Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'சிமி' கைதிகள் தப்பியதன் பின்னணி! சிறை ஊழியர்களுக்குத் தொடர்பு?!!

ரே நாளில் ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்தது போபால் மத்திய சிறைச்சாலை. ஆம்.போபால் சிறையில் இருந்து திங்கள் கிழமை அதிகாலை இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்பான 'சிமி'-யைச் சேர்ந்த 8 விசாரணைக் கைதிகள் தப்பியோடினர். தப்பியோடிய சில மணி நேரத்தில் ராஜ்கார் மாவட்டம் அஷாபுரா என்ற கிராமத்தில், அவர்கள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

போபால்  சிறையில் காவலில் இருந்த பாதுகாவலர் ராம்நரேஷ் யாதவைக் கொலை செய்த சிமி அமைப்பினர், மற்றொருவரை பணயக் கைதியாக பிடித்து வைத்துக் கொண்டதுடன், படுக்கை விரிப்பை கயிறுபோல உபயோகித்து, மதில் சுவரைத் தாண்டிக் குதித்து தப்பியோடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் 'சிமி' கைதிகள் பதுங்கியிருந்த இடத்தை அறிந்த போலீசார், அங்கு சென்று சுற்றி வளைத்தபோது, அவர்கள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும், தற்காப்புக்காக 8 பேரையும் காவல்துறையினர் சுட்டுக் கொன்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திங்கள் கிழமை அதிகாலை 2 மணியளவில் நடந்த இந்த சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் ஏற்கெனவே விசாரணையைத் தொடங்கி மேற்கொண்டுள்ளனர்.

 சிமி' அமைப்பைச் சேர்ந்த 8 பேர், என்கவுன்டரில் கொல்லப்பட்ட சம்பவம், இந்தியா முழுவதும் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. சர்ச்சைகளுக்கு எல்லாம் முத்தாய்ப்பாக, போபால் மத்திய சிறையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் செயல்படவில்லை என்பதுதான். கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாத சூழ்நிலையைப் பயன்படுத்தி, சிமி அமைப்பினர் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. அதீத பாதுகாப்பு நிறைந்த போபால்  சிறை வளாகத்தில் சி.சி.டி.வி கேமராக்கள் செயல்படாமல் போனது சர்ச்சையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

உயரிய பாதுகாப்பு உள்ளிட்ட அதிநவீன கண்காணிப்புக் கேமராக்கள் போன்ற வசதிகளைக் கொண்டு திகழ்வதற்காக, போபால் மத்திய சிறைக்கு, கடந்த 2004-ம் ஆண்டு ஐ.எஸ்.ஓ. தரச் சான்று கிடைக்கப் பெற்றுள்ளது. சிறை வளாகத்தில் கண்காணிப்பு கேமரா செயல்பாட்டில் இல்லை என்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்ட சிமி அமைப்பினர், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சிறையில் இருந்து தப்பிச் சென்றதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, போபால் சிறை ஊழியர்கள் 5 பேர் ஏற்கெனவே பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்குப் பதிலாக, புதிய பாதுகாப்புக் குழுவினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து புலன் விசாரணை நடத்த, முன்னாள் காவல்துறை தலைமை இயக்குநர் நந்தன் துபே-வை, மத்தியப்பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் நியமித்துள்ளார். மத்தியப்பிரதேச சிறைத்துறை கூடுதல் தலைமை இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ள ஐ.பி.எஸ் அதிகாரி சுதிர் சாஹி, என்கவுன்டர் மற்றும் விசாரணை விவரங்கள் குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

எனினும் போலீசார் வெளியிட்ட என்கவுன்டர் சம்பவம் குறித்த வீடியோவில், தரையில் விழுந்து கிடக்கும் சிமி அமைப்பினர் மீது காவல் துறையினர் துப்பாக்கியால் சுடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருப்பதால், இந்த வீடியோ பரவலான சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவின் நம்பகத்தன்மை குறித்து, தமிழகம் உள்பட நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்களும் சந்தேகத்தை எழுப்பியுள்ளனர். சிமி அமைப்பினர் கொல்லப்பட்டதற்கு அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

மத்தியப்பிரதேச மாநிலத்தில் அதிக பாதுகாப்பு நிறைந்த ஒரு சிறைச்சாலையாகக் கருதப்படும் போபால் சிறையிலேயே இந்த நிலை என்றால், மாநிலத்தின் மற்ற சிறைகளைப் பற்றி கேட்கவே வேண்டாம். அதிலும், போபால் சிறையில் இருந்து தப்பிச் சென்ற கைதிகள் மட்டுமல்லாது, அங்குள்ள வேறு சில கைதிகளும், தாங்கள் அடைக்கப்பட்டுள்ள அறையின் பூட்டுகளுக்கான மாற்று சாவியை தயாரித்து வைத்திருந்ததாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி இருப்பது மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுட்டுக் கொல்லப்பட்ட 8 பேரில், 6 கைதிகள் ஏற்கெனவே கடந்த 2013-ம் ஆண்டு, அக்டோபர் 1-ம் தேதி கண்ட்வா மாவட்டம் தண்ட்யா சிறையில் இருந்து தப்பிச் சென்று பின்னர் கைது செய்யப்பட்டவர்கள் என்பது கூடுதல் அதிர்ச்சியை அளிக்கிறது. இவர்கள் உள்பட மொத்தம் 29 சிமி அமைப்பினர், போபால் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

இதுபோன்ற சூழ்நிலையில், இந்த கைதிகளின் செயல்பாடுகள் சிறை அதிகாரிகளால் எவ்வாறு கண்காணிக்கப்படாமல் விடப்பட்டது? என்ற கேள்வி, அனைவர் மனதிலும் எழுவது இயற்கையே.  எனவே சிறைக்குள் உள்ள நபரின் உதவியுடனேயே அவர்கள் தப்பியிருக்க முடியும் என்றும், சிறைக்குள் உளவுத் துறையினரின் கண்காணிப்பு போதிய அளவில் இல்லாது இருந்திருக்கலாம் என்றும் விசாரணை அதிகாரிகளை மேற்கோள்காட்டி தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டு, 60 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், மத்தியப்பிரதேச மாநிலத்திலும் அதற்கான கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சிமி அமைப்பினர் கொல்லப்பட்ட நிலையில், கொண்டாட்டங்களின்போது, அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க, மாநிலம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இதனிடையே, என்கவுன்டரில் கொல்லப்பட்ட 8 பேரின் உடல்கள் போபாலில் உள்ள ஹமிதியா மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. அவர்களின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மத்தியப்பிரதேச அரசு செய்துள்ளது. கொல்லப்பட்டவர்களில் மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் இருப்பதால், அவர்களின் உடல்களைப் பெற்றுச் செல்வதற்கான நடைமுறைகளை சம்பந்தப்பட்ட மாநில அரசுகளிடம்  மத்தியப்பிரதேச மாநில அரசு ஏற்கெனவே தெரிவித்துள்ளது.

அரசியல் சர்ச்சைகளுக்கு முக்கியக் காரணம், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ள உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில  சட்டப்பேரவைத் தேர்தல்தான். இந்த 5 மாநிலங்களில் மத்தியப்பிரதேசம் இடம்பெறவில்லை என்றாலும், மத்திய அரசு தனது எல்லையை வியாபித்துக் கொள்வதற்கு இதுபோன்ற சம்பவங்களை பயன்படுத்திக் கொள்கிறதோ என அரசியல் நோக்கர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.  மத்தியப் பிரதேச என்கவுன்டர் போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தவிர்க்க வேண்டியது மத்திய அரசின் கடமை.


- சி. வெங்கட சேது

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close