Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'குழந்தைகள் உயிரை காப்பாற்றுங்கள்...!' - 10 வயது மாணவன் பிரதமருக்கு எழுதிய கடிதம்!

காலை எழுந்ததும் நாம் பல பிரச்னைகளைச் சந்திக்கிறோம். மிக மோசமான சாலைகள், நெரிசல் மிகுந்த பேருந்துகள், சரிவர மூடப்படாத கழிவுநீர் கால்வாய் என எண்ணற்ற இன்னல்கள் அன்றாடம் காத்திருக்கின்றன. அவற்றை நாம் தினமும் கடந்துதான் செல்கிறோம். பிரச்னைகளை முடிவுக்குக் கொண்டுவர நாம் எந்தவிதமான நடவடிக்கையிலும் ஈடுபடுவது இல்லை. அந்த நேரத்தில் அரசையும் அதிகாரிகளையும்  திட்டிவிட்டோ அல்லது குறை சொல்லிவிட்டோ நம்முடைய வேலையைப் பார்க்க கிளம்பி விடுகிறோம். பெரியவர்கள் கூட பிரச்சினைகளைக் கண்டும் காணாமல், கடந்து செல்லும்போது, நான்காம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன், தன் கிராமப் பிரச்னையை தீர்க்கும்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளான் என்றால் நம்ப முடிகிறதா? ஆம்...

உமேஷ் மதி (10) என்ற அந்த மாணவன் ஒடிசா மாநிலம் மல்காங்கிரி மாவட்டத்தில் உள்ள போல்கண்டா தொடக்கப் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறான். தனது கிராமத்தில் பரவிக் கொண்டிருக்கும் ஜப்பானிய மூளைக் காய்ச்சல் (Japanese Encephalitis) நோயைத் தடுக்க, நடவடிக்கை எடுக்கும்படி பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் அந்த மாணவன் கேட்டுக் கொண்டுள்ளான்.

அந்தக் கடிதத்தில், “எங்கள் உயிரைக் காப்பாற்றுங்கள். என்னுடன் பயின்ற சக நண்பர்கள் சிலர், பரவி வரும் ஜப்பானிய மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து விட்டனர்.  நீங்கள் உலகம் முழுவதும் சுற்றிக் கொண்டிருக்கிறீகள், எங்கள் கிராமத்துக்கு வந்து குழந்தைகளின் நிலையைப் பாருங்கள்” என்று உருக்கமாக எழுதியுள்ளான்.

மேலும் “உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் செல்லும் நீங்கள், எங்கள் கிரமத்துக்கு வர முடியாதா? எங்கள் கிராமத்தில் இருக்கும் பிரச்னையை தீர்த்து வையுங்கள்” என பிரதமரை தனது கடைசி நம்பிக்கையாக நினைத்து அந்த மாணவன் இக்கடிதம் எழுதியுள்ளான்.

ஜப்பானிய மூளைக் காய்ச்சல் என்பது பன்றிகளிடம் இருந்து, மனிதர்களுக்குப் பரவக்கூடியது. முக்கியமாக குழந்தைகளுக்கு. இந்தக் காய்ச்சல் கொசுக்கள் மூலம் பரவுகிறது. ஒடிசா மாநிலம் மல்காங்கிரி மாவட்டத்தில் மட்டும் கடந்த ஒரு மாதத்தில் 505 கிராமங்களில் அடங்கிய 80-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்நோயால் உயிரிழந்துள்ளனர்.

காய்ச்சல், உடல் சோர்வு மற்றும் குமட்டல் போன்றவை ஜப்பானிய மூளைக் காய்ச்சல் வருவதற்கான அறிகுறிகள் ஆகும். ஆனால், இந்த அறிகுறிகள் வெளியே தெரிவதற்கு 8-ல் இருந்து 10 நாட்கள் ஆகும். சரியான மருத்துவ சிகிச்சைகள் கிடைக்காத நிலையில் குழந்தைகள் உயிர் இழக்க நேரிடுகிறது.

இந்த நோய் குறித்து கண்காணிக்க, சிறப்புப் பணி அதிகாரியாக மல்காங்கிரி மாவட்டத்துக்கு ரூபராஜ் சஹு நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால், "எதிர்பார்த்தபடி, எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை" என்று தெரிவித்தார்.

வெளிநாடுகளுக்குச் சென்று நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற அரசு எடுக்கும் முயற்சிகள் ஒருபுறம் இருந்தாலும், நாட்டில் உள்ள மக்களின் மீது அக்கறை கொண்டு, அவர்களின் நலனுக்காக சில நடவடிக்கைகளை எடுத்தால், மல்காங்கிரி மாவட்ட உயிரிழப்பு போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்கலாம்.

இதேபோல், பெங்களூருவைச் சேர்ந்த 8 வயது மாணவன் அபிநவ், எஷ்வந்த்பூரில் உள்ள தேசியப் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறான். “எங்கள் பள்ளி மிகவும் ஒழுக்கத்துக்கு பெயர் போனது, பள்ளியின் நுழைவு நேரத்தை தாண்டிச் சென்றால் தண்டனை வழங்கப்படும். அவர் வீட்டில் இருந்து பள்ளிக்கு 10-15 நிமிடங்கள் தான் ஆகும், ஆனால் பேருந்தில் வருவதால் 40-45 நிமிடங்கள் ஆகிறது. ஏனெனில், அந்தப் பேருந்து வரும் வழியில், எஷ்வந்த்பூர் ரயில்வே க்ராஸிங் உள்ளது. பள்ளி செல்லும் நேரத்தில் அந்த கிராஸிங் மூடப்படுகிறது. இதனால், மாலையிலும் தாமதமாகத் தான் வீடு திரும்ப முடிகிறது” என்று பிரதமர் மோடிக்கு, கடந்த அக்டோபர் மாதம் தன் தாத்தாவின் உதவியுடன் கடிதம் எழுதியுள்ளான்.

மேலும், “மேம்பாலம் அமைக்க ஆரம்பிக்கப்பட்ட வேலைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு கொடுக்க வேண்டிய பணம் கொடுக்கப்படாததால் வேலைகள் தொடர்ந்து நடைபெறவில்லை என்று சொல்லபடுகிறது. அதனால், தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என்றும் அந்த மாணவன் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளான்.

இதற்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து பதில் அளித்தது மட்டுமல்லாமல், ரயில்வே துறைக்கு, பிரச்னையை தீர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது. பெங்களூரு மாணவன் அனுப்பிய கடிதத்துக்கு பதில் வந்தது போல, ஒடிசா மாணவர் தன்னுடைய கிராம மக்களின் உயிரைக் காப்பாற்றக் கேட்டு அனுப்பப்பட்டிருக்கும் கடிதத்துக்கும் பதில் வரும் என்றும், உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நம்பிக்கையோடு காத்திருப்போம்!

- நந்தினி சுப்பிரமணி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close