Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இரும்பு முதல் உப்பு வரை... 100 பில்லியன் சொத்து மதிப்பு கொண்ட டாடா குழுமம்!

இந்தியாவிலேயே மிகப் பெரிய தொழில் குழுமம். உப்பு முதல் இரும்பு வரை தயாரிக்கும் நிறுவனங்களைக் கொண்டது டாடா குழுமம். பிரிட்டனின் புகழ்பெற்ற ஜாகுவார் கார் நிறுவனம் கூட இப்போது டாடா குழுமத்தின் கையில்தான். 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புக் கொண்ட பாரம்பரியமிக்க தொழில் செழுமை கொண்ட டாடா குழுமம் இப்போது சர்ச்சையில் சிக்கியிருக்கிறது.  டாடா குழுமத்தின் தலைவர் பதவியில் இருந்து சைரஸ் மிஸ்திரி நீக்கப்பட்டுள்ளார்.  மீண்டும் டாடா குழுமத்  தலைவராக ரத்தன் டாடா பொறுப்பேற்றிருக்கிறார்.

கடந்த 1991ம் ஆண்டு ரத்தன் டாடா இந்த குழுமத்தின் தலைவர் பதவியில் அமர்ந்தார். இவரது தலைமையில்தான் அதாவது,  2000ம் ஆண்டில் இருந்து டாடா குழுமம்  வெளிநாடுகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டது. தொடர்ந்து 2012ம் ஆண்டு டாடா குழுமத்தின் தலைவர் பதவியில் இருந்து ரத்தன் விலகினார். அதற்கு பிறகே 2012ம் ஆண்டு சைரஸ் மிஸ்திரி பொறுப்பேற்றார்.

கடந்த 1868ம் ஆண்டு பிரிட்டன் ஆட்சி காலத்தில் ஜாம்ஷெட்ஜி டாடாவால் இந்த குழுமம் ஆரம்பிக்கப்பட்டது. தொழில்முனைவதில் அலாதி ஆர்வம் கொண்ட பார்சி இனத்தைச் சேர்ந்தவர் ஜாம்ஷெட்ஜி டாடா. ஜாம்ஷெட்ஜி விதைத்த விதையால் வளர்ந்து ஆலமரமாகி 100 நாடுகளில் கிளை பரப்பி டாடா குழுமம் தற்போது செயல்பட்டு வருகிறது.. டாடா குழுமத்தை கட்டுப்படுத்தும் முழு அதிகாரம் டாடா சன்ஸ் போர்டுக்கு இருக்கிறது.

டாடா குழுமத்தை தொடங்கிய ஜாம்ஷெட்ஜி டாடா கடந்த 1868ம் ஆண்டு முதல் 1904ம் ஆண்டு வரை தலைவராக இருந்தார். அடுத்து டோரப் டாடா, நவ்ரோஜி சக்லத்வாலா, ஜஹாங்கிர் ரத்தோஜி டாடா ஆகியோருக்கு பிறகு ரத்தன் டாடா பொறுப்பேற்றார். இவருக்குப் பின், சைரஸ் மிஸ்திரி தலைவர் பதவிக்கு வந்தார். இதில் ரத்தன் மட்டுமே இருமுறை தலைவராகியுள்ளார்.

நவ்ரோஜி சக்லத்வாலாவுக்கு பிறகு, டாடாவின் குடும்ப பெயர் இல்லாமல்  தலைவர் ஆனது சைரஸ் மிஸ்திரிதான் . இவர் பார்சி தொழிலதிபர் பலோன்ஜி மிஸ்திரியின் இளைய மகன் ஆவார். டாடா குழுமத்தில் 18. 5 சதவீத பங்குகள் பலோன்ஜி மிஸ்திரி குடும்ப வசம் உள்ளது. சுமார் 66 சதவீத பங்குகள் டாடா சன்ஸ் கட்டுப்பாட்டில் உள்ள டிரஸ்ட் வசம் உள்ளன.மற்றவை பிறர் வசம் உள்ளன.

டாடா குழுமத் தலைவரை  தேர்ந்தெடுக்கும் அதிகாரம் டாடா சன்ஸ்க்குதான் உண்டு. சைரஸ் மிஸ்திரியை பதவிநீக்கம் செய்துள்ள அதே போர்டுதான் அவரை பதவியிலும் அமர்த்தியது.

கடந்த 2000ம் ஆண்டில் இருந்து டாடா குழுமம் வெளிநாட்டு நிறுவனங்களை குறிவைத்து வாங்கத் தொடங்கியது.  லேண்ட் ரோவர் கார் தயாரிக்கும் ஜாகுவார் நிறுவனத்தை 2.3 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு டாடா குழுமம் வாங்கியது. கடந்த 2007ம் ஆண்டு 12 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு பிரிட்டன் மற்றும் நெதர்லாந்து நாடுகளின் கூட்டு நிறுவனமான 'கோரஸ் ' எக்கு நிறுவனத்தையும் வாங்கியது. அடுத்து பிரிட்டனின் புகழ்பெற்ற டெட்லீ டீ நிறுவனத்தைக் கையகப்படுத்தியது. கடந்த 16 ஆண்டுகளில் சிறியதும் பெரியதுமாக 23 வெளிநாட்டு நிறுவனங்களை டாடா குழுமம் கையகப்படுத்தியுள்ளது.

மும்பையில் உள்ள'பாம்பே ஹவுஸ்' தான் டாடா குழுமத்தின் தலைமையகம். உலகம் முழுக்க 6 லட்சத்து 60 ஆயிரம் ஊழியர்கள் டாடா குழும நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர்.

டாடா குழுமம் கைவைக்காதத் துறையே இல்லை எனலாம். உப்பு, ஹோட்டல், வாட்சுகள், கார் தயாரிப்பு என எல்லாவற்றிலும் ஈடுபடுகிறது. பிரபல தாஜ் ஹோட்டல்கள் கூட டாடா குழுமத்துக்கு சொந்தமானதுதான்.

டாடா குழுமத்தில் 6 நிறுவனங்கள் மிகவும் பெரியவையும் பாப்புலருமானவை. டாடா மோட்டார்ஸ். ஐடி என்று எடுத்துக் கொண்டால் டாடா கன்சல்ட்டிங் சர்வீசஸ். இந்தியாவின் முன்னணி தெகவல் தொழில் நுட்ப நிறுவனம். லட்சக்கணக்கான சாப்ட்வேர் என்ஜீனியர்களின் கனவு நிறுவனமும் கூட. அதே போல் டாடா ஸ்டீல், டாடா டீ மற்றும் டாடா கெமிக்கல்ஸ் , டாடா டெலிவிஸ்டர்ஸ் ஆகியவை மிக முக்கியமானவை.

டாடா குழுமத்தைச் சேர்ந்த ஒவ்வொரு  நிறுவனத்துக்கும் தனித் தனி இயக்குனர் குழு உள்ளது. அந்த இயக்குனர்கள் குழுதான் பங்குதாரர்களுக்கு பதில் அளிக்க வேண்டும். டாடா மோட்டார்ஸ் தலைமை செயல் அதிகாரி  ஜிந்தர் பத்ஷேக் டாடா கன்சல்ட்டிங் சர்வீசஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி நடராஜன் சந்திரசேகரன் ஆகியோர் டாடா குழுமத்தின் முக்கியத் தலைகள். 

மிஸ்திரிக்கு டாடா 'டாடா' காட்டியதன் முக்கிய பின்னணி என்ன?

எல்லா சர்வதேச  நிறுவனங்கள் போலவே மந்த பொருளாதாரத்தால் டாடா குழுமத்தின் வருவாய் இந்த நிதி ஆண்டில் மட்டும் 4.6 சதவீதம் சரிந்தது. குழுமத்தைச் சேர்ந்த ஒவ்வொரு நிறுவனத்துக்குமே  தலைக்கு மேல் பல்வேறு பிரச்னைகள். பிரிட்டனில் டாடா ஸ்டீலில் மட்டும் 15 ஆயிரம் பேர் வேலை பார்த்து வருகின்றனர். அதே வேளையில் இரும்பு விலை சரிவு, விற்பனை பாதிப்பால் டாடா ஸ்டீல் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.

டாடா கன்சல்ட்டிங் சர்வீசஸஸ் நிறுவனத்துக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து வர வேண்டிய பெருந்தொகை பாக்கியாக கிடக்கிறது. ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் விற்பனையும் பெருமளவு சரிந்துள்ளது.  டொகோமோ மொபைல் சர்வீசசுக்காக  மட்டும் ஜப்பானின் என்டிடி டொகோமோ நிறுவனத்துக்கு 1.17 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலுத்த வேண்டிய நிர்பந்தமும் இருக்கிறது.இந்த விவகாரம் நீதமன்றம் வரை சென்று முடிவுக்கு வந்தது. தற்போது என்டிடி டொகோமோவுக்கும் டாடாவுக்கும் உறவு முறிந்து விட்டது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் டாடா சன்ஸ் போர்டு பிரமால் எண்டர்பிரைசஸ் தலைவர் அஜே பிரமால், டி.வி.எஸ் குழுமத் தலைவர் வேணு சீனிவாசன் ஆகியோரை டாடா சன்ஸ் போர்டு உறுப்பினர்களாக்கியது. அப்போது டாடா குழுமத் தலைவர் என்ற வகையில் மிஸ்திரியிடம் அனுமதி பெறவில்லை. இது மிஸ்திரிக்கும் டாடா சன்ஸ் போர்டுக்கும் கருத்து வேறுபாட்டினை அதிகரித்தது.

கடந்த ஜுன் மாதத்தில் வெல்ஸ்பன் சோலார் நிறுவனத்தை 1.4 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு டாடா குழுமம் கையகப்படுத்தியது. இது தொடர்பாக மிஸ்திரி டாடா சன்ஸ் போர்டிடம் அனுமதி வாங்கவில்லை. டாடா குழுமத்தை கட்டுப்படுத்தும் டாடா சன்ஸ் போர்டு 66 சதவீத பங்குகளை வைத்திருக்கிறது.  அதனால், அனுமதி வாங்குவது கட்டாயம்.

மிஸ்திரியின் பல முடிவுகள் டாடாவின் பல நிறுவனங்களுக்கு பிரச்னையையே ஏற்படுத்தியுள்ளன அல்லது உற்பத்தியை நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன. டாடா ஸ்டீல் யு.கே நிறுவனம் அதில் முக்கியமானது.

பில்லியன் டாலர் சொத்து மதிப்பு கொண்டுள்ள ஒரு நிறுவனத்தின் தலைவர் என்ற வகையில், திறமையாளர்களை அடையாளம் கண்டு பக்கத்தில் வைத்துக் கொள்ளும் திறமை மிஸ்திரியிடம் இல்லை என்றும் சொல்லப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் டாடா குழுமத்தின் நிதித்துறைத் தலைவராக இருந்த இசாந்த் ஹசைன் ஓய்வு பெற்ற  பிறகு இன்று வரை அந்த பதவியில் இன்னொருவர் நியமிப்படவில்லை என்பதை உதாரணமாகச் சொல்கிறார்கள்.

டாடா குழுமத்தின் பல கட்டுமானப்பணிகளை உறவினர் நிறுவனமான சபோர்ஜி பலோன்ஜி நிறுவனத்துக்கு வழங்கியதும் மிஸ்திரி மீது வைக்கப்படும் முக்கியமான குற்றச்சாட்டு. மிஸ்திரியின் தாய் அயர்லாந்தைச் சேர்ந்தவர். அதனால், பாரம்பரியமிக்க இந்தியக் குழுமத்துக்கு மிஸ்திரி தலைவராக இருக்கக் கூடாது என்பதில் டாடா சன்ஸ் போர்டுக்குள் சிலர் உறுதியாக இருந்துள்ளனர்.

-எம். குமரேசன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ