Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

''உள்நாட்டு பால்...பிரேசில் மாடு''- பதஞ்சலியின் அடடே சுதேசி ப்ளான்


 

லப்படமற்ற, உள்நாட்டுத் தயாரிப்பு என்ற பிராண்டிங் மூலம் இந்தியச் சந்தையில் களம் இறங்கி சக்கைப் போடு போட்டுக்கொண்டிருக்கிறது பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவன பொருட்கள்! 'நாங்கள் தயாரிப்பது சுத்த சுதேசிப் பொருட்கள்' என பதஞ்சலி நிறுவனம் பெருமை பேசிக்கொண்டிருக்கும் வேளையில், இந்த நிறுவனத்தின் ஒருமுடிவு அதன் அடிப்படைத் தத்துவத்தையே ஆட்டம் காண வைத்துள்ளது.

''வெளிநாட்டு நிறுவனங்கள் ரசாயனம் மற்றும் செயற்கைச் சுவைகள் கலந்தப் பொருட்களை விற்று இந்திய மக்களை ஏமாற்றி வருகின்றன'' என தனது பதஞ்சலி நிறுவனத்தை ஆரம்பிக்கும்போது வெளிநாட்டு நிறுவனங்களை கடுமையாகச் சாடியிருந்தார் ராம்தேவ். பண்டைய ஆயுர்வேதம் மற்றும் தேசியவாதப் பெருமையை நிலைநிறுத்தி, பதஞ்சலி நிறுவனத்தை 2006-ல் ஆரம்பித்தார் ராம்தேவ். முதலில் மருத்துவம் சார்ந்தப் பொருட்களை மட்டும் மையப்படுத்தி களத்தில் இறங்கிய பதஞ்சலி நிறுவனம் சிறிது காலத்தில் நெய், தேன், நூடுல்ஸ், அழகு சாதனப் பொருட்கள், பிஸ்கட், கார்ன்பிளக்ஸ் என மக்களின் அன்றாட நுகர்வுப் பொருட்களைக் குறிவைத்து தயாரிக்க ஆரம்பித்தது. 

'கலப்படமற்ற உள்நாட்டுப் பொருட்கள், சுதேசிப் பொருட்கள்' என்ற தொடர் பிராண்டிங் மூலம்  மிகவிரைவில் பெரும்பாலான வீடுகளில், பதஞ்சலி நிறுவனப் பொருட்கள் ஆக்கிரமித்தன. நெஸ்லே,யுனிலிவர் போன்ற பன்னாட்டுப் பெரு நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளி, இந்தியச் சந்தையைப் பதஞ்சலி கைப்பற்றியதன் முக்கியக் காரணம் இந்த பிராண்டிங் தான். நாடுமுழுவதிலும் 5,000 நேரடி விற்பனை நிலையங்கள், 15,000 டீலர்கள், ஆன்லைன் வர்த்தகம் எனத் தழைத்து நிற்கும் பதஞ்சலி நிறுவனம், 2015-16-ல் ரூ.5000 கோடி லாபம் ஈட்டியுள்ளது.  நடப்பு  ஆண்டின்  வருமானம் 10,000 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பதஞ்சலி நிறுவனத்தின் 'உள்நாட்டு' பிராண்டிங்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே பதஞ்சலி நெய் பிஸினஸ் அமோகமாக போய்க்கொண்டிருக்கும் நிலையில் அடுத்தக்கட்டமாக பால், மோர், பனீர் போன்ற பால் சந்தையில் குதிக்க உள்ளது பதஞ்சலி.

இந்தியா உலகப் பால் உற்பத்தியில் 18.5% பங்களிக்கிறது, உலகின் மிகப் பெரிய பால் உற்பத்தியாளராக இந்தியா இருந்தாலும், இந்தியக் கறவை மாடுகளின் பால் உற்பத்தி மந்தமாக உள்ளதாம். இந்நிலையில் உயர் உற்பத்தித்திறன் கொண்ட பிரேசிலிய எருதுகளின் விந்துக்களை இறக்குமதி செய்து, இந்திய மாடுகளுடன் இனக்கலப்பு செய்ய பதஞ்சலி நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதனால் இந்தியா மாடுகளின் பால் உற்பத்தி திறன் பலமடங்கு அதிகரிக்கும் என பதஞ்சலி எதிர்பார்க்கிறது. இதற்காக CRV என்ற டச் உயிரியல் நிறுவனத்திடம்  பதஞ்சலி  விரைவில் ஒப்பந்தம் போட உள்ளது. 

கால்நடைகளின் விந்து, கருக்கள் உட்பட மரபணுப் பொருட்களையும் விற்பனை செய்வதில் நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனம் CRV. அதிக உற்பத்தித்திறன் கொண்ட வெளிநாட்டு மாடுகளை நம்பியுள்ள பதஞ்சலி, இனி சுதேசி நிறுவனம் என எப்படி கூறிக்கொள்ள முடியும்?

ஆக, வணிகத்தில் தத்துவம், சித்தாந்தம் பார்க்கக்கூடாது என்பதைத் 'தொழிலதிபர்' பாபா ராம்தேவ் உணர்ந்துவிட்டார் என்பது மட்டும் தெளிவாகிறது!

- ஆ.நந்தகுமார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ