Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நாராயணசாமியும்... நல்லா இருக்கும் புதுச்சேரியும்...!

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நெல்லித்தோப்பு சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தலில் முதல்வர் நாராயணசாமி போட்டியிடுகிறார். அவருக்கு தி.மு.க ஆதரவு தெரிவித்துள்ளது. அ.தி.மு.க-வை என்.ஆர்.காங்கிரஸ் ஆதரித்துள்ளது.

தமிழகத்தில் மக்கள் நலக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. முறையான அறிவிப்பை அந்தக் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ளார். திருமாவளவனின் ஆதரவுக் கடிதத்தை பொதுச்செயலாளர் ரவிக்குமார், முதல்வர் நாராயணசாமியிடம் நேரில் கொடுத்தார்.

இதுகுறித்து ரவிக்குமார், ‘‘விடுதலைச் சிறுத்தைகளின் ஆதரவை முதல்வர் கேட்டிருந்தார். புதுவை மாநிலத்தின் வளர்ச்சியை முன்னிட்டும் மதச்சார்பற்ற ஆட்சி தொடர வேண்டும் என்பதற்காகவும் எங்களது ஆதரவைக் கொடுத்துள்ளோம். கவர்னர் கிரண்பேடியோடு இணக்கமான நட்புறவுகொண்டு மாநில நலனில் முதல்வர் அக்கறை எடுத்துவருகிறார். வேட்புமனுத் தாக்கல் செய்தபோதுகூட, என்னிடம் தொலைபேசியில் பேசினார். தலைவர் திருமா அவர்களிடம் இந்தத் தகவலைச் சொல்லும்படி சொன்னார். அந்த அளவுக்கு இணக்கமான அணுகுமுறையை மேற்கொள்கிறார். முதல்வர் வெற்றி பெறுவார். அவருக்காக புதுவை விடுதலைச் சிறுத்தைகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக உழைப்பார்கள்’’ என்றார்.

மாநில துணைப் பொதுச்செயலாலர் எஸ்.எஸ்.பாலாஜியிடம் பேசினோம். ‘‘மக்கள் நலக் கூட்டணி தமிழகத்தைப் பிரதானப்படுத்தி ஏற்படுத்தப்பட்ட ஒன்று. தேசியக் கட்சிகள் பல்வேறு மாநிலங்களில் அங்குள்ள சூழலுக்கு தகுந்தாற்போல் கூட்டணி அமைப்பது இயல்பு. விடுதலைச் சிறுத்தைகளைப் பொறுத்தவரை தமிழகம் மட்டுமல்லாமல் புதுவை, கர்நாடகம், ஆந்திரா, கேரள ஆகிய மாநிலங்களில் கட்சி சிறப்பாகச் செயல்படுகிறது. அந்தந்த மாநில நிலைமைகளை அங்குள்ள கட்சி முன்னணியினர் நன்கு அறிந்தவர்கள் என்பதோடு அந்த அமைப்புகளுக்கு அரசியல் முடிவெடுக்கும் உரிமை வழங்குவதுதான் உண்மையான ஜனநாயகம் என்கிற உறுதியான கருத்துக் கொண்டவர் எங்கள் தலைவர்.

அதன் அடிப்படையிலேயே புதுவையில் காங்கிரஸ் முதல்வராக இருக்கும் நாராயணசாமி செயல்பாடுகள் சிறப்பாக, நல்லபடியாக உள்ளது என்பதால் எந்தவித தடையும் இன்றி அவரது ஆட்சி தொடர வேண்டும் என்கிற புதுவை மாநில விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளின் கருத்தையொட்டி நாராயணசாமிக்கு ஆதரவு அளிக்கப்பட்டுள்ளது.

அதோடு மதச்சார்பற்ற கட்சி ஆட்சியில் உள்ளபோது, அதன் முதல்வராக உள்ளவர் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும்போது அவர் வெற்றி உறுதி செய்யப்பட வேண்டும். எனவே, அவரை ஆதரிப்பது என்பதுதான் சரி என மதச்சார்பின்மைக்காகத் தொடர்ந்து களமாடி வரும் எங்கள் தலைவர், புதுவை வி.சி.க-வின் முன்மொழிவை அங்கீகரித்து விடுதலைச் சிறுத்தைகளின் ஆதரவை தெரிவித்துள்ளார். ஆதரவுக் கடிதத்தை எங்கள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார், முதல்வர் நாராயணசாமியிடம் நேரில் கொடுத்துள்ளார். இதற்கு முதல்வர் நன்றி தெரிவித்துள்ளார்’’ என்று எஸ்.எஸ்.பாலாஜி கூறினார்.

முதல்வர் நாராயணசாமி, ‘‘சட்டமன்ற பொதுத்தேர்தலிலேயே தி.மு.க தலைவர் கருணாநிதி உள்பட கூட்டணிக் கட்சித் தலைவர்களைச் சந்தித்துப் பேசினேன். அவர்களது ஆசியையும் கேட்டேன். இப்போது, வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகும் கூட்டணிக் கட்சித் தலைவர்களைச் சந்தித்துள்ளேன். அவர்களின் ஆதரவையும் கேட்டுள்ளேன். புதுவை மக்களின் முன்னேற்றம்தான் எனக்கு முக்கியம். அதற்காகத்தான் உழைக்கிறேன்’’ என்று சொல்லி முடித்தார்.

பிரசாரக் களத்தில் வேகமெடுத்துவிட்டார் நாராயணசாமி!

- எஸ் முத்துகிருஷ்ணன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ