Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மணல் மாஃபியாவுக்கும், ஓ.பி.எஸ்-ஸுக்கும் தொடர்பு? - நடவடிக்கை எடுக்கத் தயங்கும் கலெக்டர்!

ரூர் மாவட்டத்தில் உள்ள கிழக்கு தவுட்டுப்பாளையம், கடம்பன்குறிச்சி பகுதிகளில் விதிமுறைகளை மீறி மணலை அள்ளி மூவாயிரம் கோடி ரூபாயை மணல் மாஃபியா கும்பல் சுருட்டி இருப்பதாக புலம்பி வருகிறது காவிரி ஆறு பாதுகாப்பு குழு. தமிழகத்தின் பொறுப்பு முதல்வராக இருக்கும் ஓ.பி.எஸ்ஸின் உறவினர்கள் என்று சொல்லிக்கொண்டு, மணல் சுரண்டும் கும்பல் மணலை கொள்ளையடிப்பதை எதிர்த்துப் போராடி வரும் இக்குழுவினர், கடந்த 12-ம் தேதி தோழர் நல்லக்கண்ணு உள்ளிட்டவர்களை அழைத்துவந்து மணல் குவாரிகளை முற்றுகையிட்டு, இழுத்துப் பூட்டும் போராட்டத்தை நடத்தினார்கள். ஆனால்,  நல்லக்கண்ணு உள்ளிட்ட முப்பது பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் , மணல்குவாரி நடத்துவோர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போராட்டத்திற்குப் பிறகும் முப்பதுக்கும் மேற்பட்ட லாரிகளில், விதிகளை மீறி காவிரியில் மணலை அள்ளி வருகிறது அந்தக் கும்பல். இந்த அடாவடித்தனங்களை வீடியோ ஆதாரமாக எடுத்து மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜை சந்தித்து தொடர் புகார் கொடுத்து வந்தது போராட்ட தரப்பு. ஆனால் அலுவலகத்தில் இருந்து கொண்டே பின்வாசல் வழியாக வெளியேறிச் சென்ற கலெக்டர் கோவிந்தராஜ், அவர்களின் புகாரை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

இந்த சூழலில்தான், வேலாயுதம்பாளையம் ரவுண்டானா பகுதியில் முறைகேடு மணல்குவாரி கும்பலை அடக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வர வலியுறுத்தியும் பொதுக்கூட்டம் நடத்த காவிரி ஆறு பாதுகாப்புக் குழு ஏற்பாடு செய்தது. தமிழர் தேசிய முன்னணி அமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் மற்றும் இந்திய கம்னியூஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் சி.மகேந்திரன் ஆகிய இரு தலைவர்களையும் வைத்து கண்டன பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால்,மாவட்ட கலெக்டரும், அரவக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளரும் அதற்கு தடா போட, மதுரை உயர்நீதிமன்ற கிளையை அணுகியது, போராட்டக்குழு. ஆனால், உயர்நீதிமன்ற கிளையும் அரசிடம் விளக்கம் கேட்டு, வழக்கை ஒத்தி வைத்துள்ளது. 

 இருந்தாலும், விடாக்கொண்டனாக இருக்கும் போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் முகிலனும், காவிரி பாதுகாப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன் புகழூரில் உள்ள தனது இல்லத்திலேயே பிரஸ் மீட்டிற்கு ஏற்பாடு செய்திருந்தார். 

அப்போது பேசிய முகிலன், "கலெக்டர் கோவிந்தராஜ் மணல் மாஃபியாவிடம் விலை போய்விட்டார்.  அமைச்சர்கள் ஓ.பி.எஸ், விஜயபாஸ்கர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அனைவரும் இதில் ஒன்றாக கூட்டு சேர்ந்துள்ளனர்.  தங்கள் மீது தவறு இல்லையென்றால்,அதனை அவர்கள் நிரூபிக்கட்டும்" என்று சூடு கிளப்பினார்.

 அடுத்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய சி.மகேந்திரனும் கடுமையாக சாடினார்.  "எங்கள் தலைமையில் நடக்க இருந்த பொதுக்கூட்டத்தை கலெக்டரும், எஸ்.பி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளும் ஒருதலைப்பட்சமாக தடை பண்ணி இருக்காங்க. எல்லா அரசியல்வாதிகளும் இந்த மணல் கொள்ளையை எதிர்க்கணும். ஆனால், அவர்கள் எதிர்க்கலை. அதனால்,மக்களே போராட்டக் களத்துக்கு வந்துட்டாங்க. இந்த மணல் கொள்ளையில், அதிகாரிகள், லோக்கல் அமைச்சர்ன்னு பலருக்கும் தொடர்பு இருக்கு. தன் மீது தவறு இல்லைன்னா அமைச்சர் பதில் சொல்லட்டும். நான் இங்கே பகிரங்கமாக கலெக்டர் மீது குற்றம்சாட்டுகிறேன், இந்த விசயத்தில் பணம் வாங்கி இருக்கார்ன்னு. அப்படி வாங்கலைன்னா அவரும் நிரூபிக்கட்டும். முதல்வர் மருத்துவமனையில் இருக்கும் நிலையில்,அந்த பொறுப்பை கவனிக்கும் ஓ.பி.எஸ் பெயரைச் சொல்லி இந்த கும்பல் மணல் சுரண்டலில் ஈடுபடுகிறது. ஆனால்,அவர் பதிலளிக்காம இருக்கிறார். தனக்கும், இந்த மணல் விவகாரத்திற்கும் தொடர்பில்லையென்றால், ஓப்பனாக முன்வந்து அவர் பதில் கூறட்டும். வீடியோவா மணல்குவாரி மோசடிகளை போராட்டக் குழு பதிவு பண்ணி போய் கலெக்டரிடம் கொடுத்தால், அவர் பயந்து ஓடுகிறார். அதனால் மணல் கொள்ளை போவதைப் பற்றி அரசும் கவலைப்படலை, அதிகாரிகளும் கவலைப்படலை. இந்த விவகாரத்தை நாங்க தொடர் போராட்டமா கொண்டு போக இருக்கிறோம்" என்று வார்த்தைகளால் சுட்டெரித்தார் மகேந்திரன். 

அடுத்து பேசிய பழ.நெடுமாறன், "1884-ம் வருடம் ஆறுகளில் மணல் அள்ளக்கூடாது என்று ஆங்கிலேயர்கள் சட்டம் போட்டார்கள். அந்த சட்டங்களை ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களெல்லாம் கடைபிடிக்கின்றன. ஆனால், தமிழ்நாட்டில் அந்தச் சட்டத்தை காத்துல பறக்கவிட்டு, மணலைச் சுரண்டி, அந்த மாநிலங்கள்ல பல ஆயிரம் கோடிகளுக்கு விற்கும் கொடுமை நடக்குது. இந்த மணல் கொள்ளையில் ஆட்சி அதிகார மேல்மட்டத்தில் இருந்து கீழ்மட்டம், அதிகாரிகள் வரை பங்கு போவுது. அதான், நடவடிக்கை எடுக்காம மௌனிகளா இருக்காங்க. இந்த ரீதியில் மணலை சுரண்டினால் எதிர்காலத்தில் ஆபத்து ஏற்படும். விவசாயத்துக்கு நீர் இருக்காது. சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். எதிர்கால சந்ததிக்கு நல்ல வாழ்க்கை அமையாது. உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா ரெண்டு நாளைக்கு முன்புதான், 'ஆத்து மணல் அள்ளுவதை தடை பண்ணனும்ன்னு' தீர்ப்பு சொன்னார். ஆனால், அதை யாரும் மதிக்கலை. தி.மு.க, அ.தி.மு.க-ன்னு பாகுபாடு இல்லாம எல்லா ஆட்சியிலயும் மணல் சுரண்டல் நடக்குது. இதைத் தடுக்க ஒரு இயக்கமா கொண்டு போவோம்" என்றார்.

காவிரி ஆறு பாதுகாப்பு குழு, 'அரவக்குறிச்சி தொகுதியில் நிற்கும் வேட்பாளர்களில் இந்த மணல் குவாரி சுரண்டலை எதிர்க்காத வேட்பாளர்களை புறக்கணிப்போம்" என்று தீர்மானம் போட்டு பத்திரிக்கையாளர்களிடம் அளித்தது.

அடுத்து, பழ.நெடுமாறன், சி.மகேந்திரன், முகிலன், விஸ்வநாதன் உள்ளிட்ட நூறு பேர் கடம்பன்குறிச்சி பகுதியில் சட்டத்தை மீறி செயல்படும் மணல்குவாரியை பார்வையிடச் சென்றனர்.  ஆற்றில்,மூன்று கிலோமீட்டர் உள்ளே பொக்லைன்களை வைத்து மணல் அள்ளுவது நடக்க, அதை நோக்கி போனார்கள். அப்போது, அங்கிருந்த சிலர் இவர்கள் மீது கற்களை எறிய, அந்த ஏரியாவில் பதற்றம் ஏற்பட்டது.  பாதுகாப்புக்கு போன போலீஸார், நடுவில் புகுந்து ஏற்பட இருந்த அசம்பாவிதத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கடம்பங்குறிச்சி மணல்குவாரி கும்பல் தாக்குதல் மற்றும் கலெக்டர் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து கேட்பதற்காக கரூர் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜை நான்கைந்து முறை தொடர்பு கொண்டோம். ஃபோனை அட்டன்ட் செய்த, அவரது பி.ஏ என்றுசொன்ன மோகன்ராஜ் என்பவர்,"சார் மீட்டிங்கில் இருக்கார். நீங்க சொல்ற தகவல்களை சாரிடம் கன்வே பண்ணிடுறேன். அவரே உங்களை தொடர்பு கொள்வார்" என்று ஒவ்வொரு முறையும் சொன்னார். ஆனால், இதுவரை பேசவில்லை.

- துரை.வேம்பையன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ