Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆடும் நாற்காலியில் அமர்ந்த தற்காலிக தலைமைகள்!

மாநில சட்டப்பேரவைகளை, ஜனநாயகம் என்னும் கட்டுமானத்தால் எழுப்பப்பட்ட குன்றுகள் எனலாம். ஆனால், குன்றுகள் தகர்க்கப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டால்; மாநிலத்தின் தலைமை ஆட்டம் கண்டால்; நீண்டநாட்கள் தலைமையே இல்லாமல் ஓர் அரசு இயந்திரம் ஸ்தம்பித்துக் கிடந்தால் அதனை எவ்வாறு மீட்டு எடுத்திருக்கின்றனர் ஜனநாயகத் தலைவர்களும் அரசியல்வாதிகளும்? இந்திய மக்களாட்சி வரலாற்றின் பக்கங்கள் அதற்கான பதில்களைத் தருகின்றன...

நிரந்தர தற்காலிக முதல்வர் நெடுஞ்செழியன்!

1967-ம் ஆண்டு மார்ச் 6-ம் தேதி தமிழகத்தில் தி.மு.க ஆட்சி அமைத்தது. 1969-ம் ஆண்டு பிப்ரவரி 3-ம் தேதி அண்ணா மறைந்தார். இதையடுத்து அரசு இயந்திரம் ஸ்தம்பிக்காதவகையில் மாற்று ஏற்பாடாக அண்ணாவின் அமைச்சரவையில் மூத்த அமைச்சரும் அன்றைய நிதியமைச்சருமான நெடுஞ்செழியன் தமிழ்நாட்டின் தற்காலிக முதல்வராகப் பதவியேற்றார். மிகக் குறைந்த காலமே அவர் அந்தப் பதவியை வகித்தார். அண்ணா மறைந்த அன்றைய தினமே பொறுப்பேற்ற நெடுஞ்செழியன், 8 நாட்கள் மட்டுமே அந்தப் பதவியில் நீடித்தார். பிப்ரவரி 10-ம் தேதியன்று பெரும்பான்மை எம்.எல்.ஏ-க்களின் முடிவாகச் சட்டமன்ற கட்சித் தலைவராக கருணாநிதி பொறுப்பேற்க, அவரே முதல்வராகவும் ஆனார்.

இதன்பின்னர் 1977-ல் எம்.ஜி.ஆர் தலைமையிலான அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தது. 1980-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்டு அப்போது நடந்த தேர்தலில் அறுதிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வந்தார் எம்.ஜி.ஆர். ஆனால், கடந்த 1984-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5-ம் தேதி எதிர்பாராதவிதமாக எம்.ஜி.ஆர் உடல்சுகவீனம் அடைந்தார். அப்போலோவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவரது கை, கால் சில தினங்களில் செயலிழந்த நிலையில் ஆரோக்கியமான ஒரு முதல்வராக அவர் செயல்படுவதில் சிக்கல் உண்டானது. அப்போது அரசியலமைப்புச் சட்டப்படியான பொறுப்பு வழங்கப்படாமல் கட்சியின் மூத்த அமைச்சர் மற்றும் எம்.ஜி.ஆருக்கு மிக நெருக்கமானவர் என்கிற முறையில் அரசு இயந்திரத்தை நெடுஞ்செழியன் வழிநடத்தினார். அப்போலோவில் இருந்து அமெரிக்காவின் ப்ருக்ளினின் டவுன்ஸ்டேட் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச்செல்லப்பட்ட முதல்வர் எம்.ஜி.ஆரின் உத்தரவுகளை நெடுஞ்செழியனே அந்தக் காலகட்டத்தில் தமிழக அரசில் செயல்படுத்தி வந்தார்.

கட்சியில் மற்ற சில மூத்த அமைச்சர்களின் குடைச்சல்களுக்கிடையில் அவர் செயல்பட நேர்ந்தது. தமிழக அரசை  15.11.1984 அன்று கவர்னர் குரானா கலைத்து உத்தரவிடும்வரையில் இது நீடித்தது. அப்போலோவில் இருந்து அமெரிக்கா செல்லும் ஏற்பாடுகளைக் கவனித்துக்கொண்டதும், டிசம்பர் 24-ல் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றம் இரண்டுக்கும் நடந்த தேர்தல் முடிவுகளின் பட்டியலை அமெரிக்கா சென்று எம்.ஜி.ஆரின் கைகளில் அளித்ததும் நாவலர் நெடுஞ்செழியன்தான். ஜனவரி முதல்வாரத்தில் நல்ல உடல்நலத்துடன் தாம் இருப்பதை நாவலர் மூலமே அதிகாரப்பூர்வமாக எம்.ஜி.ஆர் அறிவிக்கச் செய்தார். பின்னர், அமெரிக்காவில் இருந்து நல்ல உடல்நலத்துடன் வந்த எம்.ஜி.ஆர் தமிழக முதல்வராகப் பதவியேற்றார்.

இதனிடையே 1987 டிசம்பர் 24-ம் தேதி எம்.ஜி.ஆர் மரணமடைந்தார். அதற்கு சில மாதங்களுக்கு முன்பே கட்சியில் கோஷ்டி அரசியல் பிரச்னை உச்சத்தைத் தொட்டிருந்தது. ஆர்.எம்.வீரப்பன் மற்றும் ஜெயலலிதா கோஷ்டி கடும் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வந்தநிலையில் எம்.ஜி.ஆர் மறைவுக்குப்பின் மீண்டும் தற்காலிக முதல்வராக நெடுஞ்செழியன் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1988-ம் வருடம் ஜனவரி 7-ம் தேதிவரை மட்டுமே அந்தப் பொறுப்பை அவரால் தக்கவைக்க முடிந்தது. கட்சியில் எம்.ஜி.ஆரின் துணைவி ஜானகியம்மாள் தலைமையில் ஓர் அணியும், ஜெயலலிதா தலைமையில் ஓர் அணியும் எனப் பிரிந்திருந்த நிலையில் ஜெயலலிதாவின் ஆதரவாளராக நெடுஞ்செழியன் இருந்தார். எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கையில் ஜானகி அணி, 97 பேரைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த நிலையில்... ஜானகியை முதல்வராகத் தேர்ந்தெடுத்து, கவர்னருக்குக் கடிதம் கொடுத்தனர் அவர்கள். நெடுஞ்செழியன் தற்காலிக முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதேசமயம், ஜானகியின் தலைமையிலான அமைச்சரவை 1988, ஜனவரி 6-ம் தேதி பதவியேற்றது. இதுவும் அற்பாயுசில் தங்கள் ஆட்சியை இழந்தது. ஆம் பதவியேற்று 24 நாட்கள் மட்டுமே ஆட்சி நடத்தியது ஜானகி தலைமையிலான அ.தி.மு.க. அப்போது நடந்த களேபரங்களுக்கு மத்தியில், குடியரசு தலைவர் ஆட்சி தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டது. அடுத்து, கருணாநிதி முதல்வராகும் வரை சுமார் ஒரு வருடகாலம் ஜனாதிபதி ஆட்சி தமிழ்கத்தில் இருந்தது.

பொறுப்பு முதல்வர் இல்லாத நிலையில்...

அரசியலமைப்புச் சட்டம் 356, இந்திய ஜனநாயகத்தில் என்றைக்குமே வாதத்துக்குரியதுதான். அரசியலமைப்புச் சட்டம் 278 ஆக, அதனை முதலில் வடிவமைத்த சட்டமேதை அம்பேத்கர், ஆர்டிகல் 356-ஐ இந்திய ‘ஜனநாயகத்தின் இறப்புக் கடிதம்’ எனக் குறிப்பிடுகிறார்.

ஒரு மாநிலத்தின் முதல்வரைத் தேர்ந்தெடுக்க முடியாத சூழலிலோ, பொறுப்பு முதல்வர் அல்லது தற்காலிக முதல்வர் இல்லாத நிலையிலோ, கூட்டாட்சி முறை நீர்த்துப்போனாலோ, குறிப்பிட்ட கட்சி தனது பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறினாலோ அல்லது தேர்தல் ஒத்திவைக்கப்பட்டாலோ ஜனாதிபதி ஆட்சியை மாநிலங்களில் நடைமுறைப்படுத்தலாம் என்பதுதான் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 356-ன் சாராம்சம். அந்த அடிப்படையில் இதுவரை நம் நாட்டில் உள்ள மாநிலங்களில் மொத்தம் 125 முறை ஜனாதிபதி ஆட்சி அமலில் இருந்துள்ளது. இதில், ஒரு மாநில முதல்வரின் மறைவாலோ அல்லது அவருக்கு ஆட்சியைக் கவனித்துக்கொள்ள முடியாத அளவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டாலோ ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது ஒருமுறைதான்.

மேற்கு வங்கத்தில்...

அரசியல் சாசனம் இயற்றப்படாத நிலையில் வங்காளத்தின் தலைவராக இரண்டு வருடங்களும் பிறகு, பன்னிரெண்டு வருடங்களும் தொடர்ந்து மேற்கு வங்கத்தின் முதல்வராக இருந்த பிதன் சந்திர ராய் (பி.சி.ராய்) 1962 ஜூலை மாதம் வயது முதிர்ச்சியால் மறைந்த நிலையில், அப்போது தனித்த ஆட்சி அதிகாரத்தில் இருந்த இந்திய தேசிய காங்கிரஸ் அரசு, தனது அடுத்த முதல்வரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாரகால அவகாசம் எடுத்துக்கொண்டது. இந்த நிலையில் அரசின் இயங்குநிலையைக் கவனிக்க அப்போதைய ஜனாதிபதியாக இருந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணனிடம் குறிப்பிட்ட ஒரு வாரகாலத்துக்கான ஆட்சியதிகாரம் ஒப்படைக்கப்பட்டது. வங்காளத்தின் அடுத்த முதல்வராக பிரஃபுல்ல சந்திர சென் பதவியேற்கும் வரை சட்டம் அமலில் இருந்தது. பல்வேறு காரணங்களுக்காக நான்கு முறை ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்ட மேற்கு வங்கத்தில், முதல்முறையாக 356 அமல்படுத்தப்பட்டது சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ஜனாதிபதியாக இருந்த சமயத்தில்தான்.

காஷ்மீர் அரசியலமைப்புச் சட்டம் 92-ம்... முப்தி முகமது மறைவும்!

1956-ல் நடைமுறைப்படுத்தப்பட்ட காஷ்மீர் அரசியல் அமைப்புச் சட்டம் இன்றளவும் நடைமுறையில் இருக்கும் நிலையில், அதன் ஆட்சியதிகாரத்தில் குளறுபடி ஏற்படும்போது, ஜனாதிபதியின் அனுமதியுடன் காஷ்மீர் மாநில ஆளுநராக இருப்பவர் அரசை இயக்கலாம் என்கிறது காஷ்மீர் அரசியல் அமைப்புச் சட்ட எண் 92. சென்ற வருட டிசம்பர் இறுதியில் உடல்நலக் குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அதன் அப்போதைய முதல்வர் முப்தி முகமது சையத். சுமார் ஒருவார காலம் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அவர், செப்சிஸ் நோய் மற்றும் பல்வேறு உடலுறுப்புகள் செயலிழந்ததன் பாதிப்பினால் ஜனவரி 7, 2016 அன்று இறந்தார். முப்தியின் ஜம்மு - காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் இணைந்து பி.ஜே.பி-யும் ஜம்முவின் ஆட்சியதிகாரத்தில் இருந்தது. முப்தி இறந்துவிட்ட நிலையில், அடுத்து ஆட்சியதிகாரம் யாரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்கிற கேள்வி எழுந்தது? முப்தி முகம்மதுக்கு அடுத்து, மெஹபூபா முப்திதான் ஆட்சி அதிகாரத்துக்கு வரவேண்டும் என்று மக்கள் ஜனநாயகக் கட்சி ஒருமனதாக தெரிவித்த நிலையில், அந்தக் கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக மெஹபூபா ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில் அவரையே முதல்வராக்க பி.ஜே.பி சம்மதம் தெரிவிக்குமா என்ற கேள்வியும் எழுந்தது. இரு தரப்பினரிடையேயும் மார்ச் 2016-ல் பலகட்ட சந்திப்பு நிகழ்ந்தது. அதனையடுத்து, ஏப்ரல் 2016-ல் பி.ஜே.பி-யின் ஆதரவுடன் மெஹபூபா முப்தி ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் முதல் பெண் முதலமைச்சராகத் தேர்ந்து எடுக்கப்பட்டார். ஜனவரி தொடங்கி ஏப்ரல் மாதம் மெஹபூபா பதவியேற்கும் காலம் வரையிலான இடைப்பட்ட மாதங்கள் ஆளுநர் என்.என்.வோரா தலைமையில் அங்கு ஆட்சி நடைபெற்றது. அந்த மாநிலத்தில் அது ஏழாவது முறையாக அமல்படுத்தப்பட்ட கவர்னர் ஆட்சி என்பதும் குறிப்பிடத்தக்கது.

- கிருபாகரன், ஐஷ்வர்யா

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ