Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மிஸ்திரி நீக்கம்.... ரத்தன் ரிட்டர்ன்...! - என்ன நடந்தது டாடாவில்?

பல துறைகளிலும் தன்னுடைய முதலீடுகளைக் குவித்து தொழில்களை விஸ்தரிப்பதில் டாடா தனி ரகம். பல நிறுவனங்களுக்கு முன்னுதாரணமாக ஏராளமான விஷயங்களையும் உத்திகளையும் கையாண்டு, உலகின் முன்னணி நிறுவனங்கள் பட்டியலில் ஒன்றாக டாடா உள்ளது. தற்போது இதன் ஓராண்டு வருமானம் 100 பில்லியன் டாலருக்கும் மேல்.

மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு டாடா  நிறுவனம் தொடங்கப்பட்டு 148 ஆண்டுகள் ஆகிவிட்டன. தற்போது ஆறு கண்டங்களில் 150-க்கும் மேலான நாடுகளில் தனது தொழிலை விரிவுபடுத்தி செயல்பட்டு வருகிறது. 6,60,800 பேர் டாடா குழுமத்தில் பணிபுரிகின்றனர். இப்படிப்பட்ட மாபெரும் நிறுவனத்தின் வளர்ச்சியையும், அதன் செயல்பாடுகளையும் நாளுக்கு நாள் முதலீட்டாளர்கள் கவனித்த வண்ணம் இருக்கிறார்கள். 

இந்த நிலையில் டாடா குழுமத்தின் தலைவராக கடந்த நான்கு ஆண்டுகள் இருந்த சைரஸ் மிஸ்திரியை தலைவர் பதவியிலிருந்து அதன் இயக்குநர் குழு நீக்கியிருப்பது இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இடைக்காலத் தலைவராக மீண்டும் ரத்தன் டாடா நியமிக்கப்பட்டுள்ளார்.

காரணம் சொல்லாமலே நீக்கம்!

அக்டோபர் 24-ம் தேதி, ஒன்பது பேர் கொண்ட இயக்குநர் குழுவில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 6 பேர் மிஸ்திரிக்கு எதிராக, அதாவது அவர் பதவியில் நீடிக்கக் கூடாது என வாக்களித்துள்ளனர்.  பதவியில் நீடிக்கலாம் என்று வாக்களித்த மூவரில் அவரும் ஒருவர். இறுதியாக அவர் பதவியிலிருந்து அன்றே நீக்கப்பட்டார். 

எதற்காக நீக்கப்பட்டார்? என்ன குறை? என்று எந்த காரணத்தையும் டாடா குழும இயக்குநர்கள் தெரிவிக்கவில்லை. ரத்தன் டாடா ஓய்வு பெறும்போதே, யாரை நியமிப்பது என்ற சிக்கல் வந்தபோது அவரது உறவினர் நோயல் டாடாவுடன் முரண்பாடு ஏற்பட்டது. அந்த நேரத்தில் இயக்குநர் குழுவில் ஒருவராக இருந்த சைரஸ் மிஸ்திரியின் அனுபவம் மற்றும் திறமையைப் பார்த்து அவருக்கு குழுமத்தின் தலைவர் பதவிக்கு வாய்ப்பு அளித்தார் ரத்தன்.

ஆனால் மிஸ்திரி, டாடா குழுமத்தின் எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை என்பதே இயக்குநர் குழுவின் குற்றச்சாட்டாக உள்ளது. மேலும் அவர் நீக்கப்பட்டதற்காக சொல்லப்படும் காரணங்கள் இவைதான்.

1. மிஸ்திரி நன்றாக செயல்படும் டாடா கன்சல்டன்சி, டாடா மோட்டார்ஸ் போன்றவற்றில் மட்டுமே கவனம் செலுத்தினார். பிற குழும நிறுவனங்களை வளர்ப்பதற்கான எந்தத் திட்டத்தையும் அவர் வைத்திருக்கவில்லை. இதனால் டாடா குழுமத்தின் வருமானம் கடந்த ஆண்டைக் காட்டிலும் 5 பில்லியன் டாலர் குறைந்துவிட்டது. 

2. நிர்வாகத்திலும் அவரது செயல்பாடு எல்லோரையும் ஊக்குவிக்கும் வகையில் இல்லையாம். அவர் தேர்வு செய்யும் ஆட்கள் தகுதியானவர்களாக இல்லை. அவரது குழுக்கள் சரியாக செயல்படவில்லை.

3. குழும நிறுவனங்கள் நஷ்டத்தைச் சந்திக்க ஆரம்பித்துள்ளன. டாடா ஸ்டீல் நிறுவனத்தின் நிகர நஷ்டம் ரூ.3,000 கோடிக்கும் மேல். ஏற்கெனவே நஷ்டத்தில் இருந்த டாடா ஸ்டீல், இங்கிலாந்தில் நடத்தப்பட்ட பிரெக்ஸிட்டுக்குப் பின், மேலும் பாதிக்கப்பட்டது. ஆனால் அதற்காக எந்த நடவடிக்கையையும் திட்டமிடவில்லை.

4. டாடா டெலிகாம் சர்வீசஸ் மிக மோசமாக இருப்பதாக சொல்கிறார்கள். இப்போதுதான் 3ஜி சேவைக்கான டவர்களையே அமைக்கின்றனவாம். இதன் செயல்பாடு சரியில்லை என்பதால்தான், இதனுடன் ஜாயின்ட் வென்சர் செய்திருந்த ஜப்பான் நிறுவனமான டொகோமோ பிரிந்து போய் விட்டதாம்.

5. மிஸ்திரி பதவியேற்கும்போது, டாடா குழுமத்தின் மொத்த வருமானம் 500 பில்லியன் டாலராக இருக்க வேண்டும் என்று இலக்கு வைக்கப்பட்டது, ஆனால் அதற்கான எந்தத் திட்டத்தையும் அவர் முன்னெடுக்கவில்லை. 

6. டாடா மோட்டார்ஸ் டியாகோ மற்றும் போல்ட் வகை கார்கள் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் கார்களின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.

டாடா VS மிஸ்திரி!

ஜேஆர்டி டாடாவுக்குப் பிறகு தலைவர் பதவியை ஏற்றுக்கொண்ட ரத்தன் டாடா, பல்வேறு புதிய தொழில்களையும் திட்டங்களையும் தொடங்கியதாகவும், முதலீடுகளை அதிகரித்ததாகவும் சொல்கிறார்கள். இதன் காரணமாகவே டாடா குழுமம் அவர் தலைவராக இருந்த 22 ஆண்டுகளில் ஒரு முறை கூட இறக்கத்தைச் சந்திக்காமல் வளர்ச்சியை நோக்கியே இருந்துள்ளது. 1995-96-ம் நிதி ஆண்டில் 6 பில்லியன் டாலராக மட்டுமே இருந்த டாடா குழுமத்தின் மொத்த வருமானம் 2011-12-ம் நிதி ஆண்டில் 100 பில்லியன் டாலராக உயர்ந்தது. இந்திய நிறுவனமாக இருந்த டாடாவும் சர்வதேச பிராண்டாக மாறியது. இந்த இருபதாண்டுகளில் சென்செக்ஸ், நிஃப்டி தந்த வருமானத்தைவிட டாடா குழுமம் கொடுத்த வருமானம் அதிகம்.

ஆனால் 2011-ல் மிஸ்திரி பதவி ஏற்றுக்கொண்ட பிறகு முதல் நிதி ஆண்டிலேயே நிறுவனம் இறக்கத்தைச் சந்தித்தது. பிறகு 2014-15-ம் நிதி ஆண்டில் மீண்டும் உயர்ந்து 108 பில்லியன் டாலராக இருந்தது. 2015-16-ம் நிதி ஆண்டில் மறுபடியும் இறக்கத்தைச் சந்தித்து 103 பில்லியன் டாலரானது. 

புதிய தலைவர்!

தற்போது இடைக்காலத் தலைவராக ரத்தன் டாடா நியமிக்கப்பட்டிருந்தாலும், விரைவில் அடுத்த புதிய தலைவரை நியமிக்க வேண்டிய அவசியம் உள்ளது. அந்த நபர் டாடா குழுமத்துக்கு தற்போது உள்ள சவால்களை எதிர்கொண்டு, குழும நிறுவனங்களை வளர்ச்சியை நோக்கி முன்னெடுத்துச் செல்பவராக இருக்க வேண்டும். அப்படி ஒருவர் கிடைத்தால் டாடாவுக்கு மேலும் பல உச்சங்கள் காத்திருக்கின்றன. 

 

 

- ஜெ.சரவணன்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close