Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுகிறது பாஜக. ஏன்?

மத்தியில் ஆளும் பாஜக தற்போதைய இந்தியாவின் 50 சதவிகித மாநிலங்களில் ஆட்சி செய்து வருகிறது. விரைவில் பிற பகுதிகளையும் தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் பல வேலைகளைச் செய்து வருகிறது பாஜக.

தடுமாறும் மாநிலங்கள்!

பாஜக கூட்டணியில் மத்திய அரசு அமைந்த பின்னர், இந்திய மாநிலங்களில் நடந்து வரும் நிகழ்வுகளைப் பார்க்கும் போது, தற்போது பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சியின் கீழ் உள்ள மாநிலங்களில் பெரிதாக எந்தப் பிரச்னைகளோ, குழப்பங்களோ ஏற்படவில்லை. ஆனால் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் தொடர்ந்து ஒரு பதற்ற நிலை நீடித்து வருகிறது, அல்லது அதுபோன்ற நிலை உருவாக்கப்படுகிறது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஜம்மு-காஷ்மீர், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் இவற்றில் மிகவும் முக்கியமானவை. இந்த மாநிலங்களில் உள்ள பிரச்னைகளில் நேரடியாக மத்தியில் ஆளும் பாஜக தலையிட்டு வருகிறது. அதன் மூலம் தனது செல்வாக்கை அதிகரிக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அனைத்தையும் செய்து வருகிறது.

தமிழகம் மற்றும் கர்நாடகா இடையிலான காவிரி பிரச்னையில் மத்தியில் ஆளும் பாஜக கர்நாடகாவுக்கு சாதகமாகவும் தமிழ்நாட்டுக்கு எதிராகவும் நிலைப்பாடு எடுத்து வருகிறது. காரணம் கர்நாடக மாநிலத்தில் அடுத்து நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக ஆட்சியைப் பிடிக்க, காவிரி விவகாரத்தை அற்புதமான துருப்புச் சீட்டாக பாஜக பயன்படுத்தத் தொடங்கி உள்ளது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று தெரிவித்திருப்பதன் மூலம் கர்நாடக மக்களிடையே நல்ல பெயரை வாங்கியிருப்பதாக பிரதமர் மோடி கருதுகிறார். தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை உடைத்து விட்டு ஆட்சியைப் பிடிப்பது என்பது அவ்வளவு எளிதாக நடந்துவிடக் கூடிய காரியமல்ல. அதற்கு பல ஆண்டுகள் பிடிக்கும். அதனால்தான், காவிரி விவகாரத்தில் கர்நாடகத்தின் பக்கம் சாய்ந்திருக்கிறது பாஜக என்று பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

உத்தரப் பிரதேசத்தைப் பிடிப்பதில் தீவிரம்!

உத்தரப்பிரதேசத்தில் இழந்துவிட்ட செல்வாக்கை மீண்டும் பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் ஆளும் பாரதிய ஜனதாவும், காங்கிரஸ் கட்சியும் போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றன. சமாஜ்வாதி கட்சியின் பெயரை சீர்குலைப்பதற்கான வேலைகளைச் செய்து வரும் அதே நேரத்தில் வழக்கத்தை மீறிய காரியங்களும் கருத்துகளும் மோடியிடமிருந்து வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. 

மோடி வழக்கமாக டெல்லியில் நடக்கும் ராம்லீலா கொண்டாட்டத்தில் கலந்துகொள்பவர் லக்னோவில் நடைபெறும் ராம்லீலா கொண்டாட்டங்களில் கலந்து கொண்டுள்ளார். சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் வெற்றிக்கு இவரை கொண்டாடி தள்ளிவிட்டனர் உ.பி. மக்கள். மேலும் தலித்துகளை அரவணைப்பதும், முஸ்லிம்களைத் தோழமை என அழைப்பதும் அதிகரித்துள்ளது. இவையெல்லாம் ஆரோக்கியமான விஷயம்தான். ஆனால் இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் தலித்துகளிடையே மோடியின் இதுபோன்ற கருத்துகள் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதுதான் உண்மை. மாறாக உத்தரப்பிரதேசத்தில் கொலைகளும், வன்முறைகளும் அதிகரித்து வருகின்றன.

கொலைகளில் நடக்கும் அரசியல்!

கேரளாவில் இது உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருக்கிறது. கம்யூனிஸ்ட்டுகள், பாஜக-வினரிடையே நாளுக்கு நாள் பகையின் தீ கொழுந்து விட்டு எரிகிறது. பா.ஜ.க பிரமுகர்கள் கொல்லப்பட்டு கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனின் சொந்த ஊரிலேயே பாஜக பிரமுகர் ஒருவர் கொல்லப்பட்டிருக்கிறார். இந்தக் கொலைகளுக்கான காரணங்களோ, கொல்லப்பட்டவர்கள் பற்றியோ எந்த விவரமும் இதுவரை தெரியாத நிலையில் கேரள மக்களிடையே பதற்றமும் குழப்பமும் நீடித்து வருகிறது. இந்த நிலையை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, கேரளாவில் தங்களது அரசியல் செல்வாக்கை அதிகரிப்பதில் பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. 

கேரளாவில் பெரும்பான்மையாக உள்ள விஸ்வகர்மா இனத்தவர்களை பாஜக பல பகுதிகளில் புறக்கணித்து வந்தது. அதனால் பல இடங்களில் கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் பாஜக தனது வெற்றி வாய்ப்பை இழந்தது. ஆனால் இனி விஸ்வகர்மா இனத்தவர்களை முழுக்க முழுக்க பாஜகவுக்கு ஆதரவாகத் திரட்ட வேண்டும் என்று கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது. 

எல்லையிலும் அரசியல்!

ஜம்முவில் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை மோதல்களைத் தொடர்ந்து, தற்போது ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலும் முழுக்க முழுக்க பாஜக கட்டுப்பாட்டிலான ஆட்சியே அங்கு நடக்கிறது. மேலும் அங்குள்ள மக்களிடம் செல்வாக்கைப் பெறுவதற்கான வேலைகளையும் பாஜக செய்து வருகிறது. புரட்சியாளர்களை ஒடுக்குவது, தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துவது மற்றும் பாகிஸ்தான் மீது சர்ஜிக்கல் அட்டாக் என தொடர்ந்து எல்லையிலும் தனக்கான மதிப்பெண்களை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது பா.ஜ.க. மேலும், ஜம்மு பகுதியில் ஏற்கெனவே ஐஐடி கல்லூரி அமைக்க ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், தற்போது ஐஐஎம் அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் வழங்கியிருப்பதும் இந்த நடவடிக்கைகளில் ஒன்றே எனலாம்.  பெல்லட் குண்டுகளைத் தடை செய்யாமல் அப்பாவி மக்களையும் பலி வாங்குவது பாராட்டுகளின் சத்தத்தில் காது கேட்காத விஷயமாகவே நீடிக்கிறது. 

இதேபோல் மேற்கு வங்கத்திலும், நடந்து முடிந்த தேர்தலுக்குப் பிறகு தனது செல்வாக்கை அதிகரிக்க பாஜக தீவிரமாக இறங்கி அரசியல் செய்து கொண்டிருக்கிறது. தற்போதைய முதல்வர் மம்தா பானர்ஜியின் செல்வாக்கை சீர்குலைக்க பல வேலைகளை பாஜக எடுத்துள்ளது. ஆனால் அது அவ்வளவு எளிதான விஷயமாக இல்லா விட்டாலும் கம்யூனிஸ்ட் கட்சியைப் பின்னுக்குத் தள்ளி பாஜக முன்னேறி வருகிறது. திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு அடுத்தபடியாக தற்போது வலுவான இரண்டாவது கட்சியாக பாஜக உருவெடுத்து வருகிறது. 

இந்துத்துவா கொள்கையைப் பரப்ப இந்தியா முழுக்க நூலகம்!

பாஜக கட்சி தலைமை, இந்துத்துவா மற்றும் கட்சியின் கொள்கைகளை உலகம் முழுவதும் பரப்ப திட்டமிட்டுள்ளது. இதற்காக கட்சியின் தேசிய மற்றும் மாநில தலைமை அலுவலகங்களில் ஆய்வு நூலகங்களைத் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை எந்த ஒரு தேசிய கட்சியிலும் இல்லாத வகையில் பல நவீன வசதிகளுடன் இந்த நூலகங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்கு காரணமாக அவர்கள் சொல்வது பல்கலைக் கழக மற்றும் கல்லூரி மாணவர்கள் பாஜக மற்றும் இந்துத்துவா வளர்ச்சி குறித்து ஆய்வு செய்ய விரும்புகிறார்கள். அவர்களுக்காக இதனைச் செய்ய வேண்டியது கட்டாயமாகிறது என்று தெரிவித்துள்ளது. இந்த நூலகங்கள் 2017-ம் ஆண்டுக்குள் தயாராகிவிடும் என்று கூறப்படுகிறது. பாஜக மற்றும் இந்துத்துவா கொள்கைகளைப் பரப்புவதற்கு ஏராளமானோர் நியமிக்கப்பட இருப்பதாகவும், தொடர்ச்சியாக பிரச்சாரங்கள், பத்திரிகை வெளியீடுகள் ஆகியவையும் நடத்தப்பட இருப்பதாகவும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இப்படி இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் தனது செல்வாக்கை தடம் பதிக்க பாஜக முடிவு செய்துவிட்டது. அப்படி இந்திய மாநிலங்கள் முழுவதும் பாஜகவினால் பிடிக்க முடிந்தால் இந்திய வரைபடம் இப்படித்தான் இருக்கும்.

தற்போதைய இந்தியா                                                                                          பாஜகவின் இந்தியா

- ஜெ.சரவணன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ