Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிரிக்ஸ் மாநாடு...! இந்தியாவுக்கு என்ன லாபம்....?

கோவாவில் பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற இரண்டுநாள் மாநாடு, பயங்கரவாதத்துக்கு எதிரான 'கோவா பிரகடனத்துடன்' வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளளது.

எட்டாவது பிரிக்ஸ் மாநாட்டுடன், வங்கதேசம், மியான்மர், இலங்கை உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ள 'பிம்ஸ்டெக்' அமைப்பின் ஒருங்கிணைப்பு மாநாடும் நடைபெற்று முடிந்துள்ளது. இம்மாநாட்டில், பயங்கரவாதத்துக்கு எதிரான உறுதியான நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பது சிறப்பம்சம் ஆகும் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கியதே பிரிக்ஸ் (BRICS) அமைப்பாகும். இந்த அமைப்பின் உறுப்பு நாடுகள் ஏதாவதொன்றில், இந்த நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் மாநாடு ஆண்டுதோறும் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு, இந்தியாவின் புகழ்பெற்ற சுற்றுலா நகரமான கோவாவில் பிரிக்ஸ் மாநாடு நடைபெற்றது.

இம்மாநாட்டில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரேசில் அதிபர் மைக்கேல் தேமர், தென் ஆப்ரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா ஆகியோர் கலந்து கொண்டனர். இம்மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையில், பாகிஸ்தானை  பெயர் குறிப்பிடாமல் குற்றம்சாட்டினார். "பயங்கரவாதத்துக்கு ஆதரவான பாகிஸ்தான் அரசின் கொள்கை, உலக நாடுகளுக்கு ஒட்டுமொத்த அச்சுறுத்தலாக விளங்குகிறது. பாகிஸ்தான் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாவிட்டால், அந்நாட்டை உலக அளவில் தனிமைப்படுத்த வேண்டியது அவசியம். பயங்கரவாதத்தின் தாயகமாக பாகிஸ்தான் விளங்குகிறது" என்று மோடி கடுமையாக சாடினார். 

பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானின் அணுகுமுறையைக் கண்டிப்பதுடன், பயங்கரவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டியது பிரிக்ஸ் நாடுகள் மட்டுமல்லாது உலக நாடுகளின் தலையாய கடமை என்றும் பிரதமர் கண்டிப்புடன் தெரிவித்தார்.  மாநாட்டில் நிறைவுரை ஆற்றிய பிரதமர், "அமைதி மற்றும் பாதுகாப்பு விவகாரத்தில் பிரிக்ஸ் நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட உறுதி பூண்டுள்ளன. பயங்கரவாதத்தை விட அதற்கு நிதி உதவி அளிப்பவர்கள், ஆதரிப்பவர்கள், பாதுகாப்பவர்கள் தான், அதிக அச்சுறுத்தலானவர்கள்" என்றார்.

பிரிக்ஸ்  நாடுகளிடையே பாதுகாப்பை வலுப்படுத்த சம்பந்தப்பட்ட நாடுகளின் தலைவர்கள் முன்வர வேண்டும் என்றும் மோடி கேட்டுக்கொண்டார். பல்வேறு கருத்துகளை பிரதமர் முன்னெடுத்து வைத்த போதிலும், அவரது உரையின் மையக்கருத்தாக அமைந்தது பயங்கரவாத பிரச்னையே. "பயங்கரவாதத்தை பிரிக்ஸ் நாடுகள் வன்மையாகக் கண்டிக்கின்றன. அதிகரித்து வரும் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்களால் மத்திய கிழக்கு ஆசியா, மேற்கு ஆசியா, ஐரோப்பா மற்றும் தெற்காசிய நாடுகளில் கடும் அச்சுறுத்தல்கள் உள்ளன. இதுபோன்ற பயங்கரவாத அச்சுறுத்தல்களை, பிரிக்ஸ் நாடுகள் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும். சர்வதேச நாடுகள் பங்கேற்கும் பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டை வெகுவிரைவில் கூட்ட வேண்டும்" என்று மோடி வலியுறுத்தினார்.  

"இயற்கைப் பேரிடர்களால் அதிகம் பாதிப்புக்குள்ளாகக் கூடிய பிம்ஸ்டெக் நாடுகளின் பாதுகாப்பு மற்றும் பேரிடர் பாதிப்புகளை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளில், பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பங்காற்றும்" என்றார். பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் நிறைவாக, இந்த நாடுகளின் சார்பில் கூட்டு பிரகடனம் வெளியிடப்பட்டது. 'கோவா பிரகடனம்' என்று தெரிவிக்கப்பட்ட அந்த கூட்டறிக்கையில், பயங்கரவாத எதிர்ப்பே மையக்கருத்தாக முன் வைக்கப்பட்டது. மொத்தம் 109 அம்சங்களுடன் கூடிய கோவா கூட்டு பிரகடனத்தில், பயங்கரவாதிகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டியது பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் கடமை எனவும், பயங்கரவாத சவால்களை கூட்டாக சேர்ந்து முறியடிப்போம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி ராணுவ முகாமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் அண்மையில் நடத்திய தாக்குதலுக்கு பிரிக்ஸ் நாடுகள் கடும் கண்டனம் தெரிவிப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. பிரிக்ஸ் நாடுகளிடையே பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சிறப்பு அமைப்பை உருவாக்க வேண்டும். பிரிக்ஸ் வேளாண்மை ஆராய்ச்சி மையம், பாரம்பரிய ஒருங்கிணைப்பு அகாடமி அமைப்பதற்கும் உறுப்பு நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.
கோவா உச்சி மாநாட்டின் ஒருபகுதியாக, பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள், பிம்ஸ்டெக் தலைவர்களுடன் கலந்துரையாடலும் இடம்பெற்றது. கோவாவில், உலக நாடுகளின் தலைவர்களை ஒருங்கிணைத்து, பிரிக்ஸ் மாநாட்டை மிகச் சிறப்பாக நடத்தியிருப்பதுடன், பிம்ஸ்டெக் நாடுகளின் தலைவர்கள் மத்தியிலும் பயங்கரவாதப் பிரச்னையை முன்னெடுத்து வைத்துள்ள மோடி அரசின் செயல்பாடுகளை பாராட்டியே ஆக வேண்டும். 

பதான்கோட், உரி தாக்குதல்களுக்குப் பின்னர், நடைபெற்றுள்ள மாநாடு என்பதால், பயங்கரவாத எதிர்ப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்ற உறுப்பு நாடுகளின் தலைவர்களை தனித்தனியாகவும் மோடி சந்தித்து இந்தியாவுடனான அந்தந்த நாடுகளின் நல்லுறவுகளை மேம்படுத்திக் கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டார். சீனா, ரஷ்யாவுடன் பல ஒப்பந்தங்களும் செய்து கொள்ளப்பட்டுள்ளன.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவத்தினர் நடத்திய 'சர்ஜிகல் ஸ்ட்ரைக்'-ஐ பிரிக்ஸ் நாடுகள் வரவேற்று ஆதரவு தெரிவிக்கும் நிகழ்வாகவும் இம்மாநாடு அமைந்தது. மொத்தத்தில் கோவாவில் முடிந்துள்ள பிரிக்ஸ் மாநாடு, எந்தவகையில் பார்த்தாலும் இந்தியாவுக்கு பல்வேறு சாதகமான சூழ்நிலைகளையே ஏற்படுத்தித் தந்துள்ளது.

- சி.வெங்கட சேது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ