Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

22 நகராட்சி பள்ளிகள்... 2000 மாணவிகளின் சுகாதாரத்தை தத்தெடுத்த மீனா மேத்தா..

 


மாதவிடாய்ப் பிரச்னைகளைப் பற்றிப் பேசவே தயங்கும் பெண்களுக்கு மத்தியில், யாரும் செய்ய யோசிக்கும் வித்தியாசமான ஒரு சேவையைச் செய்து வருகிறார், சூரத்தில் வசிக்கும் மீனா மேத்தா.

2004-ம் ஆண்டு சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உலகின் பல பகுதிகளில் இருந்தும் பலர் உணவு, உடை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்தனர். ஆனால், 'இன்போசிஸ் ஃபவுண்டேஷனி'ன் தலைவி சுதா மூர்த்தி, நான்கு லாரிகள் நிறைய சானிடரி நாப்கின்களை மட்டும் அனுப்பியதை பத்திரிகையில் படித்த மீனா மேத்தா, அக்கம்பக்கத்தில் வசிக்கும் ஏழை மாணவிகளுக்கு தானும் சானிட்டரி நாப்கின்களை இலவசமாகக் கொடுக்க முடிவெடுத்தார்.

''முதலில், மாதம் ஐந்து மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்களை  கொடுக்க ஆரம்பித்தேன். ஒருநாள், ஒரு மாணவி மிகத் தயங்கி, உள்ளாடை வாங்கப் பணம் இல்லாததால் சானிட்டரி நாப்கின்களை உபயோகிப்பதில்லை என்று கூறினாள். எனவே, உள்ளாடையையும் சேர்த்துக் கொடுத்து வந்தேன்.

2012ல் என் கணவர் தன் சொந்தத் தொழிலில் இருந்து ஓய்வு பெற்ற உடன், 25,000 ரூபாய் கொடுத்து இந்தச் சேவையை விரிவுபடுத்த உதவினார். ஆனால் பலரும், இதை எதிர்மறையாகவே விமர்சித்தனர். மனம் தளராமல் நகராட்சிப் பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து, என் முயற்சிக்காக அரசு நிர்வாகத்திடம் இருந்து உரிய முறையில் அனுமதி பெற்றேன். 4-11 வயதுக்கு உட்பட்ட மாணவிகளுக்கு, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை உள்ளாடை ஒரு செட், பற்பசை மற்றும் பிரஷ் கொடுக்கிறேன். இதற்கு 'TINI - MINI KIT' என்று பெயரிட்டேன். குழந்தைகளுக்கு சுகாதாரம் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கம்.

அடுத்ததாக, பருவடைந்த மாணவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு பாக்கெட் சானிடரி நாப்கின், ஒரு செட் உள்ளாடை, ஒரு சோப், பிரஷ் மற்றும் நான்கு ஷாம்பூ பாக்கெட்டுகள் கொடுக்கிறேன். இதற்கு 'MAGICAL KIT' என்று பெயர் வைத்திருக்கிறேன்.

ஆரம்பத்தில் மாணவிகளிடம் இதைப் பெற்றுக்கொள்வதில் தயக்கம் இருந்தது. ஒவ்வொரு மாதமும் நாங்கள் இலவசமாகக் கொடுக்காவிட்டால், அவர்களால் பணம் கொடுத்து வாங்க முடியாதல்லவா? எனவே ஒவ்வொரு மாதமும் அவர்களைத் தேடி வந்து கண்டிப்பாகக் கொடுப்பேன் என்று உறுதி அளித்தேன். கோடை விடுமுறை காலங்களில்கூட இரண்டு மாதங்களுக்குத் தேவையானதை முன்கூட்டியே கொடுத்து விடுகிறேன். இதோ நான்கு வருடங்கள் உருண்டோடி விட்டன. என் வாக்கைத் தவறாமல் காப்பாற்றி வந்திருக்கிறேன். 22 மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள், இதன் மூலம் பலன் அடைகிறார்கள்.

நானே நேரில் சென்று, என் கையால் கிட்களை விநியோகிக்கிறேன். பருவம் அடைந்த உடன் பள்ளிக்கு வருவதை நிறுத்திவிடும் பழக்கம் உள்ள சமூகத்தினைச் சேர்ந்த மாணவிகளுக்கு, இந்த கிட் பேருதவியாக இருக்கிறது. பள்ளிக்கு சரியாக வராத மாணவிகளுக்கு கிட் வழங்குவதில்லை என்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறேன். இதனால் மாணவிகள் விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு வருவதாக  ஆசிரியைகள் தெரிவிக்கின்றனர்.

ஏழை மாணவிகள் இந்த கிட்-ஐ சிறந்த பரிசுப் பொருளாக நினைக்கின்றனர். பள்ளியில் இருக்கு சமயத்தில் எதிர்பாராமல் மாதவிடாய் நேரும்போது,மாணவிகள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.பள்ளி நிர்வாகத்திடம் இருக்கும் எங்கள் கிட் உதவியதை மாணவிகள் நன்றியுடன் பகிர்ந்துகொண்டனர். பல மாணவிகள் நன்றியை வார்த்தைகளில் சொல்ல முடியாமல், என்னை தழுவிக்கொண்ட நிகழ்வுகளும் உண்டு.

ஒவ்வொரு பள்ளியிலும் இரண்டு முதல் மூன்று மணி நேரம் செலவிடுகிறேன். பல மாணவிகளுக்கு, சரியான அளவில் உள்ளாடை அணிய வேண்டிய அவசியம் குறித்துத் தெரிவதில்லை. நான் அவர்களுக்கு உதவுகிறேன். தொற்றுநோய்கள் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று விளக்குகிறேன்.

எங்கள் வாழ்நாள் சேமிப்பில் இருந்தும், தெரிந்தவர்களின் நன்கொடை மூலமாகவும் இந்தச் சேவையை செய்து வருகிறேன். பலர் தாங்களாகவே முன் வந்து இந்தச் சேவைக்கு உதவுகிறார்கள். சென்ற வருடம் சூரத் வந்திருந்த சுதா மூர்த்தி, என் சேவையைப் பாராட்டி பூங்கொத்துப் பரிசளித்துப் பாராட்டினார். கணிசமான தொகையை நன்கொடையாக வழங்கி ஆசீர்வதித்தார். இதைப் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்.

இந்தச் சேவை குறித்து அறிந்த பலரும், எங்கிருந்து ஆரம்பிப்பது, எப்படித் தொடங்குவது எனக் கேட்கின்றனர். உங்கள் வீட்டின் வேலைக்காரப் பெண்ணிடம் இருந்துகூட ஆரம்பிக்கலாம். காய்கறி விற்கும் பெண், காலனி வாட்ச்மேனின் மனைவி, மகள் என உங்களைச் சுற்றியுள்ள ஐந்து பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் கொடுங்கள். கொடுக்கக் கொடுக்க உங்கள் மனமும் சேவையும் விரிவடைவதை நீங்கள் உணர முடியும்.

தற்போது 'மாதவிடாய் காலத்தில் சுகாதாரம்' குறித்த விழிப்பு உணர்வுப் பிரசாரமும் செய்து வருகிறேன். சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் உள்ள படித்த பெண்களுக்கே இது அவசியமாக இருக்கிறது.

அன்பான கணவரும், ஆதரவான குடும்பமும் அமைந்ததால்தான் இதெல்லாம் சாத்தியமாயிற்று. இறுதி மூச்சு உள்ளவரை இந்தச் சேவையைச் செய்வதற்கு ஷீரடி சாய்பாபா அருள வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை!" என்கிறார் மீனா மேத்தா.

இந்தக் கல்வி ஆண்டில் 50 பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு இந்தச் சேவையை விரிவுசெய்யவுள்ளார் மீனா மேத்தா!

வாழ்த்துகள்!

-  ஶ்ரீலோபமுத்ரா

எடிட்டர் சாய்ஸ்

MUST READ