Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வெற்றி, தோல்வி, அவமானங்கள்...அமிதாப் என்னும் யானை! #HBDamitabhbachchan

பாலிவுட் 'யானை 'அமிதாப்பின் 74-வது பிறந்தநாள் இன்று. ஒரு நடிகராக அமிதாப் ஏற்காத கதாபாத்திரங்கள் இல்லை. பார்க்காத வெற்றிகளும் இல்லை.  சந்திக்காத தோல்விகளும் இல்லை. பெறாத அவமானங்களும் இல்லை. அமிதாப்பை தவிர்த்துவிட்டு பார்த்தால் பாலிவுட்டை யோசித்துக்கூட பார்த்து விட முடியாது. உத்தரப்பிரதேசத்தில் அலகாபாத்தில் பிறந்த ஒருவரால் பிரமாண்டமான பாலிவுட்டை இத்தனை காலம் கட்டிப் போட முடிந்திருக்கிறது.  

வீட்டுக்கு அமிதாப்தான் மூத்தப்பிள்ளை. அஜிதாப் என்ற சகோதரனும் உண்டு. வாலிப பருவத்தில் கொல்கத்தாவில் கப்பலில் சரக்கு ஏஜண்டாக வேலை பார்த்தவர். .சினிமா மீதுள்ள  காதலால் மும்பைக்கு வந்து பாலிவுட்டுக்குள் பிரவேசித்தார். அவரது உயரேமே பெரிய பிளஸ்பாயின்ட்,. இவருக்கு முன் பாலிவுட்டில் இந்த உயரத்தில் எந்த ஹீரோவும் கிடையாது.   முதல் படம் 1969-ல் வெளியான சாட்ஹிந்துஸ்தானி. இந்த படம் தோல்வியடைந்தது. ஆனாலும் அமிதாப்புக்கு சிறந்த புதுமுக நடிகருக்கானத் தேசிய விருது கிடைத்தது.  அடுத்து வெளிவந்த 'ஆனந்த்'  வியாபார ரீதியாக வெற்றி கண்டது.

1973-ம் ஆண்டு முதல் 75-ம் ஆண்டு வரைதான் அமிதாப்பின் சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமானது. இந்த காலக்கட்டத்தில் பாலிவுட்டில் அபார வளர்ச்சிக் கண்டார் அமிதாப். பிரபல நடிகை ஜெய பாதுரியைத் திருமணம் புரிந்துகொண்டார். '1975-ம் ஆண்டு வெளியான தீவார்' அமிதாப்புக்கு மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அடுத்த படம் பிரமாண்டமான ஷோலே. இந்த படமும் இதே ஆண்டு  ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தில் வெளியாகி வசூலை அள்ளிக் குவித்தது. அமிதாப்புடன் தர்மேந்திரா, ஹேமாமாலினி, சஞ்சீவ்குமார், ஜெயபாதுரி, அம்ஜத்கான் என பெரிய பட்டாளமே நடித்திருந்தது. ஜெயதேவ் பாத்திரத்தில் அமிதாப் பின்னி எடுத்திருந்தார்.  அமிதாப் - தர்மேந்திரா நட்பு கதைகளத்தில் உருவாக்கப்பட்டிருந்த விதம் மக்கள் மனதில் ஆழமாக பதிந்தது. பாலிவுட்டின் அசைக்க முடியாத 'ஆக்ஷன் ஹீரோ'  அந்தஸ்த்தையும் ஷோலே அமிதாப்புக்கு பெற்றுத் தந்தது.

1982-ம் ஆண்டு தயாரான 'கூலி ' திரைப்படம் அமிதாப்பின் உயிரை பறிக்க இருந்தது. சண்டைக் காட்சிகளில் பெரும்பாலும் அமிதாப் டூப் போட மாட்டார். இந்த படத்துக்காக புனித் இஸ்ஸாருடன் மோதும் சண்டைக் காட்சி எடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. மேஜை மீது ஆமிதாப் விழுவது போல காட்சி. அப்போது, மேஜையின் கூர் முனை  அமிதாப்பின் வயிற்றுப் பகுதியை கிழித்து ஆழமாக பாய்ந்தது. அதிக அளவு ரத்தம் வெளியேறியது. மண்ணீரல் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்குப் பின் பிழைத்துக் கொண்ட அமிதாப், மீண்டும் நடிக்க ஒரு வருட காலம் பிடித்தது. கூலி திரைப்படம் மிகப் பெரிய பாக்ஸ் ஆபிஸ் ஹிட்.

கடந்த 1984-ம் ஆண்டு நடிப்புக்கு முழுக்குப் போட்டு விட்டு. அரசியலுக்குள் நுழைந்தார். குடும்ப நண்பர் ராஜிவ்காந்தியின் ஆதரவு இருந்ததால், அலகாபாத் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் எச்.என்.பகுகுணாவை தோற்கடித்து எம்.பி ஆனார். ஆனாலும் அமிதாப்பின் அரசியல் வாழ்க்கை நீண்ட காலம் நீடிக்கவில்லை. மூன்று ஆண்டுகளுக்குள் பதவியை ராஜினாமா செய்ய நேர்ந்தது. அமிதாப், அவரது சகோதரர் அஜிதாப் பச்சன் ஆகியோர் போபர்ஸ் பீரங்கி ஊழலில் தொடர்புடையவர்கள் என பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. 'குற்றமற்றவர்' என்பதை நிரூபிப்பதற்காக அமிதாப் பதவியில் இருந்து விலகினார்.

கடந்த 1996-ம் ஆண்டு ஏபிசிஎல் நிறுவனத்தைத் தொடங்கினார் அமிதாப். இந்த நிறுவனத்தின் முதல்படம் 'தேரே மேரே சப்னே' வசூல்ரீதியாக வெற்றி பெறவில்லை இந்த படத்தில் இருந்து தமிழுக்கு ஒரு சூப்பர் ஹீரோயின் கிடைத்தார். அவர்தான் சிம்ரன். தேரே மேரே சப்னேவால் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த லாபம் சிம்ரன்  அமிதாப்புக்கு எந்த லாபமும் கிடைக்கவில்லை. சொல்லப் போனால், ஏபிசிஎல். தயாரித்த படங்கள் ஒன்று கூட உருப்படியில்லை.  தமிழில் எடுக்கப்பட்ட   'உல்லாசம்' திரைப்படமும் பிளாப் ரகம்தான். அது மட்டுமல்ல 1996-ல் ஏபிசிஎல் பெங்களுரில் நடத்திய உலகஅழகிப் போட்டியும் கூட பெரும் இழப்பை ஏற்படுத்தியது. கடனில் இருந்து மீள அமிதாப் தனது மும்பை 'பிராக்தீட்ஷா' பங்களாவையே கூட விற்க முயற்சித்தார்.

 2000-ம் ஆண்டு அமிதாப்புக்கு மறுவாழ்வு கிடைத்தது. இந்த முறை அமிதாப்புக்கு கை கொடுத்தது சின்னத்திரை. ஸ்டார் தொலைக்காட்சியில் 'கோன் பனேகா க்ரோர்பதி' நிகழ்ச்சியை அமிதாப் வெற்றிகரமாக நடத்திக் காட்டினார்.  இந்த நிகழ்ச்சிதான் அமிதாப்புக்கு சினிமா வாழ்க்கையையே மீட்டும் தந்தது இதே ஆண்டில் வெளி வந்த யாஷ் சோப்ராவின் 'மொஹாபத்தியன் சூப்பர் ஹிட் ஆனது. இந்தப் படத்தை ' ஆதித்யா சோப்ரா இயக்கியிருந்தார்.  பிளாக் (2005)  பா ( 2009)  பிகு (2015) இந்த 3 படங்களிலும் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்ற அமிதாப், காலத்துக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு  தற்போதைய 'பிங்க்' வரை கதாபாத்திரங்கள் வழியாகத்தான் ரசிகர்கள் மனதில் நிற்கிறார்.

- எம்.குமரேசன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close