Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’வார்த்தைகளற்று உறைந்து கிடக்கிறேன்...!’ - சைரஸ் மிஸ்திரியின் கடிதம்...!

 

டாடா குழும இயக்குநர்கள்  ஆலோசனை கூட்டம்  மும்பையில் இரண்டு நாட்களுக்கு முன்பு  நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டாடா குழுமத்தின் தலைவர் சைரஸ் பி.மிஸ்திரி நீக்கப்பட்டார்.  மேலும் ரத்தன் டாடா இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டார்.

தன்னை நீக்கியது குறித்து ஒரு நீண்ட கடிதத்தை, டாடா இயக்குநர்கள் குழுவுக்கு நேற்று சைரஸ் எழுதி உள்ளார்.

அதன் தமிழாக்கம்,

 

டாடா குழும இயக்குநர்களுக்கு,

அக்டோபர் 24,  2016-ல் நடந்த டாடா குழும இயக்குநர்கள் கூட்டத்துக்குப் பிறகு நான் வார்த்தைகளற்று உறைந்து போய் கிடக்கிறேன். காரணம் என்ன என்பதை நீங்களே அறிவீர்கள். அதையொட்டிதான், இந்தக் கடிதமும். இது குழும இயக்குநர்களுக்கானது மட்டுமே தவிர, சக ஊழியர்களை குறிப்பிட்டு இல்லை. கடும் நெருக்கடியிலும் அயராது உழைக்கும் ஊழியர்களை மிகவும் மதிப்பவன் நான். என் கேள்விகளெல்லாம் இதுதான், டாடா குழும பங்குதாரர்களுக்கு சேர வேண்டிய நிதி ரீதியான உரிமங்கள் இன்னும் சென்று சேரவில்லை, அதனால் பாதிப்படையாத டாடா குழுமத்தின் எதிர்காலமா என் தனியொருவனால் பாதிக்கப்பட்டு விடப்போகிறது?  தவிர, ஒருவரைப் பதவியிலிருந்து நீக்கும் முன், அவர் தரப்பு நியாயத்தையும் கேட்பதுதான் நீதியின் பொருள். ஆனால் என்னைப் பேச அனுமதிக்காமலே குழுமத்தினர் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார்கள். கார்ப்பரேட் வரலாறுகளில், முக்கியமாகப் பரம்பரைக் கார்ப்பரேட்களில் இப்படியான நடவடிக்கைகள் எனக்கு அதிர்ச்சியூட்டுவதாக இருக்கிறது. இப்படியான செயல்பாடு என் பெயரையும் குழுமத்தின் மதிப்பையும்தான் பாதிப்படையச் செய்யும். 

கடந்த 2011-ல் திரு. பட்டாச்சார்யா அவர்களும், அப்போதைய தலைவர் ரத்தன் டாடா அவர்களும் தனித்தனியே என்னை சந்தித்து டாடா நிறுவனங்களின் தலைவராகப் பொறுப்பேற்குமாறு வற்புறுத்தினார்கள். அப்போது, நான் தனியாக கம்பெனி ஒன்றை இயக்கி வந்ததால் முடியாது என முதலில் மறுத்தேன். ஆனால் டாடா குழுமத்தின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, என் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இருவரும் வற்புறுத்தியதன் பேரில், நானும் சம்மதித்தேன். எனக்கு சுதந்திரமாக இயங்கும் அதிகாரம் தரப்பட்டது. 

நான் தலைவராகப் பொறுப்பேற்றதும் குழுமம், தலைவர்கள் மற்றும் குழுமத்தின் கீழ் இயங்கிவரும் தனித்தனி நிறுவனங்களிடையேயும் புரிந்துணர்வுக்காக புதிதாக விதிமுறைகள் நிர்ணயம் செய்யப்பட்டன. பழைய தலைவர் ஆலோசனைப் பொறுப்பில் இருப்பார் என்றும் கூறப்பட்டது. ஆனால் அந்த விதிமுறைகள் தலைமையிடத்தில் எவராலும் சரிவரப் புரிந்து கொள்ளப்பட்டதா என்பது சந்தேகமே. தலைவராகப் பொறுப்பேற்ற பின் நான் சந்தித்த சிக்கல்கள் ஏராளம். சுருள் வட்டத்திலேயே சுற்றிக் கொண்டிருப்பதற்கு பதில் நான் சந்தித்த சிக்கல்களைப் பற்றி நேரடியாகவே கூறுகிறேன்.

பொதுமக்களுக்குத் தெரிந்த வரை ஜாகுவார் மோட்டாரும், தெத்லி டீயும் தவிர்த்து டாடாவின் இதர கம்பெனிகள் அந்நிய நிறுவனங்களைக் கையகப்படுத்த முயன்றன. ஆனால் அது பெரும் கடனை மட்டுமே மிச்சப்படுத்தின, நியூயார்க்கின் பியரி ஹோட்டலை டாடாவின் தாஜ் ஹோட்டல்ஸ் லீஸில் கையகப்படுத்தியது, டாடாவின் இந்தியன் ஹோட்டல் கம்பெனிகள் நிறுவனம் ‘சீ-ராக்’ குழும சொத்துகளை அதிக விலை கொடுத்து ஆக்கிரமித்தது என அனைத்தும் 10 பில்லியன் அமெரிக்க டாலர் வரை டாடா குழுமத்துக்கு இழப்பை ஏற்படுத்தியது. டாடா கெமிக்கல்ஸின் கென்யா மற்றும் ஐரோப்பிய கிளை இன்னும் ஏன் இயங்கிக் கொண்டிருக்கிறது என்றே தெரியவில்லை. இவை அத்தனையிலும் அதலபாதாளத்தில் டாடாவின் டெலிகாம் நிறுவனங்கள் இருக்கின்றன. இவற்றை உடனடியாக விற்றால் 4 முதல் 5 பில்லியன் டாலர்கள் வரை கையகப்படுத்த முடியும், இது நலிந்து கிடக்கும் ’டொகோமோ’ தவிர்த்து. தவிர ‘டொகோமோ’விலேயே நுகர்வோர் தரப்பு மற்றும் பங்குதாரர்கள் தரப்பு என இருதரப்பிலும் அப்போதைய டெலிகாம் நிறுவனங்களுகான சட்ட திட்டங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் பல சிக்கல்கள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டும் குழுமத்தின் மொத்த மீள் முதலீட்டுத் தொகை சார்ந்த வருவாய் 400 கோடி ரூபாயிலிருந்து 2,500 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

மற்றொரு பக்கம் குழுமத்திற்கே பேரிடியாக இருந்தது டாடா மோட்டார்ஸ். 2013-க்கு முன்பு அதன் முதலீட்டில் அடங்காத லாபம் மட்டுமே 4,000 கோடி ரூபாய். ஆனால் நானோ கார்கள் நிலைமையைப் புரட்டிப்போட்டன. 1 லட்சம் ரூபாய் பெறுமானமுள்ள கார் தயாரிப்புகள் தொடக்கத்திலேயே நிறுவனத்துக்கு 1,000 கோடி ரூபாய் இழப்பைத் தந்து சரிவை ஏற்படுத்தியது. ஆனால் நானோ தயாரிப்பை நிறுத்த மன ரீதியாக யாருக்கும் சம்மதம் இல்லை. மேலும் ரத்தன் டாடா அவர்கள் பங்குதாரராக இருந்து வந்த எலெக்ட்ரிக் வாகனத் தயாரிப்பு நிறுவனத்துக்கு நானோ க்ளைடர்கள் இறக்குமதி அதனால் பாதிக்கப்படும் வாய்ப்பும் இருந்ததால் தயாரிப்பை நிறுத்த இயலாத நிலை ஏற்பட்டது. 

2011 தொடங்கி 2015 வரையில், இந்த நிறுவனங்களுக்கான செயல்பாட்டு வரைபடத்தை கவனித்தால் அதில் செய்யப்பட்ட முதலீடு 1,32,000 கோடி ரூபாயிலிருந்து 196,000 கோடி ரூபாய்வரை அதிகரித்துள்ளது. இது குழுமத்தின் மொத்த மதிப்பான 1,74,000 கோடி ரூபாயை விட அதிகம். 

இதற்கிடையே நான் நிறுவனத்தில் சேர்ந்த புதிதில் ஏர் ஏஷியாவில் பங்குதாரராக இணைவது பற்றியும் , சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பங்குதாரராக இணைவது குறித்தும் டாடா அவர்கள் முன்னமே முடிவு செய்து வைத்திருந்தார்.  30 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமானமுள்ள ஏர் ஏஷியா நிறுவனத்தில் 30% பங்குதாரராக டாடா இணைந்தது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் 100 மில்லியன் டாலர் பெறுமானமுள்ள செயல்பாட்டிலும் தன்னைப் பெரும் பங்குதாரராக இணைத்துக் கொண்டது. இது அத்தனையும் திரு.டாடா அவர்களுக்கு விமானங்களின் மீதிருந்த தீராக் காதலால், நான் நிர்பந்தம் செய்யப்பட்டு எடுக்கப்பட்ட முடிவே தவிர அதுபற்றி யோசிப்பதற்குக் கூட எனக்குக் கால அவகாசம் தரப்படவில்லை.

குழுமங்களுக்கான சட்ட திட்டங்களை யாரும் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை என்று முன்பு சொல்லியிருந்தேன். காரணம் குழுமத்தில் இருக்கும் தனி நபர்கள் யாரும் தங்கள் சுய முடிவுகளை வெளிப்படுத்தியதாகத் தெரியவில்லை, குழுமத்தின் தலைமை இயக்குநர்கள் கூட்டத்தில் திரு. விஜய்சிங்கும் திரு. நிதின் நொஹாரியாவும், தங்கள் முடிவுகளை தெளிவுபடுத்தும் முன்னர், டாடா அவர்களின் விருப்பத்தைத் தெரிந்துகொள்ள கூட்டத்திலிருந்து பாதியிலேயே வெளியேறினார்கள். அவர்களுக்காக மொத்த உறுப்பினர்களும் சுமார் ஒரு மணி நேரம் வரை காத்திருந்தார்கள். இயக்குநர்கள் தங்கள் முடிவுகளை முன்வைக்கும் சுதந்திரம் கூட ஒரு கார்ப்பரேட்டில் இல்லாத நிலை. 

 

திரு.விஜய் சிங்குடன், ஃபரிதா கம்பட்டா, திரு.ரோனி சென் அடங்கிய குழுதான் நான் செயல்படாத தலைவராக இருப்பதாகப் புகார் கூறியிருக்கிறது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் அதற்கு சற்று முன்புதான் நான் நன்றாக செயல்படுவதாக கம்பட்டா அவர்களும் சென் அவர்களும் என்னிடம் கூறிவிட்டுச் சென்றார்கள். 

ஆனால் இவ்வளவு சிக்கலிலும் ஒரு நன்மையாக டாடா குழுமத்தின் கலிங்க நகர் திட்டத்தை என்னால் வெற்றிகரமாகச் செயல்படுத்திக் கொண்டுவர முடிந்தது. மும்பை பங்குச் சந்தைக்கு எதிரான டாடா குழுமத்தின் மதிப்பை 10 % வரை 2013 தொடங்கி 2016 வரையிலான காலகட்டத்தில் உயர்த்தியிருக்கிறேன். மேலும் குழுமத்தின் மொத்த மதிப்பையும் 14% வரை அதிகரித்திருக்கிறேன். பணப்போக்குவரத்து வருடாந்திரமாக 31% வரை உயர்ந்துள்ளது. குழுமத்தின் சொத்துமதிப்பை 26,000 கோடியிலிருந்து 42,000 கோடியாக அதிகரித்திருக்கிறேன். மேலும் சமுதாயத்தின் வளர்ச்சிக்காக டாடா குழும உறுப்பினர்கள் அனைவரும் பில்லியன் நேரங்கள் செலவிடவேண்டும் என்கிற யோசனையை முன்வைத்து 1.2 பில்லியன் நேரங்களை டாடா குழும அடிமட்ட உறுப்பினர்கள் வரை சமுதாய வளர்ச்சிக்காக செலவிட வைத்திருக்கிறேன். என்னை ’செயல்படாத வாத்து பொம்மை’ என்று குறிப்பிடுவது மனதை பாதிக்கவில்லை என்று பொய் உரைக்க என்னால் இயலாது. என்னை அங்கீகரிக்கா விட்டாலும் நான் கொடுத்த இவ்வளவு ஆண்டுகால உழைப்புக்காக கர்வம் கொள்கிறேன். 

உண்மையுள்ள, 

சைரஸ் மிஸ்திரி

தமிழில் - ஐஸ்வர்யா

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close