்னதை நம்பி ஒரு நாள் முழுவதும் வெறும் அன்னாசி பழம் மட்டும் சாப்பிட்டிருக்கிறேன். 

நடிக்க வந்த புதிதில் பத்திரிகைகளிலும் இன்டர்நெட்டிலும் என் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், பருக்கள் எல்லாவற்றையும் புகைப்படத்தில் வட்டமிட்டு போடுவார்கள். ஷோபா டே, தன்னுடைய பிளாக்கில், "நான் பார்ப்பதற்கு செக்சியாக இல்லை" என்று எழுதினார். என் மனநிலை எப்படி இருந்திருக்கும்? நான் நடித்த ஷார்ட்களை மானிட்டரில் பார்க்கும்போது, "ஆம் அவர்கள் சொல்வதை போல, நான் அழகாக இல்லை தான்" என்று தோன்றும்.

இதற்கெல்லாம் காரணம், "முகத்தில் தழும்புகள், கரும்புள்ளிகள் இல்லாமல் சிவப்பாகவும், ஒல்லியாகவும் இருந்தால் தான் அவள் அழகி" என்னும் பொய்யான நம்பிக்கை தான். அத்துடன் நம்மை நாமே ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதும் தான். நம்மை நாமும் சுற்றி இருக்கும் தோழிகளும், குடும்பத்தினரும் அங்கீகரிக்காமல் விட்டுவிட்டால் வேறு யார் அங்கீகரிப்பார்கள் ?

இந்த நேரத்தில் நான் முக்கியமாக நன்றி கூற விரும்புவது, என்னுடைய மேக் அப் ஆர்ட்டிஸ்ட் நம்ரதா சோனிக்கு தான். என் முகத்தை மிக அருகில் இருந்து பார்ப்பதும் அவர்தான். பல நேரங்களில் என் கருவளையங்களை நினைத்தும், தழும்புகளை நினைத்தும் கவலைப்படுவேன். என் இடது மேல் உதடு சற்று தூக்கி இருக்கும். அதை நிறைய பேர் கவனித்து இருக்கமாட்டார்கள். அதை நினைத்தும் வருத்தப்பட்டுள்ளேன். ஆனால், நம்ரதா, "இது தான் உனக்கு அழகு சோனம்" என்று எப்போதும் கூறிக்கொண்டே இருப்பார். 

இப்போது எனக்கு 31 வயது. உடற்பயிற்சியும், ஆரோக்கியமான உணவுகளும், நல்ல எண்ணங்களும் தான் உண்மையான அழகு என்பதை உணர்ந்துள்ளேன். "நான் ஏன் நடிகைகளை போல் இல்லை" என்று நினைத்து வருத்தப்படும் பெண்களே... காலையில் எழும்போது எந்த நடிகையும்... ஏன் நானும் கூட அழகாக எழுவதில்லை. வெளியில் செல்லும் முன்பு, மூன்று நான்கு பேர் சேர்ந்து 90 நிமிடத்திற்கு மேக்-அப், ஹேர் ஸ்டைல் வேலைகளை எனக்காக செய்வார்கள். ஒரு நாளைக்கு 90 நிமிடங்கள் வரை உடற்பயிற்சி செய்வேன். நான் என்ன சாப்பிட வேண்டும், என்ன சாப்பிடக்கூடாது என்று சொல்வதற்கும், செய்து தருவதற்கும் தனியாக ஆட்கள் இருக்கிறார்கள். இதை மீறி நான் புகைப்படங்களில் அழகாக தெரிவதற்கு போட்டோ ஷாப்பும் ஒரு காரணம். 

இனி உங்கள் குடும்பத்தில் உள்ள டீன் ஏஜ் பெண்கள், நடிகைகளைப் பார்த்து, "நான் ஏன் இப்படி இல்லை" என்று வருத்தப்பட்டால், "நீ இயற்கையிலேயே அழகு" என்று கூறுங்கள். அழகாக இருப்பதை விட ஆரோக்கியமாக இருப்பது தான் முக்கியம் என்று அவளுக்கு எடுத்து சொல்லுங்கள். காலையில் எழும்போது எந்த நடிகையும்... ஏன்? சோனமும் கூட இவ்வளவு அழகாக எழுவதில்லை என்று அழுத்திக்கூறுங்கள்.

தமிழில் - கி.சிந்தூரி 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close