Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முற்பகல் செய்யின் 38 ஆண்டுகள் கழித்து விளையும்!...அன்று சுரேஷ்ராம் இன்று வருண் காந்தி !

 

 

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பார்கள். ஆனால் 'முற்பகல் செய்யின் 38 ஆண்டுகளுக்கு பின் விளையும்' என்ற புதுமொழி உண்மையாகியுள்ளது இப்போது.

த்தரப்பிரதேசம் சுல்தான்பூர் தொகுதி எம்.பியான வருண்காந்தி உத்தரப்பிரதேச தேர்தலில் தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று தனது தாயாரும் மத்திய அமைச்சருமான மேனகா காந்தி மூலம் பாஜகவை வலியுறுத்தி வந்தநிலையில், பாஜக இதற்கு மறுத்து விட்டது. இந்த அரசியல் பரபரப்புக்கிடையில் வருண்காந்தி தொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த வழக்கறிஞர் எட்மண்ட்ஸ் ஆலன் என்பவர் கூறியுள்ள குற்றச்சாட்டு இப்போது அரசியல் அரங்கில் ஹாட் டாபிக் ஆக ஆகியுள்ளது.

எட்மண்ட்ஸ் ஆலன் இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் ‘வருண் காந்திக்கும் ஆயுத தரகர் அபிஷேக் வர்மாவுக்கும் தொடர்பு உள்ளது என்றும் வெளிநாட்டு அழகிகளை வருணுடன் பழகச் செய்து அவர் நெருக்கமாக இருந்தபோது வீடியோ, புகைப்படங்களை எடுத்த அபிஷேக் வர்மா அதை வைத்து வருணை மிரட்டி இந்திய பாதுகாப்புத் துறை தொடர்பான ரகசிய தகவல்களை பெற்றிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். கடிதம் எழுப்பிய பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்த அதிர்ச்சியாக வருண் காந்தியை ஒத்த தோற்றத்துடன் கூடிய ஒருவர் சில அழகிகளுடன் அரைநிர்வாண கோலத்தில் இருக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின.

அதேசமயம் வருண்காந்தி சர்ச்சை தொடர்பான ஆவணங்கள் தங்களுக்கு கிடைத்திருப்பதாக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் தெரிவிக்க எதிர்கட்சிகளிடையே இந்த விவகாரத்துக்கு நம்பகத்தன்மை உருவாகியுள்ளது.

தனது புகைப்படம் குறித்த சர்ச்சையை மறுத்த வருண் காந்தி தன் மீது அடிப்படை ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார். மேலும், குற்றச்சாட்டில் ஒரு சதவீதத்தை நிரூபித்தால்கூட அரசியலில் இருந்து தான் விலகத் தயார் என கூறியிருப்பதோடு, பிரசாந்த் பூஷண் மீது அவதூறு வழக்கு தொடரப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

புகைப்படத்தில் இருப்பது வருண் காந்தியா அல்லது அவரது புகைப்படத்தை போட்டோஷாப் முறையில் தயாரித்து உலவ விடப்பட்டிருக்கிறார்களா என்பது குறித்து இப்போட்டோக்களை ஆய்வுக்குட்படுத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினி தொழில்நுட்பம் வளர்ந்துள்ள நிலையில் யாரைவேண்டுமானாலும் எங்கும் பொருத்தி அவதுாறு செய்துவிடமுடியும் இன்று. ஆனால், கிட்டதட்ட இன்றுள்ள அறிவியல் வளர்ச்சி துளியும் வளர்ந்திராத  காலத்தில் இப்போது போல நேரு காலத்து காங்கிரஸின் முக்கிய தலைவர் ஒருவரது மகனின் ஆபாச புகைப்படம் வெளியாகி சர்ச்சையானது. அந்த தலைவர் பாபு ஜெகஜீவன்ராம்.

1978 ஆண்டு மொரார்ஜிதேசாய் அரசில் பாதுகாப்பு அமைச்சராக பாபு ஜெகஜீவன்ராம் இருந்த நேரம். இந்தியாவின் மிகப்பெரும் தலித் தலைவரான உருவெடுத்திருந்தார் அவர். எமர்ஜென்சி தோல்விக்குப்பிறகு மீண்டும் இந்திராகாந்தி அன்றைய அரசியலில் தலையெடுக்க முயன்றுவந்த நேரத்தில் அவர் பிரதமராவதற்கு முட்டுக்கட்டையாகவும் கடும்போட்டியாளராகவும் ஜெகஜீவன்ராம் இருந்தார். அன்றைய தலித் மக்களிடையே அவருக்கு இருந்த நற்பெயர் இந்திராவை உறுத்தியபடியே இருந்தது.

இந்திரா பிரதமராக இருந்தபோது அவருக்கு எதிராக ஒரு கூட்டத்துக்கு அறிவிப்பு செய்தார் பாபு ஜெகஜீவன்ராம். அந்தக் கூட்டம் வெற்றியடைந்துவிடக்கூடாது என்பதற்காக இந்தித் திரையுலகின் புகழ்பெற்ற திரைப்படமான பாபியை துார்தர்ஷனில் ஒளிபரப்பச் செய்தார் இந்திரா. மக்கள் கூட்டம் வீடுகளிலேயே முடங்கிவிட்டது. மறுநாள் வட இந்திய இதழ்களில் இந்திராவின் சாதுர்யத்தை எழுதி அதற்கு பாபு வெர்சஸ் பாபி என தலைப்பிட்டன. இப்படி பாபுவின் புகழை குலைக்கும்வகையில் பல்வேறு நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டார் என்று சொல்வார்கள். அவர் பெரும் தலைவராக உருவானால் தன் எதிர்காலத்துக்கு அது நல்லதல்ல என்பது அவரது எண்ணம்.

அந்த நேரத்தில் தான் பாபு ஜெகஜீவன்ராமின் இமேஜை சரியும்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அவரது மகன் சுரேஷ்ராம், கல்லூரி மாணவி ஒருவருடன் தனிமையில் இருக்கும் ஆபாசமான புகைப்படங்கள் தனிநபர்கள் மத்தியில் உலவின. இதைக் கேள்வியுற்ற பாபு ஜெகஜீவன்ராம் தர்ம சங்கடத்துக்கு ஆளானார். அரசியல் ஆதாயத்துக்காக திட்டமிட்டு எடுக்கப்பட்ட அந்த புகைப்படங்கள் அவரை மனஉளைச்சலுக்கு ஆளாக்கியது. இன்றுள்ளதுபோல் மார்ஃபிங் என்றோ போட்டோ ஷாப் என்றோ தப்பிக்க முடியாத காலகட்டம் என்பதால் பெரும் சங்கடத்துக்குள்ளானார் பாபு.

திட்டமிட்டு அந்த புகைப்படங்கள், அன்றைய பிரபல பத்திரிகைகள் அனைத்துக்கும் அனுப்பப்பட்டன. ஆனால் தனிப்பட்ட விவகாரத்தை பெரிதுபடுத்த விரும்பாத சில பத்திரிகைகள் அதை புறக்கணித்தன.  மற்ற பத்திரிகைகள் அதன் நம்பகத்தன்மை குறித்து ஐயம் கொண்டு பிரசுரிக்கவில்லை. இந்த நிலையில்தான் சூர்யா என்ற மாத இதழ் மட்டும் அதை இரு கரங்களாலும் வரவேற்று வெளியிட்டது. அரசியலில் மரியாதையான இடத்தில் வைத்து மதிக்கப்பட்ட பாபு ஜெகஜீவன்ராம் இதனால் பெரும் சங்கடத்துக்கு ஆளானார். இந்திராவின் அரசியல் எதிரியை ஒழித்துக்கட்ட அன்று இந்த விவகாரத்தின் பின்னணியாக இருந்தவர் இந்திராவின் மருமகள்களில் ஒருவர்தான் என்று பின்னாளில் பேசப்பட்டது.

ஆம், சூர்யா இதழின் ஆசிரியர், வேறு யாருமல்ல ; இதேபோன்று ஆபாச பட சர்ச்சையில் சிக்கி அரசியல் தந்திரத்தால் பழிவாங்கப்பட்டு தர்ம சங்கடத்துக்கு ஆளாகி நிற்கும் இதே வருண்காந்தியின் தாயாரான மத்திய அமைச்சர் மேனகா காந்திதான்.

முற்பகல் செய்யின் முப்பதாண்டுகள் கழித்தும் விளையும் என்று புதுமொழிக்கு உயிர்கொடுத்திருக்கிறார் மேனகா காந்தி என்கிறார்கள் அரசியல் ஆர்வலர்கள்.

- எஸ்.கிருபாகரன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close