Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சீனப் பட்டாசுகளை புறக்கணித்தோம்.... சீனாவிடம் இதைக் கற்றுக்கொண்டோமா?


 மெரிக்க விண்வெளி வீரர் ஸ்காட் கெல்லி விண்வெளியில் இருந்து பூமியை ஒரு வருடம் கூர்ந்து கவனித்து ஆராய்ந்து வந்தார். அப்போது இந்தியா மற்றும் சீனா மீதுள்ள  மேகங்களில் ஏற்படும் மாற்றங்கள், காற்று மாசு குறித்து அவர் ஆராய்ந்தபோது,  அவருக்கு பல படிப்பினைகளையும், அதிர்ச்சியையும் கொடுத்தது. ஸ்காட் கெல்லிக்கு அதிர்ச்சியை கொடுத்தது இரண்டு நாட்கள். ஒன்று தீபாவளி, மற்றொன்று சீனாவின் தேசிய தினம்.

 

 

கடந்த வருடம் அக்டோபர் 1-ம் தேதி விண்வெளி வீரர்  கெல்லியால், விண்வெளியில் இருந்து சீனாவின் 200 நகரங்களை தெளிவாக பார்க்க முடிந்தது. காரணம், அக்டோபர் 1-ம் தேதி சீனாவின் தேசிய நாள் என்பதால் பொதுவிடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனால் நிலக்கரி உற்பத்தி நிலையங்கள், தொழிற்சாலைகள் என அனைத்து நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்பட்டதால், நாடே வெறிச்சோடி இருந்தது. இதனால் அன்று மட்டும் சீனாவின் சுற்றுப்புற சூழல் மாசுபடுவதில் இருந்து தப்பித்தது.  மக்களும், அரசும் தீர்க்கமான முடிவு எடுத்தால், சுற்றுச்சூழலில் ஒரு சாதகமான தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை கெல்லி உணர்ந்தார்.  

அதே அக்டோபர் மாதத்தில் தீபாவளி அன்று இந்தியா ஏராளமான வெடிகளை வெடித்து, வான வேடிக்கைகளை நிகழ்த்தி ஊரையே வாயு மண்டலங்களாக மாற்றி இருந்தது. எத்தனை விழிப்பு உணர்வுகளும், எச்சரிக்கைகளும் செய்தாலும், ஒவ்வொரு தீபாவளியும் முந்தைய ஆண்டை விடவும் அதிக அளவு வெடிகளை வெடிக்கக்கூடிய மோசமானதாகவும், அதிகளவில் காற்று மாசு படுதலையும் நிகழ்த்திக் கொண்டு தான் இருக்கிறது. அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் வாயு அறைகளில் அடைந்து கிடக்கும்போது,  ஸ்காட் கெல்லி இந்தியாவைப் பார்த்தால் என்ன தெரியும்? தீபாவளியன்று இந்தியாவை கரும்புகை கொண்ட பகுதிகளாக மாற்ற முடியுமா? என கெல்லி அதிர்ச்சியுடன் உணர்ந்து கொண்டார்.

உலகிலேயே மிகவும் மாசுபட்ட தலைநகரங்களில் டெல்லிக்கு முக்கிய இடமுண்டு. காற்று மாசுபாட்டால் நுரையீரல் தொற்று, மாரடைப்பு மற்றும் புற்றுநோய் தாக்குதல்கள் அதிகரித்துகொண்டே இருக்கின்றது.  2008-ம் ஆண்டு மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் டெல்லியில் நடத்திய ஆய்வில்,  ஐந்தில் இரண்டு பள்ளி குழந்தைகளுக்கு நுரையீரல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. காற்று மாசுபாடு தொடர்பான நோய்கள் காரணமாக, ஒவ்வொரு ஆண்டும் 3000-க்கும் மேற்ப்பட்ட மரணங்கள் நிகழும் வகையில் நிலைமை மிகவும் மோசமாக சென்று கொண்டிருக்கிறது. இதற்கு ஒரு உதாரணம், அமெரிக்க  ஜனாதிபதி பராக் ஒபாமா, கடந்த 2015-ல் டெல்லிக்கு வந்திருந்த போது,  அமெரிக்கத் தூதரகம் மற்றும் அவர் சென்ற இடங்களில் வைப்பதற்காக  1,800 air purifier-களை அமெரிக்க தூதரகம் வாங்கியிருந்தது.  காற்று மாசில் இருந்து ஒபாமாவை காப்பாற்ற air purifier வைக்கப்பட்டன.  ஆனால் மக்களுக்கு?. டெல்லியில் மட்டுமல்ல நாட்டில் உள்ள பல்வேறு  முக்கிய நகரங்களிலும் கிட்டத்தட்ட இதே நிலைமைதான்.

 விண்ணிலும், மண்ணிலும்  ஒளிரும்  பட்டாசுகளால், தீபாவளிப் பண்டிகை மோசமான  நச்சுகளைக் கொண்டிருக்கிறது. பட்டாசுகளில் இருந்து வெளியாகும் வெண்மையான புகை மூளை மற்றும் நுரையீரலை பாதிக்கிறது. சிவப்பு புகை குழந்தைகளில் எலும்பு வளர்ச்சியை பாதிக்கும்.  இப்படி தீபாவளி அன்று கண்களுக்கு தெரியாத மரண வேதனைகளை இந்தியர்கள் அனுபவிக்கின்றனர். உலகளவில் மதம் சம்பந்தப்பட்ட விழாக்களும்,  சடங்குகளும் சூழ்நிலையை பாதிக்கும் வகையிலேயே உள்ளன. ஹாங்காங்கில்  'பேய் பணம்' எரிக்கும் விழாவன்று, சுற்றுச்சூழலில் விஷத் தன்மையுடன் கூடிய தீப்பொறி உருவாக்கப்படுகின்றன. மத்திய அமெரிக்காவில், பாம் ஞாயிறு விழாவின்போது பனை மரக் காடுகளை தாறுமாறாக மக்கள் அழித்து வருகின்றனர்.

''மத சடங்குகளுக்காக சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதை  நியாயப்படுத்த முடியாது'' என சூழலியல் ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்த போதிலும், விழாக்கால மகிழ்ச்சியில் சூற்றுசூழல் பாதுகாப்பு என்பதெல்லாம் மக்களுக்கு கசப்பு மருந்துகளாக இருக்கின்றன. பட்டாசுளை தயாரித்து, உள்நாட்டு மற்றும் இந்திய சந்தைகளில் விற்று பெரும் லாபம் பார்க்கும் சீனா, தங்கள் நாட்டில் பட்டாசுகளை கையாளுவதில் மிகவும் கவனமாக இருக்கின்றது.  சீன புத்தாண்டு தினத்தன்று பட்டாசுகளை வெடிப்பது சீன பாரம்பரியங்களில் ஒன்று. ஆனால் கடந்த வருடம் முதல், பழமையான கட்டிடங்கள் உள்ள 700 நகரங்களில் பட்டாசு வெடிக்க சீனா தடை விதித்துள்ளது. இந்த விதிகளை செயல்படுத்துவதற்காக 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களை உள்ளடக்கிய படையை சீனா உருவாக்கியுள்ளது. கட்டுப்பாடுகளை மீறி பட்டாசு வெடிப்பவர்களுக்கு 75 டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.

பட்டாசுகள் வெடிக்கும் மரபுகளை மீறி, சுற்றுசூழலைக் கருத்தில் கொண்டு சீனா, முதல்கட்டமாக சில முடிவுகளை எடுத்துள்ளது. சீனாவின் கட்டுப்பாட்டால் ஸ்காட் கெல்லியால், ஓரளவு சீனாவின் மாசற்ற காற்றை பார்க்க முடிந்தது. ஆனால் இந்தியாவின் கட்டுப்பாடற்ற கொண்டாட்டங்களால், மாசற்ற காற்று கானல் நீராக மட்டுமே இருக்கிறது.

சீனாவை போல நாமும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான  சில  முயற்சிகளை எடுக்கலாம். 

- ஆ. நந்தகுமார்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ