Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மும்பை 26/11 தாக்குதல் ; கடைசி வீரனும் மரணம்!

கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், தாஜ் ஹோட்டல் உள்ளிட்ட பல இடங்களில் தீவிரவாதிகள் தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 164 பேர் உயிரிழந்தனர். 308 பேர் காயமுற்றனர். இந்தியா மட்டுமல்ல உலக நாடுகளே இந்த தாக்குதல் சம்பவத்தால் அதிர்ந்து போயின.  தாக்குதல் சம்பவத்தின்போது மும்பை வெடிகுண்டு தடுப்பு பிரிவில் பணியாற்றிய டைகர், சுல்தான், மேக்ஸ், சீசர் ஆகிய மோப்ப நாய்கள் அதிரடிப் படையினருக்கு பெரிதும் உதவியாக இருந்தன.

கடந்த 2013-ம் ஆண்டு ஓய்வுக்கு பிறகு இந்த மோப்ப நாய்கள் விரார் என்ற இடத்தில் உள்ள கால்நடை பராமரிப்பு மையத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன. கடந்த சில மாதங்களில் சுல்தான், மேக்ஸ் இறந்தன. கடந்த ஏப்ரல் மாதத்தில் சீசரின் நெருங்கிய நண்பரான டைகரும் இறந்து விட்டது. டைகர் இறந்ததில் இருந்து சீசர் சரியா உணவு உட்கொள்ளாமல் அடம்பிடித்து வந்தது. மன அழுத்தத்திலும் இருந்துள்ளது. இதையடுத்து ஜூன் மாதம் பரேலில் உள்ள  கால்நடை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது.

சிகிச்சைக்குப் பின் மீண்டும் பராமரிப்பு மையத்திடம் ஒப்படைக்கப்பட்ட சீசர்  செவ்வாய்க்கிழமை காலை மரணம் அடைந்தது. சீசரின் உடல் மீது தேசியக் கொடி போர்த்தப்பட்டு,  உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. 'துணிச்சல், எச்சரிக்கை, திறமை  மிகுந்த சீசரை இழந்து விட்டோம். ஆனால், அதன் சேவைகளை என்றும் நினைவு கொள்வோம்'' என மும்பை போலீஸ் கமிஷனர் தத்தா பட்சாலிகர் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கடந்த 2005-ம் ஆண்டு மும்பை வெடிகுண்டு தடுப்பு பிரிவில் சீசர் பணிக்கு சேர்ந்து திறமையாகப் பணிகளை மேற்கொண்டு வந்தது. கடந்த 2013-ம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றது. நவம்பர் 26-ம் தேதி மும்பையில் நடந்த தாக்குதலின்போது, சத்ரபதி சிவாஜி டெர்மினலில் தீவிரவாதிகள் விட்டுச் சென்ற 2 கிரெனைடு குச்சிகளை சீசர் கண்டெடுத்தது. இதனால் பலரது உயிர்கள் காப்பற்றப்பட்டன. தீவிரவாதிகள் 3 நாட்கள் பதுங்கியிருந்த நரிமன் ஹவுசிலும் அதிரடிப் படையினருக்கு உதவியாக சீசர் பணியாற்றியது. கடந்த 2006-ம் ஆண்டு மும்பை ரயில்களில் நடந்த தொடர்ச்சியாக குண்டுவெடிப்பு சம்பவங்களிலும் சீசர் போலீசாருக்கு பேருதவியாக பணியாற்றியது. மரணமடைந்த சீசருக்கு தற்போது வயது 13 ஆகிறது.

சீசரின் மரணம் குறித்து அதனை பராமரித்து வந்த பிஷ்ஷா ஷா கூறுகையில்,  'சுல்தான் இறந்ததால். மேக்சும் டைகரும்  மன அழுத்தத்தில் சிக்கி உயிரிழந்தன. கடைசியில் இப்போது சீசரும் இறந்து விட்டது.  இறப்பதற்கு முன் சில நாட்கள்  மிகவும் பலவீனமாக சீசர் காணப்பட்டது. நாங்கள் அதற்குப் பிடித்த சிக்கன், அரிசி உணவு, பிஸ்கட்டுகளை வழங்கினோம். அவற்றை உண்டாலும் மன அழுத்தத்தில் இருந்து எங்களால் அதைனை  மீட்க முடியவில்லை'' என்றார்.

- எம்.குமரேசன்

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ