Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘பயிருக்கு மழையாய் வந்த மகள்..!’ - நிவேதிதா பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு...!

 

‘‘எங்கள் தேசத்துப் பெண்கள் கல்வி பெற உன்னால் உதவ முடியும் என நம்புகிறேன்’’ என்று சொன்ன சுவாமி விவேகானந்தரின் வரிகளுக்கு மதிப்புக் கொடுத்து, உடனே இந்தியா வந்தவர் மார்கரெட் எலிசபெத் நோபிள். இவர் வேறு யாரும் அல்ல... சுவாமி விவேகானந்தரின் முதன்மைச் சீடரும், சமூக சேவகியுமான சகோதரி நிவேதிதா தான். அவருடைய பிறந்த தினம் இன்று.

மேற்கத்திய நாட்டிலிருந்து எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல்... நம்முடைய பண்பாட்டின் மீதும் நம் மக்களின் முன்னேற்றத்தின் மீதும் முழு அக்கறையும் அன்பும் மதிப்பும் கொண்டு வாழ்ந்து மறைந்த மார்கரெட் எலிசபெத் நோபிள், அயர்லாந்து நாட்டில் வசித்த மதபோதகரான சாமுவேல் நோபிள் - மேரி ஹாமில்டன் தம்பதியருக்கு 1867-ம் ஆண்டு அக்டோபர் 28-ம் நாள் மகளாகப் பிறந்தார். தந்தை உடல்நிலை காரணமாக, சிறுவயதிலேயே இறந்ததால் தன் தாத்தாவின் பராமரிப்பில் வளர்ந்தார். இசையிலும் நுண்கலையிலும் ஈடுபாடு கொண்டிருந்த மார்கரெட், கடுமையான கட்டுப்பாடுகள் கொண்ட ஹாலிபாக்ஸ் கல்லூரியில் பயின்றார். கல்லூரிப் படிப்பை முடித்த மார்கரெட், இங்கிலாந்தில் ஆசிரியப் பணியைத் தொடங்கினார். ஏழைகளுக்குச் சேவை செய்வதையே தன் வாழ்நாளின் குறிக்கோளாகக் கொண்டிருந்தார். பின்னர், 1892-ல் சொந்தமாகப் பள்ளி ஒன்றை நிறுவி அதனை மென்மேலும் முன்னேற்றினார்.

‘‘அவரை, நீ சந்திக்க வேண்டும்!’’

1895-ம் ஆண்டு மார்கரெட்டின் தோழி ஒருவர், ‘‘என் வீட்டுக்கு இந்தியாவிலிருந்து துறவி ஒருவர் வந்திருக்கிறார். அவரை, நீ சந்திக்க வேண்டும்’’ என்று அழைப்பு விடுத்தார். அதனை ஏற்று, அங்குசென்ற மார்கரெட், சுவாமி விவேகானந்தரை முதன்முதலில் கண்டார். அவரது தூய்மையும் ஆன்மிக நெறிகளும் அவரது மனதை ஈர்த்தன. அவரைச் சந்தித்து ஆன்மிகம் குறித்து நிறைய சந்தேகங்களைக் கேட்டு, அவரது கவனத்தை ஈர்த்தார். அந்தக் கணமே, தன் நாட்டை விட்டுவிட்டு சுவாமி விவேகானந்தரின் அன்புக் கட்டளையை ஏற்று, இந்தியாவுக்கு வந்தார். ‘‘பொதுவாக உலக மக்கள் சுயநலம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால், ஆங்கிலேயர்கள் அவ்வாறு அல்ல’’ என்றார் மார்கரெட். அதற்கு விவேகானந்தர், ‘‘பொதுவாக உலக மக்கள் குணத்திலிருந்து ஓர் இனத்தை மட்டும் மேம்படுத்திச் சொல்லும் தேசபக்தி... பாவமே தவிர, வேறெதுவும் இல்லை’’ எனச் சொல்லி அவருக்கு மெய்ஞான பயிற்சிகள் அளித்து... பாரத தேசத்துக்குச் சேவையாற்றப் பக்குவப்படுத்தினார்.

நம் நாட்டு ஞானிகளின் உரை, புராணங்கள், இதிகாசங்கள் ஆகியவற்றைப் படித்து அதன்மூலம் நம் மக்களுக்கு நன்னெறியும் நல்வழியும் காட்ட அவருக்கு அறிவுரை வழங்கினார்.

மார்கரெட் பெயர் மாற்றம்!

1898-ம் ஆண்டு கொல்கத்தாவில் பெண்களுக்கான ஒரு பள்ளியைத் திறந்து, அவர்களுக்குக் கல்வியறிவைப் போதித்தார். அத்துடன் ஓவியம் வரையவும், தையல் மற்றும் மண்பொம்மை செய்யவும் கற்றுக் கொடுத்தார். அதே ஆண்டு மார்ச் மாதம் 25-ம் நாள் சுவாமி விவேகானந்தர், மார்கரெட்டை ராமகிருஷ்ண மடத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு, அவருக்கு இறைவழிபாடு பற்றிப் போதித்தார் சுவாமிஜி. அதன்பிறகு, பிரம்மச்சர்ய நோன்பினை ஏற்கும்படியான தீட்சையும் வழங்கினார். அப்போது, மார்கரெட் என்னும் அவருடைய பெயரை மாற்றி ‘அர்ப்பணிக்கப்பட்டவள்’ எனும் பொருள் புதைந்த ‘நிவேதிதா’ எனும் பெயரைச் சூட்டினார்.

அன்னை சாரதா தேவி, இவரைத் தன் மகளாகவே கருதி அன்பு செலுத்தினார். 1899-ம் ஆண்டு கொல்கத்தாவில் பிளேக் நோய் தாக்கியபோது, ஏழை மக்களுக்கு மருத்துவ உதவிகள் உள்ளிட்ட சேவைகளைச் செய்தார். தெருக்களைச் சுத்தம் செய்யும் பணியில் உள்ளூர் இளைஞர்களையும் ஈடுபடுத்தினார். பிளேக் நோய் நிவாரணம் குறித்தும் சுகாதாரம் குறித்தும் மக்களுக்கு எடுத்துரைத்தார். ஒரு பகுதியில் தெருவைச் சுத்தம் செய்ய எவரும் முன்வராதபோது, தானே துடைப்பத்தை எடுத்துச் சுத்தம் செய்தார். அதிகாலையிலிருந்து நள்ளிரவு வரை ஓய்வின்றி அவர் உழைத்தார். பிளேக் நோயாளிகளைத்தானே நேரடியாகக் கவனித்து சிகிச்சைக்கு உதவினார். நிவாரணப் பணிகளுக்குத் தேவையான நிதியையும் அவரே திரட்டினார்.

இந்தியக் கலைக்கு விளக்கம்!

1899-ம் ஆண்டு திருத்தொண்டு ஆற்றுவதற்காக சகோதரி நிவேதிதாவை, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு அனுப்பி வைத்தார் சுவாமி ஜி. அங்கு சென்ற நிவேதிதா, பாரத நாட்டின் பண்பாடுகளையும், பழம்பெருமைகளையும் எடுத்துரைத்து இங்கிலாந்து, அமெரிக்காவில் இந்து மதம் தொடர்பாக நிலவிய தவறான கருத்துகளைப் போக்கினார். ‘‘காந்தாரக் கலை என்பது மேற்கத்திய தாக்கத்தால் ஏற்பட்டது; அது மட்டுமல்ல... இந்தியக் கலை வளர்ச்சியே, மேற்கத்தியக் கலை தாக்கத்தால் ஏற்பட்ட ஒன்றுதான்’’ என்ற ஓர் அயல்நாட்டவரின் கருத்தை மறுத்த சகோதரி நிவேதிதா, ‘‘காந்தாரக் கலையில் உள்ள மேற்கத்திய தாக்கமே அதன் பலவீனம் என்றும், காந்தாரக் கலைக்கு முந்தைய மகத கலையின் இயல்பான சுதேசி வளர்ச்சியை அஜந்தா குகைகளில் காண முடிகிறது என்பதையும், அது அந்தக் காலகட்டத்தின் மேற்கத்திய கலை வளர்ச்சியைக் காட்டிலும் மேன்மையானதாக இருக்கிறது’’ என்பதையும் அசைக்க முடியாத ஆதாரங்களுடன் முன்வைத்தார்.

பள்ளிக்கு நிதி திரட்ட நியூயார்க்கில் ‘ராமகிருஷ்ணா தொண்டர் சங்கம்’ என்ற அமைப்பை நிறுவினார். அதன்பிறகு, மீண்டும் 1901-ம் ஆண்டு இந்தியா திரும்பினார். 1902-ம் ஆண்டு சுவாமி விவேகானந்தரின் மறைவு அவரைப் பேரிடியாய் தாக்கியது. அவருடைய மறைவுக்குப் பிறகு, இந்தியாவில் இன்னும் அதிக உத்வேகத்துடன் சேவையாற்றினார்; அரவிந்தருடன் இணைந்து விடுதலை இயக்கத்தில் பங்கேற்றார்; சொற்பொழிவுகள் பல நிகழ்த்தினார்; நூல்கள் பல எழுதி வெளியிட்டார்; இந்திய விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்துக் களம் கண்டார்.

பாரதியின் குருஸோத்திரம்!

பெண்கள் குறித்த பாரதியாரின் பார்வையில் ஆக்கபூர்வமான மாற்றம் ஏற்படக் காரணமாக இருந்தவர் சகோதரி நிவேதிதா. 1907-ம் ஆண்டு நடைபெற்ற பனாரஸ் காங்கிரஸ் மாநாட்டுக்குச் சென்ற பாரதியாரும் அவரது நண்பர்களும் கொல்கத்தாவில் சிறிது காலம் தங்கியிருந்தனர். அப்போது, தேசப் பக்தர்கள் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில், பாரதியாரும் கலந்து கொண்டார். கூட்டம் முடியும் தருவாயில், பாரதி தன்னை சகோதரி நிவேதிதாவிடம் அறிமுகப்படுத்திக் கொண்டார். அத்துடன், தான் இயற்றிய சில பாடல்களையும் பாடிக்காட்டினார். அதனைக் கேட்டுப் பெரிதும் மகிழ்ந்தார் நிவேதிதா. அப்போது, ‘‘உன் கவித் திறமையை பாரத மாதா, சுதேசி சேவைக்கே உபயோகிக்க வேண்டுகிறாள். அன்னையின் விருப்பமும் கட்டளையும் அதுதான். உடனே உன்னை அர்ப்பணம் செய்து, கிடைப்பதற்கரிய மாதாவின் வரப்பிரசாதத்தைப் பெற்றுக்கொள்’’ என்று பாரதியிடம் வேண்டுகோள் வைத்தார் நிவேதிதா. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு... நிவேதிதா, பாரதியின் வழிகாட்டியாய், ஞானகுருவாய் விளங்கினார். பாரதியார் அவரை, ‘அன்னை’ என்றே அழைத்தார். அவருடைய அருள்பெற்றதும் பாரதி,

‘‘அருளுக்கு நிவேதனமாய், அன்பினுக்கோர்

        கோயிலாய், அடியேன் நெஞ்சில்

இருளுக்கு ஞாயிறாய் எமதுயர் நாடாம்

        பயிர்க்கு மழையாய், இங்கு

பொருளுக்கு வழியறியா வறிஞர்க்குப்

        பெரும்பொருளாய்ப் புன்மைத் தாதச்

சுருளுக்கு நெருப்பாகி விளங்கிய தாய்

        நிவேதிதையைத் தொழுது நிற்பேன்!’’ - என்று சகோதரி நிவேதிதாவுக்கு குரு ஸோத்திரம் பாடியுள்ளார். 

பாரதியார் உணர்ச்சி ததும்பும் பாடல்களைப் பாடுவதற்கும், தீவிரமாகச் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கும் சகோதரி நிவேதிதாவே காரணமாக இருந்தார்.

‘‘ஆசிரியருக்கு 50 கேள்விகளுக்கு பதில் தெரிந்திருக்க வேண்டும்!’’

‘‘குழந்தையின் ஒரு கேள்விக்கு திருப்திகரமான பதிலை அளிக்க 50 கேள்விகளுக்கு ஆசிரியருக்கு பதில் தெரிந்திருக்க வேண்டும்’’ என்ற நிவேதிதா, அடிப்படையில் ஒரு கல்வியாளர்; குழந்தைகளுக்குக் கல்வி சொல்லிக் கொடுப்பதில் விருப்பம்கொண்டவர்; மாணவர்கள் கேள்வி கேட்பதை ஊக்குவிக்கும் கல்விமுறையை வலியுறுத்தியவர்; அடித்தட்டு மக்களுக்குக் கல்வி அளிப்பதே உண்மையான விடுதலை என்பதை உணர்ந்தவர். ‘‘குழந்தை எந்த உயிரினத்தைப் பார்த்தும் அருவருப்பு அடைவதோ, அச்சம் கொள்வதோ கூடாது. அதன் பொருட்டு இந்த ஆரம்பக் கால கட்டத்திலிருந்தே சிலந்தி, கொசு, தட்டான், வண்ணத்துப்பூச்சி, நத்தை, புழுக்கள், மரவட்டை ஆகிய உயிரினங்களைக் குழந்தைகள் தெரிந்து கொள்ளும்படி செய்ய வேண்டும். அவற்றைப் பார்த்து, அவை நம் தோழர்கள் என்ற உணர்வு குழந்தைக்கு ஏற்பட வேண்டும்’’ என்று 100 ஆண்டுகளுக்கு முன்னரே தன்னுடைய கல்வியியல் கோட்பாட்டைக் கூறியவர் நிவேதிதா.

தேசியக்கொடியை உருவாக்க முயற்சி!

முதன்முதலாக இந்தியாவுக்கான தேசியக்கொடியை உருவாக்க முயற்சித்தார் சகோதரி நிவேதிதா. அவர் உருவாக்கிய கொடியில் சிவப்பு, மஞ்சள் நிறங்கள் இருந்தன. சிவப்பு நிறப் பின்னணியில் 108 ஜோதிகள் இருந்தன. மஞ்சள் நிறத்தில் வஜ்ராயுதம் ஒன்றும், கொடியின் இரு புறங்களில் ஒரு பகுதியில் ‘வந்தே’ என்ற சொல்லும் இன்னொரு புறத்தில் ‘மாதரம்’ என்ற சொல்லும் வங்க மொழியில் எழுதப்பட்டிருந்தன.

ரவீந்திரநாத் தாகூரால் ‘லோகமாதா’ எனவும், அரவிந்த் கோஷால் ‘அக்னிசிகா’ எனவும் அழைக்கப்பட்ட சகோதரி நிவேதிதா, தன்னுடைய 44-வது வயதில் மறைந்தார்.

பாரதத்தின் பெருமையைப் பறைசாற்றிய மேற்கத்திய பெண் நிவேதிதா!

- ஜெ.பிரகாஷ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close