Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டாடா குழும அடுத்த தலைவர் இவர்தானோ? - டாடா அப்டேட்ஸ் #TataUpdates

டாடா குழுமத்தின் தலைவர் பதவியிலிருந்து சைரஸ் மிஸ்திரி நீக்கப்பட்ட அடுத்த நிமிடமே தொழில்துறையில் மோதல் தீப்பற்றிக் கொண்டது. மிஸ்திரி மீது டாடா குழும இயக்குநர்கள் வைத்த அத்தனைக் குற்றச்சாட்டுகளும் பொய் என்றும், டாடா நிறுவனங்களின் நஷ்டத்துக்கும் தொழில் வளர்ச்சி குறைந்ததற்கும் ரத்தன் டாடாதான் காரணம் என்றும் டாடாவின் தொழில் போக்கைத் தொடர்ந்து கவனித்து வந்த ஒட்டுமொத்தபேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

தலைவரைத் தேடும் டாடா!

இந்த நிலையில் இடைக்காலத் தலைவராக ரத்தன் டாடாவே மீண்டும் பொறுப்பேற்றுள்ளார். ஆனால் அடுத்த தலைவருக்கான தேடலில் தீவிரமாக உள்ளது டாடா குழுமம். டாடா குழுமத் தலைவராக ஆவதற்கு வாய்ப்புள்ளவர்களாக, பெப்சி தலைவர் இந்திரா நூயி, வோடபோன் முன்னாள் தலைவர் அருண் சரிண், டாடா ரீடெய்ல் பிரிவின் தலைவர் நோயல் டாடா மற்றும் ஜாக்குவார் லேண்ட்ரோவர் தலைவர் ரால்ஃப் ஸ்பெத் உள்ளிட்ட பலரின் பெயர்கள் சொல்லப்பட்டாலும் முன்னணியில் இருப்பவர் டி.சி.எஸ். சந்திரசேகரன் தான். டாடாவின் ஒட்டுமொத்த நஷ்டத்தையும் ஈடுகட்டி டாடா குழுமத்தின் பிற நிறுவனங்களை டி.சி.எஸ்-தான் காப்பாற்றி வருகிறது.

சந்திரசேகரனை டி.சி.எஸ் நிறுவனத்தை மிகத் திறமையாக வழிநடத்தும் அளவுக்கு வளர்த்தெடுத்தவர், அவருக்கு முன் டிசிஎஸ் சி.இ.ஓ-வாக இருந்த எஸ் ராமதுரை. டாடா குழுமத்துக்கு இப்படி ஒரு சிக்கல் வரும் என்பது தெரியாமல்  தனக்கு அடுத்து டி.சி.எஸ் நிறுவனத்தை வழிநடத்த சரியான நபரை சந்திரசேகரன், கண்டுபிடிக்கத் தவறி விட்டார். இந்த நிலையில் டிசிஎஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ- வாக உள்ள சந்திரசேகரன், டாடா குழும தலைவராக நியமிக்கப்பட்டால் நன்றாகப் போய்க் கொண்டிருக்கும் டிசிஎஸ் சிக்கலுக்குள்ளாகிவிடும் என சிலர் தெரிவிக்கிறார்கள்.

இவர் தான் தலைவரோ?

டி.சி.எஸ் நிறுவனத்தின் முன்னாள் சி.இ.ஓ-வாக இருந்த ராமதுரை, பின்னர் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனம் இரண்டுக்கும் தலைவராகப் பொறுப்பேற்றார். ஆனால் டாடா குழும தலைவர் பதவியிலிருந்து மிஸ்திரி நீக்கப்பட்டுள்ள நிலையில் இவர், தனது தலைவர் பதவிகளை ராஜினாமா செய்துள்ளார். இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் இடையே ஏதேனும் தொடர்பு இருக்குமா? இவர் டாடா குழும தலைவராகப் பொறுப்பேற்கவே இந்தப் பொறுப்புகளில் இருந்து விலகி உள்ளாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால், "இது எதார்த்தமானது, இரண்டு நிகழ்வுகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை" என்று சர் தோரப்ஜி டாடா ட்ரஸ்ட் உறுப்பினர் வி.ஆர். மேத்தா கூறியுள்ளார்.

ராமதுரை சி.இ.ஓ-வாக இருந்த காலக்கட்டத்தில் டி.சி.எஸ் நிறுவனத்தின் வருமானம் 400 மில்லியன் டாலரிலிருந்து 6 பில்லியன் டாலராக உயர்ந்தது. மேலும் டாடாவின் திறன் வளர்ப்புத் திட்டங்களை முன்னெடுத்து, டாடாவின் வளர்ச்சிக்கு வழிவகுத்ததிலும் இவரது பங்கு மிக முக்கியமானது. இன்றும் இவருடைய திறன் வளர்ப்பு பயிற்சிகள்தான் டி.சி.எஸ் நிறுவனத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே டாடா குழுமத் தலைவராக இவர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகப் பரவலாகப் பேசப்படுகிறது.

இவர் அனுபவமிக்கவர் என்றாலும் இவருக்கு வயது 71 என்பது ஒரு தடைக் காரணியாக பார்க்கப்படுகிறது. எனவே டிசிஎஸ் சந்திரசேகரன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகத் தெரிகிறது.  

- ஜெ.சரவணன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ