Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கேரளாவின் பிறந்தநாள்... தவிர்க்கப்பட்ட ஆளுநர் சதாசிவம்! - என்ன நடந்தது?

கேரளாவில் நடைபெற்ற ‘வஜ்ர கேரளம்’ விழாவில் அம்மாநில ஆளுநருக்கு அழைப்புவிடுக்காதது நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாகாணத்திலிருந்து பிரிந்து கேரள மாநிலம் உருவானதன் 60-ம் ஆண்டு கொண்டாட்டம் ‘வஜ்ர கேரளம்’ என்கிற பெயரில் நேற்று மாநில முதல்வர் பினராயி விஜயன், அமைச்சர்கள் மற்றும் கேரள சட்டப்பேரவை உறுப்பினர்கள், கேரள வி.ஐ.பி-க்கள் கலந்துகொள்ளக் கோலாகலமாகத் தொடங்கியது.

இந்த வருடம் முழுவதும் நடக்கவிருக்கும் இந்த விழாவை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைப்பதாக இருந்து கடைசி நிமிடத்தில் அவரது வருகை ரத்து செய்யப்பட்டதால் கேரள முதல்வரால் தொடங்கிவைக்கப்பட்டது. கேரள சட்டப்பேரவை சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் சிறப்புரை ஆற்றினார்கள். ஆனால் கேரள மாநில ஆளுநரும் முன்னாள் நீதிபதியுமான சதாசிவத்துக்கு விழாவுக்கான அழைப்புக் கொடுக்கப்படாதது மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விழாவுக்குப் பிரதமர் வராததால்தான் ஆளுநரை அழைக்கவில்லை என்பது போன்ற காரணங்கள் கூறப்பட்டுவருகிறது. இவருடன் முன்னாள் கேரள முதல்வர்களான ஏ.கே.ஆண்டனி, உம்மன் சாண்டி மற்றும் அச்சுதானந்தன் உள்ளிட்டவர்களும் அழைக்கப்படாமல் விடப்பட்டுள்ளனர். இத்தனைக்கும் உம்மன் சாண்டி காலை 10:45 மணி வரை கேரள சட்டப்பேரவையில்தான் இருந்துள்ளார்.

ஆனால், சதாசிவம் கவர்னராக நியமிக்கப்பட்ட தொடக்கத்திலேயே கேரளாவின் கம்யூனிஸ்ட், பி.ஜே.பி ஆகிய இரு கட்சிகளும் அவர் நியமனத்துக்கு எதிராகக் குரலெழுப்பின. கேரள பார் கவுன்சில் அமைப்புகள் ஒருபுறம், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவரை மக்கள் தலைவர் பொறுப்பில் எப்படி நியமிக்கலாம் எனக் கேள்வி எழுப்பின. அப்போதைய கேரள முதல்வராக இருந்த உம்மன் சாண்டி எப்போதும் மாநில ஆளுநரை நியமிக்கும் முன் முதல்வரிடம் விவாதிக்க வேண்டியது அவசியம். ஆனால் தன்னிடம் ஆலோசிக்காமலேயே ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ஆளுநராக சதாசிவத்தை நியமித்துவிட்டதாகத் தெரிவித்தார். நிலைமை இப்படி இருக்க, ‘வஜ்ர கேரளம்’ விழாவுக்கு அவரை அழைக்காமல் தவிர்க்கப்பட்டது ஏன்... அவர் வேண்டுமென்றே ஒதுக்கப்படுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆளுநரின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், “பிரதமர் வந்திருந்தால் ஆளுநர் நிச்சயம் விழாவுக்குச் சென்றிருப்பார். அவரது வருகை ரத்து செய்யப்பட்டதால்தான் ஆளுநர் விழாவுக்குச் செல்லவில்லை. மற்றபடி ஆளுநருக்குத் தனித்து அழைப்புவிடுக்கும் நடைமுறை அரசு நெறிமுறையில் இருக்கிறது. பிரதமர் வராததால் அழைப்பில் விடுபட்டுவிட்டது. நெறிமுறைகளால் ஏற்பட்ட சிக்கல்’’ என்றார்.

கேரள முதல்வர் தரப்பை அறிய அவரது தனி ஆலோசகர் பிரசாத் வர்மாவை தொடர்புகொண்டோம், “சட்டப்பேரவையில் இருப்பதால் இதுபற்றி எதுவும் தற்போது பேசமுடியாது” எனப் பதிலளித்தார்.

அழைப்பு விடுக்காமல் அவமதிப்பதுதான் நமது பண்பாடா?

- ஐஷ்வர்யா

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ