Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜெய் ஜவான்: சுற்றி வளைக்காத சுளீர் பதிலடி..! - எரியும் எல்லைக்கோடு! 4 - ஆர்.முத்துக்குமார்

ட்ச் பகுதியில் கையாண்ட யுக்தியைக் காஷ்மீர் முனையிலும் பயன்படுத்தி வெற்றிக்கனியைச் சுவைக்கும் கனவோடு வந்திறங்கியது பாகிஸ்தான் ராணுவம். ஆனால், அங்கே அவர்களுக்கு ஓர் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது இந்தியா.

‘‘ஒருபக்கம், ஆக்நூரில் யுத்தம் நடந்துகொண்டிருக்கட்டும்... இன்னொரு பக்கம், லாகூர் நோக்கி ஒரு படை செல்லட்டும்’’ என்று உத்தரவிட்டார் இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி. ஆம், நீட்டுகின்ற வாலை ஒட்ட நறுக்குவது என்ற தீர்மானமான முடிவுக்கு வந்திருந்தார் சாஸ்திரி. அந்த வேகத்தில் உருவான முழக்கம்தான், ‘ஜெய் ஜவான், ஜெய் கிசான்’. ‘‘அப்படியே ஆகட்டும்’’ என்று சொல்லி, லாகூர் நோக்கி ஆவேசத்துடன் அணிவகுக்கத் தொடங்கியது இந்திய ராணுவம்.

 

 

மெய்யான அதிரடி என்றால் இதுதான். ‘லாகூரைப் பிடிக்க வருகிறார்கள்’ என்றதும் பாகிஸ்தான் ஆட்சியாளர்களைப் பதற்றம் பற்றிக்கொண்டது. என்ன நடக்கிறது எல்லையில்? ஊடுருவி வந்த எதிரிகளைத் தாக்குவது மட்டும்தானே இதுவரை இந்திய ராணுவம் செய்துவந்த காரியம். அதை நம்பித்தானே ஆயுதத்தையே தூக்கினோம். இப்போது என்ன ஆயிற்று அவர்களுக்கு? புதிதாக எல்லை கடந்துவந்து எதிரிகளைத் தாக்குகிறார்கள்… யார் கொடுத்த தைரியம்... எங்கிருந்து வந்த துணிச்சல்?

ஆவேசமான கேள்விகளை எழுப்பினாலும் அடுத்து என்ன செய்வது என்று அயூப்கானுக்கும் தெரியவில்லை. புட்டோவுக்கும் புரியவில்லை. காரணம், எல்லை கடந்த தாக்குதலை எதிர்கொள்வதற்கான ஏற்பாடுகள் எதையும் அவர்கள் செய்திருக்கவில்லை. சேணம் கட்டிய குதிரையாக காஷ்மீரை மட்டுமே குறிவைத்துச் சென்றிருந்ததன் விளைவு, அது என்பது அப்பட்டமாகத் தெரிந்தது. ஆனாலும், வருவதை எதிர்கொள்வதுதானே போரியல் நியதி. காஷ்மீர் எல்லையில் களப்பணியாற்றிவந்த பாகிஸ்தான் ராணுவத்தினரை லாகூர் பக்கம் திருப்பிவிட்டனர்.

6 செப்டம்பர் 1965. இந்தியா – பாகிஸ்தான் இடையேயான இரண்டாவது யுத்தம் பேருருவம் கொண்டது. ஆம், காஷ்மீர் எல்லை, பஞ்சாப் எல்லை என்ற இருமுனைகளிலும் யுத்த நெருப்பு பற்றி எரியத் தொடங்கியது. இருதரப்பிலும் பெருமளவு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. அமெரிக்காவிடம் இருந்து வாங்கிவைத்திருந்த பேட்டர் எம் 47 மற்றும் 48 ரக பீரங்கிகளைப் பயன்படுத்தியது பாகிஸ்தான். பதிலுக்குத் தம் வசமிருந்த எம் 4 ஷெர்மன் ரக பீரங்கி கொண்டு எதிர்த்தாக்குதல் நடத்தியது இந்தியா.

போரில் யாருக்கு முன்னேற்றம், யாருக்குப் பின்னடைவு என்பன குறித்த ஆர்வமூட்டும் விவாதங்கள் இருநாடுகளிலும் இடைவிடாமல் நடந்துகொண்டிருந்தன... இரு தரப்பிலும் உயிர்ச்சேதங்கள் இருந்தன. அதிக அளவிலான டாங்கிகள் பயன்படுத்தப்பட்ட யுத்தம் என்பதால், இந்த யுத்தத்தைக் கவலையுடன் கண்காணிக்கத் தொடங்கின உலக வல்லரசு நாடுகள்.

அவசரமாகக் கூடிய ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் போர் நிறுத்தம் செய்வதற்கான யுக்திகள் குறித்து விவாதித்தது. இரண்டு நாடுகளும் தங்களுக்கான போர் நிறுத்த எல்லைக்கோட்டைத் தாண்டி வரக் கூடாது. குறிப்பாக, ஆக்கிரமிப்பு எண்ணத்துடன் வரவே கூடாது என்று வழமையான தீர்மானத்தைப் புத்தாக்கம் செய்து நிறைவேற்றியது.

தீர்மானம் நிறைவேற்றியதோடு நிறுத்திக்கொள்ளாமல் ஐக்கிய நாடுகள் சபையின்  பொதுச்செயலாளர் யூ தாண்ட் நேரில் வந்து இருநாட்டுத் தலைவர்களிடமும் பேசினார். முதலில், பாகிஸ்தான் ஆட்சியாளர்களிடம் பேசினார்... அடுத்து, இந்தியத் தரப்பிடம் பேசினார். ஆனால், கட்ச் வளைகுடாவை வளைத்த கதையும் காஷ்மீரைக் கபளீகரம் செய்த முயற்சியும் பேரன்புகொண்ட பிரதமர் சாஸ்திரியைப் பெருங்கோபம் கொண்டவராக மாற்றியிருந்தது. யுத்த நிறுத்தம் பற்றி மூச்சே விடவில்லை.

இது, பாகிஸ்தானைக் காட்டிலும் சீனாவுக்குத்தான் அதிக ஆத்திரத்தைக் கொடுத்ததுபோல. ‘இந்தியா, படைக்குவிப்பை நிறுத்தாவிட்டால், கடும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்’ என்று எச்சரிக்கை விடுத்தது. ஆனால், அதற்கு இந்தியா தரப்பில் பதில் சொல்வதற்கு முன்னர் இங்கிலாந்தும் அமெரிக்காவும் எதிர்வினையாற்றின. ‘இருநாட்டுப் போரில் சீனா தலையிடும்பட்சத்தில் இங்கிலாந்தும் அமெரிக்காவும் இந்தியாவின் பக்கம் நிற்கவேண்டியிருக்கும்’ என்றன.

ஒருவேளை, சீனாவே ஆதரவு கொடுத்தாலும், ஆயுதம் கொடுத்தாலும் யுத்தத்தைத் தொடர முடியும் என்றோ, வெற்றியை சுவாசிக்கமுடியும் என்றோ அயூப்கான் நம்பவில்லை. புட்டோவுக்கும் அது புரிந்திருந்தது. ஆகவே, பறக்கின்ற சமாதானக் கொடிக் கம்பங்களைப் பற்றிக்கொண்டு போர் நிறுத்தம் செய்துகொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தனர். ஆனால் அதை எப்படிச் செல்வது என்று தெரியாமல் கையைப் பிசைந்துகொண்டிருந்தனர்.

அந்தச் சமயம் பார்த்து ஐக்கிய நாடுகள் சபை அடுத்த தீர்மானத்தை அவசரமாக நிறைவேற்றியது. 20 செப்டம்பர் 1965 அன்று நிறைவேற்றப்பட்ட அந்தத் தீர்மானம் போர் நிறுத்தத்துக்கு இரண்டு நாட்கள் கெடு விதித்தது. அதற்காகவே காத்துக்கொண்டிருந்த பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்துகொள்ளச் சம்மதம் தெரிவித்தது. சர்வதேச அழுத்தங்கள் ஒருபக்கம் இருந்தாலும், போர்க்களத்தில் கிடைத்த வெற்றி பிரதமர் சாஸ்திரியின் மனதை லேசாக்கியிருந்தது. ஆகவே, அவரும் இறங்கிவர இசைவு தெரிவித்திருந்தார்.

என்னதான் தோல்விமுகம் வந்தாலும் அதைக் காட்டிக்கொள்ளாமல் பேசினார் ஜுல்ஃபிகர் அலி புட்டோ. ‘‘பாகிஸ்தான் இன்னும் ஓராயிரம் ஆண்டுகள்கூட போரிடத் தயாராக இருக்கிறது. எல்லைகளைக் காப்பாற்ற எதையும் செய்யத் தயாராகவே இருக்கிறோம்” என்றார் அவர்.

அவர் எல்லை என்று சொன்னது காஷ்மீரையும் சேர்த்து என்பது எல்லோருக்கும் புரிந்த ஒன்று. அது சாஸ்திரிக்குப் புரியாதா என்ன… ஆகவே, அவருடைய எதிர்வினை சற்றுக் காட்டமாகவே இருந்தது. ‘‘இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி காஷ்மீர் என்பதில் கேள்வியோ, சந்தேகமோ எழுப்ப எவரையும் அனுமதிக்க முடியாது என்பதே எங்கள் நிலை” - சுற்றி வளைக்காத சுளீர் பதிலடி.

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி முயற்சிகளின் பலனாக 22 செப்டம்பர் 1965 அன்று போர் நிறுத்தம் ஏற்பட்டது. இருதரப்பு சேதங்களும் மதிப்பிடப்பட்டபோது பல ஆச்சர்யங்கள் காத்திருந்தன. பாகிஸ்தான் தரப்பில் 3,000 முதல் 5,000 பேர் வரை மரணம் அடைந்திருந்தனர். அதைக்காட்டிலும் அதிக எண்ணிக்கையிலான இந்திய வீரர்கள் களபலி ஆகியிருந்தனர். சுமார் 250 டாங்கிகளை இழந்திருந்தது பாகிஸ்தான். அதைவிடச் சற்றுக் கூடுதலான சேதம் இந்தியாவுக்கு. என்றாலும், யுத்தத்தின் மையப்பகுதி, இறுதிப் பகுதியில் இந்தியாவின் கையே ஓங்கியிருந்தது. சர்வதேச நாடுகள் தலையிடாமல் இருந்திருக்கும் பட்சத்தில், இந்தியா இன்னும் பல வெற்றிகளைப் பெற்றிருக்கக்கூடும்.

மற்போர் முடிந்ததும் சொற்போர் நடத்துவது இயல்பு. அன்றைய சோவியத் ரஷ்யாவின் தாஷ்கண்ட் நகரில் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தார் சோவியத் பிரதமர் கோசிஜின். பேச்சுவார்த்தையின் பலனாக, ‘தாஷ்கண்ட் பிரகடனம்’ என்ற பெயரில் கூட்டறிக்கை வெளியானதும், அன்றிரவே பிரதமர் சாஸ்திரி மரணம் அடைந்ததும் வரலாறு.

சாஸ்திரியின் மரணம், இந்தியாவுக்கு இந்திரா காந்தி என்ற புதிய ஆட்சியாளரை அறிமுகம் செய்தது. அவர் பிரதமராகப் பதவியேற்ற ஆறாவது ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் உரசல் உச்சம் தொட்டது. அதற்கு முக்தி பாஹினி முகம் கொடுத்தது!

இந்த தொடரின் முந்தைய பகுதிகளை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆர்.முத்துக்குமார்

(பதற்றம் தொடரும்)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close