Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏற்கெனவே தப்பிச் சென்றவர்களைத்தான் சுட்டார்களா?  - போபால் என்கவுன்ட்டரின் 6 மர்மங்கள்

போபால் சிறையில் இருந்து தப்பியோடியதாகக் கூறி எட்டு விசாரணைக் கைதிகள் கொல்லப்பட்ட சம்பவம், அரசியல்ரீதியான சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ' தப்பிய கைதிகள் மீது காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியிருந்தால் கிராமத்து மக்கள் பீதியில் அங்கிருந்து ஓடியிருக்க மாட்டார்களா? இது ஒரு திட்டமிட்ட படுகொலை' எனக் கொந்தளிக்கிறார் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா. 

மத்தியப்பிரதேச மாநிலம், போபால் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிமி இயக்கத்தைச் சேர்ந்த எட்டு பேர் திங்கள் கிழமை காலை தப்பிச் சென்றதாக தகவல் வெளியானது. இதுகுறித்து சிறைத்துறை வட்டாரத்தில் வெளியான தகவலில், ' இந்த சம்பவத்தில் தொடர்புடைய முகமது அகீல் கில்ஜி என்கிற அப்துல்லா, மெகபூப் குட்டூ என்கிற மாலிக், முகமது காலித் அகமது, முஜீப் ஷேக் என்கிற யூசூப், அம்ஜத் கான், ஜாகிர் உசேன் ஷேக் என்கிற வினய் குமார், அப்துல் மஜித் ஆகிய எட்டு பேரும் தலைமை காவலரைக் கொலை செய்துவிட்டு, 20 அடி உயர மதில் சுவரைத் தாண்டி தப்பிச் சென்றனர்' எனத் தெரிவிக்கப்பட்டது. பின்னர், அவர்கள் பதுங்கியிருக்கும் தகவலைக் கேள்விப்பட்டு, அந்த இடத்தை சுற்றி வளைத்து எட்டு பேரையும் சுட்டுக் கொன்றதாக போலீஸார் தெரிவித்தனர். இந்தத் தாக்குதலில் இரண்டு போலீஸாருக்குப் படுகாயம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

"சிறையில் இருந்து தப்பியோடியதாகச் சொல்லப்பட்டு, எட்டு பேரும் காவல்துறையால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில்  விசாரணைக்குழு அமைக்கப்பட வேண்டும்" எனக் கொதிக்கிறார் பேராசிரியர் ஜவாஹிருல்லா. அவர் நம்மிடம், "விசாரணைக் கைதிகள் தப்பியோடிய பத்து மணி நேரத்துக்குள் அச்சாரபுரா என்ற கிராமத்தில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று மத்தியப்பிரதேச காவல்துறை சொல்வதை பகுத்தறிவுள்ள எந்தவொரு மனிதராலும் நம்ப இயலாது. இவர்கள் அனைவரும் சிமி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் மிக மோசமான பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டவர்கள் என்றும் குற்றம் சுமத்தப்பட்டு போபால் உயர் பாதுகாப்பு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள். இவர்கள் சிறையிலிருந்து தப்பியது குறித்தும் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டது குறித்தும் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் எழுப்பியுள்ள கேள்விகள் மிக நியாயமானவை. இந்த விவகாரத்தில் எங்களுக்குச் சில சந்தேகங்கள் எழுகின்றன" என்றவர், அதுகுறித்து விரிவாகவே பட்டியலிட்டார். 

1. இந்த சம்பவத்தில், சுட்டுக் கொல்லப்பட்ட எட்டு பேரில் நான்கு பேர் ஏற்கெனவே சிறையிலிருந்து தப்பித்தவர்கள் என்கின்றனர். பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள எட்டு விசாரணை கைதிகளும் சிறையில் ஒரே இடத்தில் அடைத்து வைக்கப்படுவதற்கு எப்படி அனுமதிக்கப்பட்டார்கள்? 

2. போபால் சிறை மிக உயர் பாதுகாப்பு சிறை என்ற தகுதிபெற்றது. பல அடுக்கு பாதுகாப்பை கடந்து இவர்கள் எட்டு பேரும் ஒரே நேரத்தில் படுக்கை விரிப்பை பயன்படுத்தி, உயரமான சுவர்கள் மீது ஏறி குதித்து தப்பிக்க எவ்வாறு சாத்தியமானது? 

3. சிறையிலிருந்து தப்பித்த 10 மணி நேரத்துக்குள் கொல்லப்பட்டபோது, விசாரணை கைதிகளுக்குத் தடைச் செய்யப்பட்ட நல்ல உடைகள், கை கடிகாரம் மற்றும் ஷூ போன்றவற்றை அணிந்திருந்தனர். இது எப்படி சாத்தியமானது? 

4. காவல்துறையினர் சுற்றி வளைத்தபோது காவலர்களை நோக்கி இவர்கள் துப்பாக்கியால் சுட்டதாகவும் காவலர்கள் எதிர்த் தாக்குதல் நடத்தியதாகவும் போபால் சரக காவல் தலைவர் (ஐ.ஜி.) யோகேஷ்  சௌத்ரி குறிப்பிட்டுள்ளார். ஆனால், சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட காணொலி காட்சிகளில் கைதிகள் பயன்படுத்திய ஒரு துப்பாக்கி கூட காணப்படவில்லையே ஏன்? இந்த விசாரணை கைதிகளிடம் கரண்டிகள் மட்டுமே இருந்தது என்றும் அவர்களிடம் ஆயுதம் இல்லையென்றும் மத்தியப்பிரதேச உள்துறை அமைச்சர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். ஆயுதம் தறிக்காத நிலையில் இவர்களை கைது செய்ய வாய்ப்பிருந்தும் மத்தியப்பிரதேச காவல்துறை சுட்டு கொன்றது ஏன்?

5. என்கவுன்ட்டர் நடைபெற்ற இடத்தில் எடுக்கப்பட்ட காணொலி காட்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. இதில் காவல்துறையினருக்கு உதவும் கிராமத்தினரின் குரல்களும் ஒலிக்கின்றன. தப்பிய கைதிகள் தங்களை சுற்றி வளைத்த காவல்துறையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தியிருந்தால் கிராமத்து மக்கள் பீதியில் அங்கிருந்து ஓடியிருக்க மாட்டார்களா? இதற்கு மாறாக சுட்டுக் கொன்ற பிறகும் இறந்த கைதிகளின் சடலங்கள் மீது மீண்டும் மீண்டும் காவலர்கள் குண்டுகளை பொழிவது நியாயமானதா?

6. போபால் மத்திய சிறையின் உயர்ந்த சுவர்கள் மீது ஏறி தப்பிக் குதித்து எட்டு விசாரணை கைதிகளும் தப்பினார்கள் என்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதைதான். இதேபோல், ' பத்து மணி நேரத்தில் தப்பிய அவர்களை சுற்றி வளைத்தோம், அவர்கள் காவலர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினார்கள். எனவே நாங்கள் அவர்கள் மீது எதிர் தாக்குதல் நடத்தி கொன்றோம்' என்ற ம.பி. காவல்துறையின் கூற்று வடிகட்டிய பொய் என்பதை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் காணொலிகள் அம்பலப்படுத்துகின்றன. நிராயுதபாணியான ஒருவர் மீது அவர் எவ்வித தாக்குதலும் நடத்தாத நிலையில் காவலர் அவரை சுட்டுக் கொல்வது பட்டவர்த்தனமாக காணொலியில் தெரிய வருகின்றது" எனப் பட்டியலிட்டவர், 

இறுதியாக, " பயங்கர குற்றவாளிகளுக்கு காவல்துறையினரே தண்டனை அளிக்கும் போபால் என்கவுன்ட்டர் சாவுகள் போன்ற நிகழ்வுகளை தடுத்து நிறுத்தும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு உண்டு. உச்ச நீதிமன்றம் இந்த படுகொலை விவகாரத்தில் உடனடியாக தலையிடவில்லையெனில், நீதித்துறையின் அதிகாரம் ஜனநாயக நாட்டில் சரிந்துவருகின்றது என்பதற்குச் சான்றாக அமைந்துவிடும். எனவே இந்த படுகொலைகள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தானே முன்வந்து ஒரு விசாரணையை நடத்தி குறுகிய காலத்துக்குள் உரிய தீர்ப்பை வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்" என்றார் ஆதங்கத்துடன். 

- ஆ.விஜயானந்த்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close