Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘சர்ஜிக்கல் அட்டாக்’ விஷயத்தில் பி.ஜே.பி செய்வது சரியா...?


ர்ஜிக்கல் என்று கூகுள் தேடலில் வார்த்தையை தட்டினால் இப்போது பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய தாக்குதல் செய்திகள்தான் வந்து விழுகின்றன. இப்போது பி.ஜே.பி கார ர்கள் சர்ஜிக்கல் அட்டாக் சம்பவத்தை உ.பி தேர்தலுக்காக பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  
காஷ்மீர் மாநிலம் உரியில் உள்ள ராணுவ முகாம் மீது  கடந்த செப்டம்பர் 18-ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் செப்டம்பர் 29-ம் தேதி  எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் சர்ஜிக்கல் அட்டாக்கை நடத்தியது.
இந்த நிலையில் உத்தரபிரதேசத்தின் பல பகுதிகளில் பி.ஜே.பி சார்பில் ராணுவத்தைப் பாராட்டில் ஃப்ளெக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அதற்கும் ஒரு படி மேலே போய் கடந்த 6-ம் தேதி உ.பி-யில் உள்ள லக்னோ, ஆக்ரா ஆகிய இடங்களில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கருக்குப் பாராட்டு விழா நடத்தப்பட்டது. தொடர்ந்து ஒருவாரம் இது போல பாராட்டு விழா நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறார்கள். பி.ஜே.பி தரப்பில் விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டதாகச் சொல்கிறார்கள்.

அரசியலாக்குகிறதா பி.ஜே.பி?


2017-ம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சர்ஜிக்கல் அட்டாக் சம்பவத்தை பி.ஜே.பி அரசியல் ஆக்குவதாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன.
இது குறித்து மனித உரிமைக்கான மக்கள் கழகத்தின் தலைவர் பேரசிரியர் அ.மார்க்சிடம் பேசினோம். "பாகிஸ்தான் மீது இந்தியா சார்பில் பல காலகட்டங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளன. காங்கிரஸ் ஆட்சியில் கூட இது நடந்திருக்கிறது. நாட்டின் எல்லையில் தாக்குதல் நடப்பது இயல்பான ஒன்று.  ஆனால், எல்லையில் தாக்குதல் நடத்தியதை யாரும் பெருமைப் படுத்திச்  சொல்லிக் கொள்வதில்லை.
இப்போது, சர்ஜிக்கல் அட்டாக் பற்றி பெருமைப்படும் படியாகச் சொல்கிறார்கள். போர் மற்றும் போருக்கு பின்னால் உள்ள அரசியலைப் பற்றி ஆய்வு செய்பவர்கள் இது பிரச்னை ஆகப் போகிறது என்று சொல்கிறார்கள்.


 

அடிப்படை அரசியலுக்கு முரண்

இந்தியாவில் இது போல பெருமை பேசும் போது, இதற்கு எதிராக ஏதாவது செய்ய வேண்டும் என்ற உணர்வு  பாகிஸ்தான் நாட்டு மக்களிடம் ஏற்படுகிறது. அதற்கு அந்த நாட்டு அரசாங்கம் நிர்பந்திக்கப்படுகிறது. எனவே, இது போல சர்ஜிக்கல் அட்டாக் செய்வது ஆபத்தானது என்கின்றனர். இதனால், மேலும் அதிக தீவிரத்துடன்  பாகிஸ்தான் தீவிரவாதிகள் நமது எல்லையில் தாக்குதல் நடத்துகின்றனர். காஷ்மீருக்குள் ஊடுருவுகின்றனர். இரண்டு நாடுகளும் அணு ஆயுதங்களைக் கையில் வைத்துக் கொண்டுள்ளன. இந்தச் சூழலில் பெரிய போர் சூழல் நிலவுவது மக்களுக்கு ஆபத்தானது. இதைத் தேர்தல் பிரசாரமாகச் செய்வது, அடிப்படை அரசியலுக்கு  அப்பாற்பட்ட விஷயம். அடுத்த தேர்தல் வந்தால் இன்னொரு தாக்குதல் நடத்துவார்களா?  என்ற கேள்வி எழுகிறது. கார்கில் போர் மட்டும் அல்ல. மன்மோகன் சிங் ஆட்சியின் போதும் இது போல 2013-ல் தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலில் அடிவாங்கியவர்கள்தான், எங்களை தாக்கிவிட்டார்கள் என்று சொல்வார்கள். ஆனால், இந்த பி.ஜே.பி அரசில்தான்  'நாங்கள்தான் தாக்கினோம் என்று எப்போதும் இல்லாத வகையில்  முதன் முறையாக சொல்லி இருக்கிறார்கள்" என்றார்.

 

தேர்தலுக்கான தாக்குதல் அல்ல


பி.ஜே.பி  தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவிடம் கேட்டோம். "சர்ஜிக்கல் அட்டாகை , உ.பி தேர்தல் ஆதாயத்துக்காக நாங்கள் பயன்படுத்துவதாகச் சொல்வது முட்டாள் தனமான பேச்சு.  அது மட்டுமின்றி, தேச நலனுக்கு விரோதமான, அரசியல் உள்நோக்கங்களுக்கு இடமான பேச்சு. மோடி அரசு வாய்சவடால் அரசு என்றும், உரி தாக்குதலுக்கு எதிராக உடனடியாகத் தாக்குதல் நடத்தவில்லை என்றும் இதே அரசியல்வாதிகள்தான் சொன்னார்கள். சரியான தயாரிப்போடு, பதிலடி கொடுக்க வேண்டும் என்பதற்காக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.இனிமேல் இந்திய முகாம்கள் மீது தாக்குதல் நடத்தினால், உரிய விலை கொடுக்க வேண்டும் என்பதை உணர்த்தவே, இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. உ.பி தேர்தலுக்கும் இந்தத் தாக்குதலுக்கும் தொடர்பில்லை. உ.பி தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் இருக்கிறது.


கீழ்தரமான எண்ணம்


சர்ஜிக்கல் அட்டாக்கை  தேச பக்தர்கள் ஆதரிக்கின்றனர். அவர்கள்தான் பாரிக்கருக்கு பாராட்டு விழாக்கள் நடத்துகின்றனர். ராணுவத் தாக்குதலை எதிர்ப்பவர்கள் நாட்டு நலனுக்கு எதிரானவர்கள். தாக்குதல் நடந்தது உண்மையா என்பதை நிரூபிக்க ராணுவம், படங்கள், ஆதாரங்கள் வெளியிட வேண்டும் என்று கூறுகின்றனர். இது நாட்டின் பாதுகாப்பை ஆபத்துக்கு இட்டுச் செல்லும். இது வரை 1948, 1962,1964, 1971 என பாகிஸ்தானுக்கு எதிராகப் போர்கள் நடந்துள்ளன. அப்போதெல்லாம் நாங்கள்  எதிர்கட்சிகள் வரிசையில் இருந்தோம். தாக்குதல் நடந்தபோது அதற்காக  நாங்கள் ஆதாரம் கேட்டோமோ.  பாகிஸ்தான் நஷ்டப்பட்டதை ஏற்றுக் கொண்டிருக்கிறது. மிகவும் கீழ்த்தரமான எண்ணத்தோடு எதிர்கட்சிகள் குறை கூறுகின்றன. அன்னிய நாட்டுடன் போரிடும்போது எல்லா அரசியல் கட்சிகளும் ஒரே மாதிரி குரல் கொடுக்க வேண்டும்" என்றார்.
-கே.பாலசுப்பிரமணி

எடிட்டர் சாய்ஸ்

MUST READ