Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

”நாற்றம் அடிக்கும் நாடோடி!'' இந்தியாவுக்கு வந்த இங்கிலாந்து பெண்ணுக்கு கிடைத்த பெயர்

இங்கிலாந்தின் நார்த் டிவோன் மாவட்டத்தின் சிறிய கிராமம். பரபரப்பற்ற, அழகிய கடற்கரை. கரையை ஒட்டி, கட்டைகளால் ஆன சிறு குடில்களும், கேரவான் எனப்படும் வண்டி வீடுகளும் நிறைந்திருக்கின்றன. இங்கு வாழ்பவர்களில் பெரும்பாலானவர்கள், உலகின் பொதுச்சமூக ஓட்டத்தில் இருந்து சற்றே விலகியிருப்பவர்கள். ஹிப்பிக்கள், ஜிப்ஸிக்கள், நோமேட்ஸ் என அவர்களுக்கு பல பெயர்கள் உண்டு. நம்மைப் பொறுத்தவரை, இவர்கள் நாடோடிக் கூட்டம் அல்லது இந்தியாவின் பயணத் தந்தையாக கருதப்படும் ராகுல சாங்கிருத்யாயன் கூற்றுப்படி "ஊர்சுற்றிகள்." இந்தப் பகுதியில் இருந்து 2008-ல், தன் காதலர் மற்றும் குழந்தைகளுடன், ஆறு மாதப் பயணமாக இந்தியா வருகிறார் ஃபியோனா மேக்கியோன் . அவர் முதலில் வந்திறங்கும் இடம் கோவா.

கோவாவைச் சேர்ந்த 25 வயதான ஜீலியோ லோபோ என்பவர் இவர்களுக்கு கைடாக இருந்து தேவையான வசதிகளை செய்து தருகிறார். ஃபியோனாவின் 15 வயது மகள் ஸ்கார்லட் கீலிங், மிக உற்சாகமாகவும், சந்தோஷத்துடனும் கோவாவைச் சுற்றி வருகிறார். அவருக்கு அங்கு நிறைய நண்பர்களும் கிடைக்கிறார்கள். 2 மாதங்களுக்குப் பிறகு, கோவாவில் இருந்து, கர்நாடக மாநிலம் கோகர்னாவுக்கு ஸ்கார்லட் குடும்பம் நகர்கிறது. அது பிப்ரவரி மாதம்... தன் நண்பர்கள் அளிக்கும் காதலர் தின கொண்டாட்டத்தில் பங்கேற்க  பிடிவாதம் பிடித்து அனுமதி வாங்கி, கோகர்னாவில் இருந்து கோவாவுக்குத் தனியாக வருகிறார் ஸ்கார்லட். பிப்ரவரி 19,... கோவாவின் ஒரு அழகிய தேவாலயத்தின் அருகில், உருத்தெறியாமல் சிதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது ஸ்கார்லட்டின் உடல்.

அன்று இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளின் தலைப்புச் செய்தியாக இருந்த இந்த சம்பவம், இப்போது மீண்டும் விவாதப் பொருளாகி இருக்கிறது. கடந்த 8 வருடங்களாக நடந்த ஸ்கார்லட் கொலை வழக்கில், குற்றம் சுமத்தப்பட்ட, கோவாவைச் சேர்ந்த சாம்சன் டி சோசா  மற்றும் பிளாசிடோ கார்வலோ ஆகியோர் போதிய சாட்சிகள் இல்லாததாலும், குற்றம் சரிவர நிரூபிக்கப்படாததாலும் இப்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.

"அவளைக் கடைசியாக பார்த்தத் தருணம் இன்னும் என் கண்களிலேயே நிற்கிறது. அவள் கோவாவுக்குப் போக நான் அனுமதிக் கொடுத்ததும், துள்ளிக் குதித்து, என்னைக் கட்டி அணைத்து, முத்தம் கொடுத்து...'ஐ லவ் யூ மாம்...' என்று சொல்லி, கண் சிமிட்டி, புருவம் உயர்த்தி, உதட்டை சுழித்து... சிரித்தபடியே சென்றாள்..." என்று உடைந்த குரலில், சிதைந்த தன் வாழ்க்கைக் குறித்துப் பேசத் தொடங்குகிறார் ஃபியோனா மேக்கியோன்.

"செய்தி கேள்விப்பட்டு ஓடிப்போய் பார்த்தோம். `அதிக போதையினால் கடலில் விழுந்து இறந்துவிட்டார். இது ஒரு விபத்து' என போலீசார் வழக்கை முடித்துவிட்டனர். எனக்கு பெரும் அதிர்ச்சி. அவளின் உடலில் நிறைய காயங்கள் இருந்தன. கோவா மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்த டாக்டர்களில் ஒருவர், `இது கற்பழிப்பாக இருக்கக்கூடும்' என்று எங்களிடம் கூறினார். அதன்பிறகு, போலீசிடம் போராடி இரண்டாவது முறை உடற்கூறு ஆய்வை நடத்தச் செய்தோம். அதில், என் மகளின் உடலில் ஆழமான 50க்கும் மேற்பட்ட காயங்கள் இருந்தன, ரத்தத்தில் கொகெயின் இருந்தது. அவர் இறப்பதற்கு முன்னர், பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார் என்று ரிப்போர்ட் வந்தது..."

அந்தநொடி முதல் இந்திய தேசத்தின் சட்டத்தையும், அதில் படிந்திருக்கும் லஞ்ச ஊழல் கறைகளையும் எதிர்த்ததோடு அல்லாமல், தன் மகளின் தன்மானத்தைக் காக்க தனி மனுஷியாகத் தொடர்ந்து போராடிய ஃபியோனா இன்று பெரும் தோல்வியைச் சந்தித்திருக்கிறார். இந்த தோல்விக்கு எத்தனையோ காரணங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. கோவா காவல்துறை மீதான நம்பிக்கையை இழந்த ஃபியோனா, வழக்கை சிபிஐக்கு மாற்ற போராடினார். மார்ச், 27-ல் கோவா சட்டமன்றத்தில் இது சிபிஐக்கு மாற்றப்படும் என அறிவிக்கிறார் கோவாவின் அன்றைய முதல்வர் திகம்பர் காமத். ஆனால், மே மாத இறுதியில் தான் அவரிடமிருந்து சிபிஐக்கு கடிதம் அனுப்பப்பட்டது. சிபிஐ தன்னுடைய விசாரணையைத் தொடங்கியது ஜூன் 5-ம் தேதி. பிப்ரவரி 19-ம் தேதி நடந்த சம்பவத்துக்கான விசாரணை ஜூன் 5-ம் தேதி தான் தொடங்கியது. அதற்குள் பல சாட்சிகள் பிறழ் சாட்சிகளாகி விட்டன. சில சாட்சிகள் அழிக்கப்பட்டு விட்டன. 

விசாரணைத் தொடங்கப்பட்டதால், உயிரணுக்களை சேகரிப்பது, சம்பவ இடத்தில் மேற்கொள்ள வேண்டிய தடயவியல் சோதனைகள் போன்றவற்றை சரிவர செய்யமுடியவில்லை. மேலும், இந்த வழக்கின் முக்கிய சாட்சியாகக் கருதப்படுபவர் மைக்கேல் மேனியன் என்கிற இங்கிலந்து டூரிஸ்ட். போலீசின் முதல் தகவல் அறிக்கையில் அவர் இப்படிக் கூறியுள்ளார்...

"நான் மாலை பப்பிற்குப் போகும்போதே ஸ்கார்லெட்டையும், சாம்சனையும் பார்த்தேன். அவர்கள் போதை மயக்கத்தில் இருந்தனர். பின்னர் அதிகாலை 5 மணி அளவில் பார்க்கிங்கில் என் ஸ்கூட்டரை எடுக்கப் போனேன். அங்கு ஸ்கார்லெட்டை சாம்சன் பலவந்தப்படுத்திக் கொண்டிருந்தார். இதைப் பார்த்ததும் பதற்றமாகி, நான் அங்கிருந்து ஓடிவிட்டேன்..." 

ஆனால், சிபிஐ தன் விசாரணையைத் தொடங்குவதற்குள் இவர் இங்கிலாந்துக்குப் போய்விட்டார். அங்கிருந்து வீடியோவில் இவர் வாக்குமூலத்தைப் பதிய முற்பட்டபோது, “எனக்கு மனஅழுத்தம் அதிகமாக இருக்கிறது. நான் எதையும் சொல்ல மாட்டேன்... நான் எதையும் பார்க்கவில்லை" என்று சொல்லிவிட்டார். இப்படி, எப்.ஐ.ஆரில் பதிவு செய்யப்பட்டிருந்த 200 சாட்சிகளில், பெரும்பாலானவை பிறழ் கண்டன.

வழக்கின் போக்கு ஏற்படுத்தும் வலி ஒரு புறம், இன்னொரு புறம், நாடோடியாக இருப்பதாலேயே பெரும் அவமானங்களைச் சந்தித்தார் ஃபியோனா. அவர் வாழ்க்கை முறை, வாழும் இடம், உடை, தலையில் போட்டிருக்கும் இரட்டை ஜடை என அனைத்தையும் கேள்விக்கு உள்ளாக்கின ஊடகங்கள். "நாற்றம் அடிக்கும் நாடோடி"  (soap dodging pikeys) என்று பலர் விமர்சித்தார்கள். 

"நான் குழந்தைகளை அவர்கள் போக்கில் வளர்க்க விரும்பினேன். அவர்கள் வாழ்வின் வளர்ச்சிக்கும், மகிழ்ச்சிக்கும் நான் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று எண்ணினே தவிர, ஒரு நாளும் அவர்கள் மீது அடக்குமுறையைப் பிரயோகிக்கவில்லை. மேலும், என் நடை, உடை, முடியைப் பற்றிப் பேசும் இவர்கள், என் பெண்ணுக்கு நேர்ந்த அநீதியை, அது ஒரு அநீதியான செயல் என்பதையே ஏற்க மறுக்கிறார்கள்" என்று வருத்தத்தோடு சொல்கிறார் ஃபியோனா.

குற்றம் சுமத்தப்பட்ட சாம்சன் கோவாவின் ஒரு பப்பில் பார் டெண்டராக இருக்கிறார். இவரின் நண்பர் பிளாசிடோ. இவர்களுடன் ஸ்கார்லெட்டிற்கு நட்பு ஏற்பட, அவர்களோடு இணைந்து கோவாவை வலம் வந்திருக்கிறார். சம்பவத்தன்று, மாலை நேரத்தில் சாம்சன் வேலை செய்யும் பாரின் சமையலறையில் உட்கார்ந்து குற்றம் சுமத்தப்பட்டவர்கள் இருவரும் கொகெய்னை இழுத்துக் கொண்டு இருந்திருக்கிறார்கள். ஸ்கார்லெட்டையும் வற்புறுத்தி இழுக்க வைத்துள்ளனர். பின்பு, போதை... குடி... நடனம்... அதன் உச்சமாக பாலியல் வன்புணர்வு, கொலை என முடிந்ததாகத் தான் முதலில் இந்த வழக்குத் தொடரப்பட்டது. பின்னர், இவர்கள் சமையலைறையில் கொகெய்ன் இழுத்ததைப் பார்த்த முரளிசாகர் என்ற சமையல்காரரும் நீதிமன்றத்தில் பிறழ் சாட்சியாகி விட்டார். 

ஃபியோனாவின் எட்டு ஆண்டு கால போராட்டம், நீதிமன்றத்தால் ஐந்தே நொடிகளில் முடித்துவைக்கப்பட்டது. 

"இரைச்சலில் எனக்கு முதலில் தீர்ப்பு சரியாக கேட்கவில்லை. சில நொடிகள் கழித்து புரிந்ததும், நான் நொந்துவிட்டேன். குற்றவாளிகள் போதை பயன்படுத்தியது நிரூபிக்கப்பட்டது. அதற்காகவாவது குறைந்தபட்ச தண்டனையை அவர்களுக்கு வழங்கியிருக்க வேண்டும். இதற்கு மேலும் தொடர்ந்து வழக்கு நடத்த என்னிடம் பொருளாதார வசதியும் இல்லை. மனதளவில் தெம்பும் இல்லை..." என்று தளர்ந்த குரலில் சொல்கிறார் ஃபியானோ.

"எனக்கான நீதி கிடைத்துவிட்டது. மகிழ்ச்சியாக இருக்கிறது." என்று ஒற்றை வரியில் முடித்துக் கொண்டார் குற்றம் சுமத்தப்பட்ட சாம்சன். சிரித்த முகத்தோடு, ஊடகங்களிடம் கையசைத்து தீர்ப்பு குறித்த தன் கருத்தைப் பதிவு செய்தார் பிளாசிடோ.

இந்த வழக்கில் ஃபியோனாவிற்காக வாதாடியவர் வழக்கறிஞர் விக்ரம் வர்மா. அவரிடம் பிரத்யேகமாக நாம் எடுத்த பேட்டி:

இந்த வழக்கு உங்கள் தரப்பின் கைகளில் இருந்து நழுவியது எதனால்?

"சாட்சிகள் உறுதித்தன்மை இல்லாமல் போனது முதல் காரணம். 2 மாதங்களுக்கு ஒரு முறை ஹியரிங் என வழக்கை இத்தனை ஆண்டுகள் இழுத்தடித்தது மற்றுமொரு காரணம். ஆனாலும் இதையெல்லாம் கடந்து, முக்கியமான ஒரு காரணம், பின்னணியில் இருந்த "ட்ரக் மாஃபியா"

இந்த வழக்கில் இங்கிலந்து அரசு ஃபியோனாவிற்கு எந்தளவிற்கு உதவியது?

"இந்தியா போன்ற இறையாண்மைமிக்க நாட்டில் நடக்கும் ஒரு கிரிமினல் வழக்கில் இங்கிலாந்து அரசு எந்த வகையிலும் தலையிட முடியாது. இருந்தும்... வழக்கு குறித்த நிகழ்வுகளை ஃபியோனாவிற்கு அது தொடர்ந்து தெரியப்படுத்தி வந்தது..."

இந்த தீர்ப்பிற்குப் பின் ஃபியோனா எப்படி இருக்கிறார்?

"உருக்குலைந்து போயிருக்கிறார்"

 

"எல்லாம் முடிந்துவிட்டது... என் பெண்ணிற்கு யாரும் போதை மருந்தை தரவில்லை... அவளை யாரும் வன்புணரவில்லை... யாரும் கொலை செய்யவில்லை... யாருமே எந்த தவறும் செய்யவில்லை... எல்லாவற்றிருக்கும் காரணம் நான் தான். தேசம், மொழி, சாதி, மதம், கலாச்சாரம் என அனைத்து தனி மனித அடையாளங்களையும் கடந்து மனிதம் என்ற ஒற்றை சொல்லின் கீழ், மக்கள் மீதான அன்பை மட்டுமே சுமந்துகொண்டு நாடோடியாக நான் வாழ்வது தவறு. சக மனிதர்களின் மீதான நம்பிக்கையில் என் பெண்ணை தனியாக கோவாவிற்கு அனுப்பியது நான் செய்த பெரும் பிழை... எனக்கு மட்டும் நேரத்தை மாற்றியமைக்கும் சக்தி இருந்தால், என் மகளை தனியாக அனுப்பிய அந்த காலத்திற்குள் சென்று அதை மாற்றியமைத்து விடுவேன். என் வாழ்க்கையும் சீராகிவிடும்... அது முடியமா..?" என்று கண்கள் தளும்பக் கேட்கிறார் இந்த "நாற்றம் அடிக்கும் நாடோடி". அந்த கேள்விக்கான விடை கேள்வியாகவே தொக்கி நிற்கிறது! 

-இரா.கலைச்செல்வன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close