Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உலகின் முதல் தற்கொலைப் போராளி இந்த தமிழச்சி!

 

18-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய பெண் போராளி, குயிலி. பிறந்த மண்ணையும், வீர மங்கை வேலுநாச்சியாரையும் தன் உயிராக சபதம் கொண்டபோது குயிலிக்கும் வயது 18.

ஒருநாள், வேலுநாச்சியாரின் சிலம்பு வாத்தியார் வெற்றிவேல், குயிலியிடம் ஓர் உதவி கேட்டார். சிவகங்கை அரண்மனைக்கருகில் இருக்கும் வீட்டில், மல்லாரிராயன் என்பவனிடம் ஒரு கடிதம் சேர்ப்பிக்க வேண்டும் என்பதுதான் அந்த உதவி. அன்றிரவு, சிலம்பு வாத்தியாரின் குடிசையிலிருந்து அலறல் சத்தம். ரத்த வெள்ளத்தில் மிதந்துகிடந்த சிலம்புவாத்தியாரின் உடலையும், ஒரு கையில் குத்தீட்டியோடும் மறு கையில் சிலம்பு வாத்தியாரின் கடிதத்தோடும் கண்கள் சிவக்க தலைவிரி கோலமாக ஓடிவந்து, கதறியழுதபடி கடிதத்தை நீட்டினாள்.

 

கடிதத்தை வாங்கிப் படித்த வேலுநாச்சியாரின் முகம் உணர்ச்சியில் துடித்தது. நம்பிக்கைக்குரியவராக இருந்த சிலம்பு வாத்தியார் தன் காலைச் சுற்றியிருந்த நச்சுப்பாம்பு என அறிந்து வேலுநாச்சியார் அதிர்ச்சியுற்றார். தன் மீதும் நாட்டின் மீதும் கொண்ட பற்றின் காரணமாக ஒரு பெண் துணிச்சலாக மேற்கொண்ட செயலைப் பாராட்டினார். குயிலி, அன்றிலிருந்து வேலுநாச்சியாரின் மெய்க் காப்பாளரானாள்.

1780-ம் ஆண்டு ஐப்பசி மாதம் 5-ம் நாள் விருப்பாச்சி பாளையத்திலிருந்து பலரின் எதிப்புகளைத் தகர்த்து சிவகங்கையை நோக்கி வேலு நாச்சியாரின் படை புறப்பட்டது. உடையாள் பெண்கள் படைக்குத் தலைமையேற்று குயிலி கம்பீரமாக வந்தாள். எதிர்த்த மல்லாரிராயனையும், தன் கணவரைக்கொன்ற ஆங்கிலத் தளபதி ஜோசப் சுமித்தையும் கொன்றார், நாச்சியார். காளையார் கோயிலிலிருந்து சிவகங்கை அரண்மனை வரையிலும் அடிக்கு ஒரு போர் வீரனை நிறுத்தியிருந்தான். பீரங்கிகளும் அரண்மனையைச் சுற்றி நிறுத்தப்பட்டிருந்தன. ஆயிரக்கணக்கான துப்பாக்கிகளும் வெடிபொருட்களும் அரண்மனைக் கிட்டங்கியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. எத்தனை படைகள் இருந்தாலும், ஆங்கிலேயரின் நவீன ஆயுதங்கள் மிகப்பெரிய சவாலாக இருந்தது. தொடர் வெற்றிகளைக் குவித்துவந்த வேலுநாச்சியார் இறுதிப் போரில் தோற்றுவிட்டால் என்ன ஆவது?
.
 ''நாளை மறுநாள் விஜயதசமி. அன்று சிவகங்கைக் கோட்டையில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் கொலு வைக்கிறார்கள். இதைப் பார்ப்பதற்காக அன்று ஒருநாள் காலை மட்டும் பெண்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி ராணியாரின் தலைமையில் பெண்கள் படை கோட்டைக்குள் புகுந்துவிடும். பிறகு என்ன? வெற்றி, நமது பக்கம்தான்.” என்ற யோசனையைச் சொன்னாள், குயிலி.

போர்முரசு கொட்டட்டும் என ஆணையிட்டுச் சென்றார் வேலுநாச்சியார். வேலுநாச்சியாரும் சாதாரண பெண்போல மாறுவேடத்தில் கோயிலுக்குள் புகுந்தார். அவரது கண்கள் கோட்டையின் ஒவ்வொரு பகுதியையும் அலச ஆரம்பித்தது. ஆயுதங்கள் அனைத்தையும்  கோட்டையின் நிலா முற்றத்தில் குவித்து வைத்திருந்தனர் ஆங்கிலேயர்கள். ஒரு சில வீரர்களின் கையில் மட்டுமே ஆயுதங்கள் இருந்தன. வேலுநாச்சியார் கோட்டையை அளவெடுத்தது போலவே குயிலியின் கண்களும் அளவெடுத்தன. நிலா முற்றத்தில் குவிக்கப்பட்டிருந்த ஆயுதங்களைக் கண்டதும், அவளது மனதில் ஒரு மின்னல் யோசனை தோன்றியது. ஆனால், அந்த யோசனையை வெளியே சொன்னால் செயல்படுத்த அனுமதி கிடைக்காது என்பதை அறிந்திருந்த குயிலி, மெதுவாக ராணி வேலுநாச்சியாரைப் பிரிந்து கூட்டத்தோடு கலந்துகொண்டாள். கோட்டையில் பூஜை முடிந்து அனைவரும் கோட்டையை விட்டு வெளியேற ஆரம்பித்தபோது, பெண்கள் கூட்டமும் மெதுவாக கலையத் தொடங்கியது. வேலுநாச்சியார் தனது போரைத் தொடங்க இதுவே தருணம் என உணர்ந்து, கையைத் தலைக்குமேல் உயர்த்தி, “வீரவேல், வெற்றிவேல்!” என்று விண்ணதிர முழங்கினார்.  பெண்கள் படை புயலாய்ச் சீறியது. வழிபடக் கொண்டுசென்ற மாலைக்குள் இருந்து திடீரென பெண்களின் கைகளில் வாளும் வேலும் தோன்றின. ஆயுதங்களைச் சுழற்றி, வெள்ளையர்களை வெட்டிச்சாய்த்தனர்.

 “சார்ஜ்!” என்று கத்தியபடியே, பான்சோர் தன் இடுப்பில் இருந்த இரண்டு கைத்துப்பாக்கிகளை எடுத்து சரமாரியாகச் சுட்டான். வெள்ளைச் சிப்பாய்கள் ஆயுதக் குவியலை நோக்கி ஓடினர். வேலு நாச்சியார் பான்சோரைப் பிடிக்க மேல்மாடத்துக்குச் செல்வதற்குள் அங்கிருந்த யாரோ ஒரு பெண், தனது உடல் முழுக்க கொளுந்துவிட்டு எரியும் தீயோடு, “வீரவேல், வெற்றிவேல்” என்று கத்தியபடியே ஆயுதக்கிடங்கில் குதித்தாள். ஆயுதங்கள் அனைத்தும் தீ பிடித்து வெடித்துச் சிதறின. தப்பி ஓட முயன்ற பான்சோரை, வேலுநாச்சியாரின் வீரவாள் வளைத்துப் பிடித்தது. வெற்றி முழக்கம் எங்கும் ஒலித்தது. ஆனால் வேலுநாச்சியாரின் கண்களோ தன் உயிரான தோழி, குயிலியைத் தேடின.

 

 

 

 

போர் தொடங்கியபோது குயிலின் எண்ணம் ஆயுதக் கிடங்கின் மேல் நின்றது. “நமது விடுதலைக்கான இறுதிப்போர் இது. இதில் நாம் தோல்வி அடைந்தால், இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் வெற்றிபெற முடியாது. நான் வெற்றிக்கு வழிகாட்ட ஒளியூட்டப் போகிறேன்' என்று கூறியபடியே நாட்டின் விடுதலைப் போரில் தன்னை ஈந்தவர் குயிலிதான். உலகிலேயே முதன்முதலில் தற்கொலைத் தாக்குதலை நடத்திய பெருமையைச் சூடிக்கொண்டாள்.

மறவர் சீமையின் விடுதலைக்காக குயிலி தன்னையே பலி கொடுத்தாள் என்பதை அறிந்ததும், அந்தத் தியாக மறத்திக்காக வேலுநாச்சியாரின் வீர விழிகள் கரைந்தன. குயிலி போன்ற தியாகிகளின் ஒட்டுமொத்த சக்திதான் இந்தியாவுக்கு விடுதலை வழிகாண வைத்தது. குயிலியின் தியாகத்துக்குத் தலைவணங்குவோம்!

- கே.ஆர்.ராஜமாணிக்கம்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close