Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைக்கு ரஷ்யா ஆதரவு! மோடி பெருமிதம் 

பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ரஷ்ய அதிபர் புடின் இந்தியா வந்துள்ளார். முதல் நிகழ்வாக இந்தியா - ரஷ்யா வருடாந்திர கூட்டம் நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் புடின் கலந்து கொண்டனர். 

இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பு மற்றும் ஆலோசனைக்குப் பிறகு இந்தியா - ரஷ்யா இடையே பல்வேறு முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இவற்றில் கூடங்குளம் புதிய அணுஉலை, அரியானா மற்றும் ஆந்திராவில் ஸ்மார்ட் சிட்டி, சைபர் பாதுகாப்பு, அறிவியல்-தொழில் நுட்ப ஒப்பந்தம், போர் தளவாடங்கள் கொள்முதல் உள்ளிட்ட 16 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. முக்கியமாக கையெழுத்தான ஒப்பந்தங்களில் ரூ.39,000 கோடி மதிப்பிலான அதிநவீன ஏவுகணை வாங்கும் ஒப்பந்தமும், 200 காமோவ் ஹெலிகாப்டர்களை தயாரிக்கவும் ஒப்பந்தம் அடங்கும். 

இதனைத்தொடர்ந்து கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3வது மற்றும் 4வது அணுஉலைகள் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 

ஒப்பந்த நிகழ்ச்சியில் பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், " பிரிக்ஸ் மாநாட்டில் கலந்த கொள்ள இந்தியா வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மின்தேவையை பூர்த்தி செய்வதில் கூடங்குளம் அணுஉலை மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கும். இரு நாடுகளின் தொழில் நிறுவனங்கள், ராணுவம், தொழில்நுட்ப இணைப்பு இன்னும் வலுவடைந்துள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்திற்கு ரஷ்யா, தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது பயங்கரவாதத்தை எதிர்த்து இந்தியா - ரஷ்யா இணைந்து போராடும். பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்களை எந்த விதத்திலும் பொறுத்துக் கொள்ள முடியாது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில், இந்தியாவின் வேதனையை ரஷ்யா உணர்ந்துள்ளது" என்று கூறினார். 

தொடர்ந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, " இந்தியா - ரஷ்யா இடையே மிகச் சிறந்த நட்புணர்வு இருக்கிறது. இதன் காரணமாகவே, இந்தியாவும் - ரஷ்யாவும் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கிறது. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப குழுக்களை அமைப்பதன் மூலம் இருநாட்டு மக்களும் பயன் பெறுவார்கள். இரு நாடுகளிடையேயான வர்த்தக மற்றும் முதலீடு சார்ந்த அம்சங்கள் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டு இருக்கிறது. முக்கியமாக, பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைக்கு ஆதரவு அளிக்கும் ரஷ்யாவுக்கு, பாராட்டுத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பெருமையோடு பேசினார்.

- ரா.வளன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ