Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘அறம் சார்ந்த பொருளாதாரத்தை முன்மொழிந்தவர்’ - அமர்த்தியா சென் பிறந்த நாள் சிறப்புப் பகிர்வு

ந்தியாவில் 22 சதவீத மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளனர். இந்தியாவில் எவ்வளவோ வளங்கள் இருந்தும் அனைத்து இந்தியர்களுக்கும் உணவு கிடைக்காதது ஏன்? வளர்ந்து வரும் நாடு, 'மேக் இன் இந்தியா' என பல்வேறு உத்திகளில் இந்தியாவைப் பற்றி 'பளபள' பொருளாதார பிம்பங்கள் பின்னப்பட்டாலும், இந்தியப் பொருளாதார மேதைகள் இந்த கருத்துகளை முன்னெடுக்கவில்லை. வறுமையை ஒழிக்கும் பொருளாதார மாற்றங்களையே பல அறிஞர்கள் வலியுறுத்தினர். அவர்களில் ஒருவர்தான் நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென்.

அமர்த்தியா சென்னின் தந்தை டாக்கா பல்கலைகழகத்தில் பேராசிரியர்; அங்கே இருக்கும்பொழுது இருபது லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பஞ்சத்தில் இறப்பதை கண்களால் பார்த்ததும், இந்திய பிரிவினையின் பொழுது மக்கள் பட்ட பாடுகளைப் பார்த்ததும் அவருக்குள் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதிலும் காதர் மியான் எனும் இஸ்லாமியர், வீட்டின் பசியைப்போக்க வெளியே சென்றபொழுது மதவெறியர்களால் தாக்கப்பட்டு இவரது மடியிலேயே இறந்தது, இவரின் கண்களை விட்டு அகலவே இல்லை.

“அடையாளம், பசி, மக்களின் உயிர்,வன்முறை எல்லாமும் ஒன்றுக்கு ஒன்று பிணைந்திருப்பதை அங்கே தான் பார்த்தேன்.” என்று சென் அந்தச் சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.

உலகமே பறவைக்கூடு என்கிற சாந்தி நிகேதனின் வாசகம்தான் அவரின் வாழ்க்கையை இன்று வரை செலுத்துகிறது. சாந்தி நிகேதனில் தன்னுடைய நம்பிக்கையை நாத்திகவாதி என்று பதிவு செய்துகொள்ள முடியாததால் பௌத்தர் என்று அவர் பதிந்தார். தாகூர், காந்தி ஆகியோரைவிடத் தலைசிறந்த சிந்தனையாளர் புத்தர், அவரின் சிந்தனைகளுக்கு இன்றும் மாபெரும் தேவையுள்ளது என்பது சென்னின் பார்வை.

பதினெட்டு வயதில் கேன்சருடன் போராடியபொழுது “என்ன ஆனாலும் சரி; நம்பிக்கையோடு போராடி முடிப்பேன்!” என்று எண்ணினார் அவர். அதிலிருந்து மீளவும் செய்தார். சாந்தி நிகேதன், கொல்கத்தா மாநிலக் கல்லூரி, ட்ரினிட்டி கல்லூரி ஆகியவற்றில் படித்த பின் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்ற பின்னர் இருபத்தி மூன்று வயதில் ஜாதவ்பூர் பல்கலைகழகத்தின் துறைத்தலைவர் ஆனார்.

சமூகத்தேர்வு என்கிற கருத்தியலை ஆழமாக விவாதித்து எழுதினார். அதாவது மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று அரசாங்கங்கள் எண்ணற்ற திட்டங்கள் போடுகின்றன. குதிரை கொடுக்க வேண்டும் என்று அரசுகள் நினைக்கின்றன; மக்கள் கைக்கு வருகிற பொழுது பல்வேறு காரணங்களால் அவை ஒட்டகமாக மாறிவிடுகின்றன. இதை மாற்றுவது மிகக்கடினமானது. ஆனால், பல்வேறு வகையான சிக்கல்கள், காரணிகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு நன்றாக மக்களின் சிக்கலைப் புரிந்து கொண்டு தேர்வுகளை மேற்கொண்டால் சமூக முன்னேற்றம் சிறப்பாக நடக்கும் என்று அவர் வலியுறுத்தினார்.

பொருளாதாரம் மற்றும் தத்துவத்தை இணைத்த, இந்தியாவைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென். ராவ்ல்ஸ் எனும் அறிஞரின் நீதி சார்ந்த கோட்பாட்டுக்கு எதிர்வாதமாக எளியவர்களுக்கு நீதி கிடைப்பதில் இருக்கும் சிக்கல்களை அற்புதமாக எடுத்து வைத்தார். அடையாள அரசியல்தான் உலகம் முழுக்க வன்முறையை உண்டு செய்கிறது என்பதை உணர்ந்த இவர், ஒவ்வொருவருக்கும் பல்வேறு அடையாளங்கள் உள்ளன என்பதை உணர்ந்து இயங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

பஞ்சம், பசி, வறுமை சார்ந்து மேற்கொண்ட இவரின் ஆய்வுகள் பிரமிப்பானவை. வங்கத்தில் இருபது லட்சம் பேர் செத்த அந்தப் பஞ்சத்தின் பொழுது சாகுபடி அதிகமாகவே இருந்தது; விலை வாசி பதினான்கு ரூபாய் அளவுக்கு உயர்ந்தது. உணவுப்பதுக்கல் நடந்தது; அரசும் உணவுக்கப்பலை அனுப்பவில்லை.

மக்கள் பசியால் இறந்தார்கள், உணவு இருந்தால் மட்டும் போதாது அதை வாங்க மக்களுக்கு சக்தி வேண்டும் ஆகவே, பஞ்சம் ஏற்படுகிற காலத்தில் மக்களுக்குச் சம்பள உயர்வு தரவேண்டும். தானியங்கள் குறைந்த விலையில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்கிறார் சென். ஜனநாயகம், சுதந்திரம், தைரியமான ஊடகங்கள் ஆகியவை இணைந்திருக்கும் அரசாங்கங்களில் உலகம் முழுக்கப் பெரும் பஞ்சங்கள் நிகழ்வதே இல்லை என்று அவர் அழுத்திச் சொல்கிறார்.

சமீபத்தில் அவர் எழுதிய ‘AN UNCERTAIN GLORY’ புத்தகம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குஜராத்தின் வளர்ச்சி மாதிரி உண்மையில் நல்ல வளர்ச்சி மாதிரியில்லை; தமிழகம், கேரளா ஆகியனவே நல்ல வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டு. ஒரு குறிப்பிட்ட சாரார் மட்டும் வளர்ந்து இன்னொரு பக்கம் உடல்நலம், கல்வி, ஆரோக்கியமான உடல்நிலை, சுகாதாரம், சீரான வருமான பரவலாக்கம் ஆகியன இல்லாமல் ஒரு மாநிலம் இருக்குமென்றால் அது வளர்ச்சி கிடையாது. அந்த வளர்ச்சியை நெடுங்காலத்துக்குத் தக்க வைக்க முடியாது என்கிறார் சென்.

மக்களின் முன்னேற்றமே உண்மையான பொருளாதார வளர்ச்சியைக் கொண்டுவரும் எனத் தொடர்ந்து தன் எழுத்துக்களில் வலியுறுத்தி வருபவர். மக்கள்நலன் சார் பொருளாதாரம், வளர்ச்சி பொருளாதாரம் ஆகியவை சார்ந்து இயங்கும் இவர் கார்ல் மார்க்ஸ், ஆடம் ஸ்மித் என்று பலராலும் கவரப்பட்டவர். சந்தைப் பொருளாதாரத்தை ஆதரிக்கும் அதே சமயம் துரிதமான சந்தைப்படுத்தல், முழுமையான கட்டுப்பாடுகளை அரசாங்கம் விலக்கிக்கொள்ளுதல் ஆகியவற்றை எதிர்க்கிறார். கண்ணியமான வாழ்க்கையை அடித்தட்டு மக்கள் வாழ பொருளாதார வளர்ச்சி வழிகோல வேண்டும் என்பது அவரின் பார்வை வளர்ச்சியின்மையால் அதிகம் பாதிக்கப்படுவது பெண் குழந்தைகளே என்பதை ஆதாரபூர்வமாக நிரூபித்து காணாமல் போகும் பெண்கள் என்கிற அளவுகோலை அறிமுகப்படுத்தினார்.

பொருளாதாரத்துக்கு அறம் சார்ந்த ஒரு கோணத்தைத் தந்தமைக்காக 1998-ல் பொருளாதார நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது . பொருளாதாரம் என்றால் எல்லாரும் எண்கள், வர்த்தகம், கணக்கு என்றிருந்த பொழுதுமக்களின் நலன் சார்ந்து சிந்தித்த இவர் வங்கம் வருகிற பொழுதெல்லாம் சைக்கிளில் சுற்றுவார்; எளிய கடையில் டீ குடிப்பார். ஒரு காலத்தில் கடன்வாங்கி குடும்பம் நடத்துகிற அளவுக்கு எளிய வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்.

அமர்த்தியா சென் தன்னுடைய ஆய்வுக்களங்களை வங்கத்தின் பசிமிகுந்த கிராமங்களில் அமைத்துக்கொண்டார். குழந்தைகளை எடை பார்க்கும் இயந்திரத்தில் நிற்க வைத்து அவர்களின் எடையைக் குறித்துக்கொண்டு வெய்யிலில், கடுமையான சூழல்களில் அலைந்த பொழுது ,”என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டார்கள் ,”மக்கள்நலப் பொருளாதரத்தை கற்றுக்கொண்டிருக்கிறேன் !” என்றார் அவர். பிரதாச்சி அமைப்பை உருவாக்கி தன்னுடைய ஒட்டுமொத்த நோபல் பரிசுப்பணத்தை வங்கத்தின் பெண் குழந்தைகளின் கல்விக்குக் கொடுத்துவிட்டார் அவர். “சாந்தி நிகேதனில் மாலை நேர வகுப்புகளை இளம்வயதில் கிராமப்புற மாணவர்களுக்கு எடுத்த பொழுது உண்டான அதே பரவசம் இப்பொழுதும் இந்த அமைப்பால் ஏற்படுகிறது.” என்றார் அவர். அவரின் பிறந்த தினம் நவம்பர் 3.

-பூ.கொ.சரவணன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close