Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திசைமாறிய தீபாவளி வெடி... சுட்டுக் கொல்லப்பட்ட 'சிமி' தீவிரவாதிகள்!

        


தென்னிந்திய மக்கள் கடந்த சனிக்கிழமையும், வட இந்திய மக்கள் அதற்கடுத்த நாளான ஞாயிறு (அக்-30)அன்றும் தீபாவளி கொண்டாட்டத்தில் மூழ்கிக் கிடந்த அதே வேளையில் தான் மத்தியப்பிரதேச சிறையின் கழிவறை சுவரை உடைத்து சிமி தீவிரவாதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.

அதிகாலை 3 மணி... மத்தியப்பிரதேச மாநிலம் கந்தவா மாவட்ட மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிமி தீவிரவாதிகளில் ஒருவன் கழிவறைக்கு செல்வது போல கழிவறை சுவரை ஆள் நுழையும் அளவுக்கு வழியை உடைத்து விட்டு அறைக்குத் திரும்பினான். அவன் கொடுத்த சிக்னலின் அடிப்படையில், அங்கு அடைக்கப்பட்டிருந்த 'சிமி' யின் மொத்தக் குழுவும் கழிப்பறை துளை வழியாக வெளியேறியது. சிறைப்பகுதியின் ரோந்து பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் கண்ணில் பட்டு விடவே போலீசாரும், கைதிகளும் மோதிக் கொண்டனர்.

இந்த மோதலில் சிறைக் காவலாளி ராம்சங்கரை அலுமினிய தட்டின் உதவியுடன், தீவிரவாதிகள் கழுத்தை அறுத்துக் கொன்றனர். தாக்குதலால் மயங்கிக் கிடந்த இரண்டு போலீசாரின் துப்பாக்கியையும் சிமி தீவிரவாதிகள் எடுத்துச் சென்றதாக தகவல் பரவவே, போலீசார் மத்தியில் பதற்றமான சூழ்நிலை உருவானது. மருத்துவமனையில் குண்டு வைத்த வழக்கில் சிக்கிய, அபீத் அன்சாரி என்ற 'சிமி' இயக்க தீவிரவாதி இதே சிறையில் இருந்துதான் கடந்த முறை தப்பினார். காலில் அடிபட்டவர் என்பதால் அவரால் வேகமாக ஓடமுடியாது, இதனால் அபீத் அன்சாரி கடந்தமுறை போலீசில் எளிதாக சிக்கிக் கொண்டார். இந்த முறையும் தப்பிய சில நிமிடங்களிலேயே போலீசில் சிக்கிக் கொண்டார்.

அபீத் அன்சாரி அளித்த தகவலில்தான், தப்பிச் சென்ற 8 பேரும் தங்கப் போகும் இடம், அவர்களின் நடவடிக்கைகள் குறித்த அனைத்துத் தகவல்களும் போலீசாருக்கு கிடைத்தது. சிறையில் கொடுக்கப்படும் போர்வையைப் பயன்படுத்தி மதிற்சுவரை கடந்து தப்பித்ததும், கழிப்பறையில் துவாரமிட்டு தப்பிச் செல்லும் திட்டம் உருவானதும் அடுத்தடுத்த விசாரணையில் தெரிய வந்தாலும் மிக முக்கியமான தகவலே 'தப்பியவர்கள் பதுங்கும் இடம்' எது என்பதுதான். தப்பித்துச் சென்ற 8 பேரில், ஜாஹீர் உசேன், மெகபூப் ஆகிய இருவர் சென்னை மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்த சென்ட்ரல் குண்டு வெடிப்பு (மே- 1,- 2014- ) வழக்கில் முதன்மைக் குற்றவாளிகள் ஆவர்.

அம்ஜத், ஜாகீர் உசேன் சாதிக், முகம்மது சாலிக், முஜிப் ஷேக், மெகபூத் குட்டு, முகம்மது காலித் அகமது, அகில், மஜீத் ஆகிய 8 தீவிரவாதிகளும் போபால் புறநகர் பகுதியான இன்த்கெடி எனும் கிராமத்தில் ஒரு இடத்தில் பதுங்கி இருந்தபோது போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர் "ஜாஹீர் உசேனையும், மெகபூப்பையும் விசாரணைக்காக எங்களிடம் கொடுத்து விடுங்கள்" என்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளி (என்.ஐ.ஏ)டம் பலமுறை தமிழ்நாடு சி.பி.சி.ஐ.டி. போலீசார் கேட்டுப் பார்த்து விட்டனர்.

ஆனால் அவர்கள், " பாதி விசாரணையின்போதே குற்றவாளியை இப்படியெல்லாம் கொடுக்க முடியாது... மேலும், உ.பி.யிலிருந்து அவர்களை உச்சக்கட்ட பாதுகாப்பு கொடுத்துதான் தமிழ்நாட்டுக்கு கொண்டு வரவேண்டிய சூழ்நிலை இருக்கிறது" என்று கூறி மறுத்து விட்டனர்.

என் கவுன்ட்டர்களுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் பேராசிரியர் அ. மார்க்ஸ் கூறும்போது, "சிறையில் இருந்து தப்பித்தவர்கள் பெரிய படைகள் ஆயுதங்களோடு வெளியே சென்றார்கள், அவர்களை உயிருடன் பிடிக்க வாய்ப்பில்லை என்று இதில் சொல்ல முடியாது. போலீசாரைக் கொன்றுவிட்டு அவர்கள் சென்றதாக வருகிற தகவல்கள் உண்மையிலேயே மிகவும் வருத்தமளிக்கிறது. அதற்குத் தீர்வு என் கவுன்ட்டர் அல்ல. அவர்களை உயிருடன் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனையை வாங்கித் தரவேண்டியதுதான் முறை" என்றார்.

- ந.பா. சேதுராமன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ