Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இதற்காகத்தான் மோடியிடம் விருது பெற மறுத்தாரா அந்தப் பத்திரிகையாளர்...?

லைஞர்கள் விருதுகளை நிராகரிப்பதும் திருப்பித் தருவதும் தற்காலச் சூழலில் ஒன்றும் புதிதல்ல. கடந்த இரு வருடங்களாகத் தனி நாகரிகமாகவே இது தொடர்ந்து வருகிறது. கருத்துரிமை மற்றும் சகிப்புத்தன்மை சார்ந்த அரசியல், சென்ற வருடம் விவாதத்துக்கு உள்ளானபோதும் சாகித்திய அகாடமி விருது பெற்ற கன்னட எழுத்தாளர் கல்புர்கி படுகொலை செய்யப்பட்ட நிலையிலும் நாடெங்கிலும் உள்ள பல்வேறு எழுத்தாளர்கள் தங்கள் விருதுகளைத் திருப்பி அளித்தனர்.

2015-ல் தன் மீதான அடக்குமுறை காரணமாக தற்கொலை செய்துகொண்டவர் ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமுலா. அவருக்கு ஆதரவாக இருந்துவந்தவர், ஆராய்ச்சி மாணவரும் பேராசிரியருமான டாக்டர் வெல்புலா. இவருக்கு, கடந்த அக்டோபர் 2016-ம் ஆண்டு பல்கலைக்கழகத் துணைவேந்தர் பட்டமளிப்பதாக இருந்தது. அந்த நேரத்தில், வெமுலாவின் மரணத்துக்கு துணைவேந்தர்தான் காரணம் எனக் கூறி பட்டத்தை அவரிடமிருந்து பெற்றுக்கொள்வதை நிராகரித்தார் டாக்டர் வெல்புலா. பிறகு, பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பதிவாளர் அவருக்குப் பட்டத்தை வழங்கினார். 

இது நடந்துமுடிந்து ஒரு மாத காலம் ஆகிவிட்ட நிலையில், சிறந்த பத்திரிகையாளர்களுக்கான ராம்நாத் கோயன்கா விருது இந்த வருடம் பத்திரிகையாளர் அக்சய முகுல் என்பவருக்குத் தரப்பட இருந்தது. ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகை நிறுவனம் வருடாந்திரமாக இந்த விருதினை அளித்து வருகிறது. இந்த வருடம் முகுலின் பத்திரிகை உலக சாதனையைப் பாராட்டியும், அவரது ‘Gita press and the making of hindu India’ என்கிற ஹிந்துத்துவத்தின் நாகரிக வெளிப்பாடு தொடர்பான புத்தகத்துக்காகவும் விருது தரப்பட இருந்தது. பிரதமர் மோடி இந்த விருதைத் தருவதாக இருந்தது.


‘‘வருடாந்திரமாகத் தரப்படும் இந்த விருதை இவ்வருடம், தான் அளிப்பதில் மகிழ்ச்சி என்றும் பத்திரிகையாளர் ராம்நாத் கோயன்கா அவர்கள், தான் கொண்ட கொள்கைகளில் இருந்து மாறாதவர்’’ என்றும் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அக்சய் அந்த விருதை மோடியின் கரங்களால் பெற்றுக்கொள்வதை நிராகரித்தார். அக்சய் சார்பாக அவரது புத்தகத்தை வெளியிட்ட பதிப்பாளர் அந்த விருதினை பெற்றுக்கொண்டார். பிரதமரின் கையால் பெறவிருந்த விருதினை அக்சய் நிராகரித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக பதிலளித்த அக்சய், “ராம்நாத் கோயன்கா பெயரிலான விருதைப் பெறுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் அதனை மோடியின் கரங்களால் பெறுவது என்பது, எனது புத்தகம் மற்றும் அதனை எழுதிய என் மீதும் திணிக்கப்படும் நகைமுரணாக இருக்கும். அதனால்தான். அவர் கையினால் விருதினைப் பெற்றுக்கொள்வதை நிராகரித்தேன்’’ என்றார்.  

முகுலின் ‘கீதா பிரஸ்..’ புத்தகம், அந்தப் பதிப்பகத்தின் வளர்ச்சியையும்... அது சார்ந்து வளர்ந்த மறைமுக இந்துத்துவ ஆதிக்கத்தைப் பற்றியும்... பாரதிய ஜனதா கட்சி பற்றியும் பேசுகிறது. 

முகுலின் இந்தச் செயலை, குஜராத் கலவரம் பற்றிப் புலனாய்வு செய்து புத்தகம் எழுதிய ரானா அயூப் உள்ளிட்ட பல பத்திரிகையாளர்கள் வரவேற்றுத் தங்கள் ட்விட்டர் பக்கங்களில் பாராட்டியுள்ளனர்.

- ஐஷ்வர்யா

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ