Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா நேரடி எச்சரிக்கை; இந்தியாவுக்குப் பெருகும் ஆதரவு!

ந்திய எல்லைக்குள் பயங்கரவாதத் தாக்குதல்களை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்த கொண்டிருக்கிறது.

பஞ்சாப் மாநிலம் பதான்கோட் இந்திய விமானப் படைத்தளத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியது, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி ராணுவ முகாமில் புகுந்து 18 இந்திய ராணுவ வீரர்களை சுட்டுக்கொன்றது, பாம்போர் அரசு அலுவலகக் கட்டடத்துக்குள் புகுந்து தாக்குதல்  போன்ற தொடர் பயங்கரவாதத் தாக்குதல்களை பாகிஸ்தான் ஆதரவுடன், அந்நாட்டிலிருந்து ஊடுருவிய பயங்கரவாதிகள் திட்டமிட்டு அரங்கேற்றினர்,  இந்தத் தாக்குதல்களை எல்லாம் இந்திய பாதுகாப்புப் படையினர் அவ்வப்போது, முறியடித்தனர்.

உரி ராணுவ முகாம் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் அதிரடியாகப் புகுந்து 'சர்ஜிகல் ஸ்டிரைக்' தாக்குதலை நடத்தியது.  பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியதற்கு பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனங்கள் எழுந்தபோதிலும், உலக நாடுகள் பலவும் இந்தியாவின் தாக்குதலை ஆதரித்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான  இந்தியாவின் நடவடிக்கையை அமெரிக்கா பாராட்டியிருப்பதுடன், பாகிஸ்தானுக்கு எச்சரிக்கையையும், கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.

பயங்கரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்கா மீண்டும் கடுமையாக, நேரடி எச்சரிக்கை விடுத்துள்ளது."பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள். பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புக்களுக்கு தடை விதியுங்கள். பயங்கரவாதிகள் நடமாட்டம் உள்ள பகுதிகளை அழியுங்கள்" என்று அமெரிக்கா அதிகாரப்பூர்வமாகக் கேட்டுக்கொண்டுள்ளது.

அத்துடன் நிற்காமல், "மும்பை தாக்குதலுக்குக் காரணமான பயங்கரவாதிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். மும்பை தாக்குதலுக்கு நியாயம் கிடைக்க தேவையான நடவடிக்கைகளை பாகிஸ்தான் உடனடியாக எடுக்க வேண்டும்" என்றும் அமெரிக்கா வெளியிட்ட எச்சரிக்கையில் தெரிவித்துள்ளது.

அண்டை நாட்டில்  பயங்கரவாதத்தை தொடர்ந்து ஏவி விடும் பாகிஸ்தானை உலக நாடுகள் தனிமைப்படுத்த வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கைக்கு வலு சேர்க்கும் வகையில் அமெரிக்காவின் இந்த எச்சரிக்கை அமைந்துள்ளது.
அமெரிக்காவின் நேரடி எச்சரிக்கை, பாகிஸ்தானுக்கு உலக நாடுகள் மத்தியில் ஏற்கெனவே உள்ள நெருக்கடியை மேலும் அதிகப்படுத்தி உள்ளது. இனிமேலாவது பயங்கரவாதத் தாக்குதல்களை பாகிஸ்தான் நிறுத்திக்கொண்டால் சரி!

- சி.வெங்கட சேது

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ