Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பீகாரில் மீண்டும் மதுவிலக்கு - கவலையில் 'குடி' மக்கள்!

"குடி எங்கள் பிறப்புரிமை; எங்களின் தார்மீக உரிமையை பறிக்கும் வகையில் பீகார் மாநில அரசு மதுபானங்களுக்குத் தடை விதித்துள்ளது" - என்று தெரிவித்து, பாட்னா உயர்நீதிமன்றத்தில் அரசின் மதுவிலக்கு அறிவிக்கைக்கு தடை பெறப்பட்டது. 'குடி' மக்கள் மிகுந்த சந்தோஷத்தில் ஆழ்ந்திருந்த நேரத்தில், அதில் குண்டைத் தூக்கிப் போடும் விதமாக, பீகார் மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, அதில் வெற்றியும் பெற்றுள்ளது.

பீகாரில் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் மது விலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. மதுவிலக்கை அமல்படுத்த ஏதுவாக, மதுபானங்கள் தயாரிக்கும் ஆலைகள் மூடப்பட்டன. இதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 5-ம் தேதி பீகார் மாநில அரசு, மதுவிலக்கிற்கு முறைப்படியான அறிவிக்கை வெளியிட்டது. இந்த அறிவிக்கையை எதிர்த்து பாட்னா உயர்நீதிமன்றத்தில் சிலர் மனுத் தாக்கல் செய்தனர்.  தங்களின் தனிப்பட்ட உரிமைகளை பறிக்கும் வகையில் அரசின் மதுவிலக்கு அறிவிக்கை உள்ளது. எனவே இந்த அறிவிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. இதனை ஏற்ற பாட்னா உயர்நீதிமன்றம், கடந்த மாதம் 30-ம் தேதி, மாநில அரசின் மதுவிலக்கு அறிவிக்கைக்கு தடை விதித்தது. அதோடு குறைந்த அளவில் மது அருந்துவது தவறு இல்லை என்று எல்லோரும் ஆச்சரியப்படும்படியான தீர்ப்பளித்தது. இதனால் மதுபான பிரியர்கள் உற்சாகம் அடைந்து, மீண்டும் குடிக்கலாம் என்று எண்ணி மகிழ்ச்சியில் திளைத்திருந்த நேரத்தில், அந்த மகிழ்ச்சிக்கு வெட்டு வைத்திருக்கிறது உச்சநீதிமன்றம். 

பீகார் மாநிலத்தில் தடை செய்யப்பட்ட மதுபானங்களை வைத்திருப்போரை கைது செய்ய வகை செய்யும் சட்டத்தை மாநில அரசு பிறப்பித்தது. இதனால் மக்கள் மிகுந்த வேதனை அடைந்திருந்தனர். அக்டோபர் 3-ம் தேதி பீகார் மாநில அரசு, பாட்னா உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதில் தீர்ப்பளித்த நீதிபதிகள், ‘தனிநபர் உரிமை வேறு, அரசியல் சாசன சட்டம் என்பது வேறு. பாட்னா நீதிமன்றம் அறிவித்த தீர்ப்புக்கு தடை விதிக்கிறோம்’ என்று உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். இதனால், மீண்டும் பீகாரில் மதுவிலக்கு தொடரும் என்கிற நிலை வந்திருக்கிறது.

பீகார் "குடி"மக்கள் மீண்டும் உற்சாகம் இழக்கும் வகையிலான உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளதால், நிதிஷ்குமார் தலைமையிலான  மதச்சார்பற்ற மெகா கூட்டணி அரசு சற்றே நிம்மதி அடைந்துள்ளது.

சி.வெங்கட சேது

எடிட்டர் சாய்ஸ்

MUST READ