Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உண்ணாவிரதமா... உயிர்பலியா? - ஹைதராபாத் சிறுமி விவகாரம் சொல்வதென்ன?!

ஹைதராபாத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஆராதனாவின் மரணம்தான் சென்ற வாரம் வரை மக்களை ஆக்கிரமித்திருந்த செய்தி. அவளின் இறப்பு பெற்றோரின் நிர்பந்தத்தால் அவள் தன்னைத் தானே திட்டமிட்டு செய்து கொண்ட கொலை என்கின்றனர் சிறுமியின் மரணம் தொடர்பாக விசாரித்து வரும் குழந்தைகள் உரிமை அமைப்பைச் சேர்ந்தவர்கள். ஆனால் ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த ஆராதனாவின் பெற்றோர்களோ, ''அவளாகவே விருப்பப்பட்டுதான் எங்கள் குடும்ப நலனுக்காக உண்ணா நோன்பு இருந்தாள். எங்கள் பெண்ணின் இறப்புக்காக நாங்கள் வருந்தவில்லை, கடவுளுக்காக அவள் விரதம் இருந்து உயிர் துறந்ததால், அவளது பிறவிப் பயனை அடைந்துவிட்டதாக எண்ணிக்கொள்கிறோம். எங்கள் யாருக்கும் கிடைக்காத பெருமை அவளுக்குக் கிடைத்திருக்கிறது'' என்கிற ரீதியில் கூறியுள்ளனர்.

பெற்றோர் வியாபாரத்தில் செழித்து வளர வேண்டும் என்பதற்குத்தான் ஆராதனா உண்ணா நோன்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. உண்ணா நோன்பு என்றால் ஒரு நாள் இரண்டு நாள் அல்ல 68 நாட்கள் தொடர்ந்து உணவே இல்லாமல் வெறும் வெதுவெதுப்பான நீர் மட்டுமே குடித்துக் கொண்டு விரதம் இருந்திருக்கிறாள்.

அக்டோபர் 1-ம் தேதி தனது விரதத்தை முடித்துக்கொண்ட ஆராதனா அடுத்த இரண்டு நாட்கள் பால், பழரசம் போன்றவற்றைப் பருகி வந்திருக்கிறார். இரண்டாம் நாள் முடிவில் திடீரென வியர்த்து கொட்டி சுவாசப் பிரச்னை ஏற்பட, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 45 நாட்களுக்கு மேல் விரதமிருந்தால் பெரியவர்களுக்கே இதயம் பாதிப்படையும் என்கிறபோது சிறுமி 68 நாட்கள் வரை விரதமிருந்ததுதான் அவளது உடலைப் பாதித்ததாக மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தற்போது திட்டமிட்ட கொலை என்கிற அடிப்படையில், ஆராதனாவின் பெற்றோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

பட்டினி இருந்தால் இறப்பு ஏற்படுமா?

"நம் உடல் நாள் முழுதும் இயங்க மொத்தம் 1600 கிலோ கலோரி அளவு எனர்ஜி நமக்குத் தேவை. அதனை நாம் சாப்பிடும் உணவுதான் தருகிறது. இதில் குறைபாடு ஏற்படும்போது, உடலின் எனர்ஜிக்கு தேவையான க்ளுகோஸ் உடலின் உள்ளிருக்கும் புரதம் உடைபடுவதனால் மட்டுமே கிடைக்கும். ஆனால் உடலில் இருக்கும் புரதம் சிதைப்படுவதால், உடலின் ஒட்டுமொத்த இயக்கத்தையும் பாதிக்கும். புரதக் குறைபாட்டினால் இதயம், கல்லீரல், நுரையீரல் என உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழக்கும். இறுதியில் மரணம் ஏற்படும். 68 நாட்கள் பட்டினியாக இருந்த ஆராதனாவின் உடலில் இந்த மாற்றம்தான் ஏற்பட்டுள்ளது. அவ்வப்போது தண்ணீர் மட்டும் குடித்து வந்ததால்தான் அவரால் 68 நாட்கள் வரையாவது உயிருடன் இருக்க முடிந்தது. இல்லையென்றால் விரைவிலேயே சிறுநீரகம் பழுதாகி 68 நாட்களுக்கு முன்பே கூட அவர் இறந்திருப்பார்" என்கிறார் உணவியல் மற்றும் உணவுமுறை நிபுணர் டாக்டர் மீனாட்சி பஜாஜ்.

ஜெயின் சாமியார்கள் என்ன சொல்கிறார்கள்?

ஜெயின் மத பெண் சாமியார்களில் ஒருவரான நிதிஜோதிஜி மஹராஜ் கூறுகையில், "இப்படியான உணவு உண்ணாமை முறை எங்களது 26-வது தீர்த்தங்கரரான மஹாவீரர் அருளியது. ஒருவர் இவ்வளவு நாட்கள்தான் உணவு உண்ணாமல் இருக்க வேண்டும் என்றில்லை. எங்கள் சாதுர் மாத விரத காலங்களில் பல நாட்கள் வரை உணவு உண்ணாமல், ஒரு சிலர் தண்ணீர் கூட குடிக்காமல் இருப்போம். எண்களில் ஒருவர் 110 நாட்கள் வரை தண்ணீர் உணவு எதுவுமே இல்லாமல் இருந்தார். உணவு உண்ணாமல் இருப்பதால் நம் உடலின் பாவமும் உள்ளத்தின் பாவமும் மொத்தமாகக் கழிகிறது, டென்ஷன் குறைகிறது. பத்து வயது சிறுவர்கள் கூட இரண்டு நாட்கள் அல்லது மூன்று நாட்கள் வரை விரதம் இருப்பார்கள். விரதம் உடலுக்கு இன்னும் பலத்தை அதிகரிக்கும். இதுவரை இந்த விரதம் யார் உயிரையும் பறித்ததில்லை" என்றார்.

விரதங்களும் மதங்களும்

ஜெயின் மதம் மட்டுமல்லாமல் உலகில் உள்ள அனைத்து மதங்களுமே விரதத்தை தனது கோட்பாடுகளில் ஒன்றாகவே கடைப்பிடித்து வருகின்றன. குறிப்பாக இஸ்லாமியர்களின் நோன்பு மாதமான ரமலானும், இந்துக்களின் நோன்பு தினங்களான வரலட்சுமி விரதம், ஆடி கிருத்திகையும் அனைவரும் அறிந்ததே. கிறிஸ்த்தவர்களுக்கு நோன்பு காலங்கள் இருந்தாலும் அவர்கள் பெரும்பாலும் கடுமையான உண்ணாவிரதங்களைக் கடைபிடிப்பதில்லை. ஒப்பீட்டின் அளவில் பார்த்தால் ஜெயினர்களின் இந்த சாதுர்மாச வகையறா விரதம் மிகவும் கடினமானது.

குழந்தைகள்தான் பலிகடாவா?

"ஆராதனா இறந்துவிட்டதால்தான் இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது, ஆனால் இதுமாதிரியான குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து வெவ்வேறு வகையில் நடந்தபடிதான் இருக்கிறது. விரதம் என்கிற பெயரில் குழந்தைகளை உயிரோடு மண் மூடிப் புதைப்பது, அவர்களுக்கு இரும்புக் கம்பியால் சூடு வைப்பது, அவர்களைத் தீ மிதிக்க வைப்பது போன்ற அவலங்களும் தொடர்ந்தபடிதான் இருக்கிறது. 13 வயது பிள்ளை இறந்ததால் தற்போது இது பெரிய விஷயமாக்கப்பட்டிருக்கிறது. வெளிநாடுகளில் இருப்பது போன்று குழந்தைகள் மீதான துன்புறுத்தலுக்கு எதிராக சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும்" என்கிறார் சிறார் நல ஆர்வலர் வித்யா ரெட்டி.

சிறார் மீதான வன்முறைக்கு எதிரான சட்டங்களில் இந்தியாவில் எந்த அளவுக்கு வலுவாக இருக்கின்றன?

"ஆராதனா வழக்கைப் பொறுத்தவரை அவளது பெற்றோர் மீது திட்டமிட்ட கொலை என்கிற பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் பொதுவில் குழந்தைத் தொழிலாளர்கள் தவிர இங்கே சிறார் மீதான குற்றங்கள் என்னவென்றே இதுவரை தெளிவாக வரையறுக்கப்படவில்லை. அப்படி வரையறுப்பதும் பல வகையில் சிக்கல்தான். அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை கிடைக்கும். ஆனால் எதற்குமே சட்டரீதியான நடவடிக்கை பதிலாகாது. பெற்றோர்களுக்கு ஆன்மிகம் தெரிந்த அளவு அறிவியலும் தெரிந்திருக்க வேண்டும். கிட்டத்தட்ட 68 நாட்கள் தன் மகள் சாப்பிடாமல் இருந்தால் அவள் நிலை என்னவாகும் என்பதை அறிவியல் அறிவுதான் சிந்திக்க வைக்கும்" என்கிறார் வழக்கறிஞர் சுதா ராமலிங்கம்.

நீயாவது சிந்தித்திருக்கலாம் ஆராதனா!

- ஐஷ்வர்யா

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close