Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

''இந்திய மீடியாவை மீட்க வந்த தேவ தூதன் நான்!'- அர்னாப் அதிரடி

'டைம்ஸ் நவ் ' எடிட்டர் இன் சீஃப் பதவியில் இருந்து அர்னாப் கோஸ்வாமி விலகியுள்ளார். 'தி நியூஸ் ஹவர் ' என்ற பெயரில் அர்னாப் நடத்தி வந்த விவாத மேடை அனல் பறக்கும் ஒரு நிகழ்ச்சி. விவாத மேடைகளில் விருந்தினர்களை பேச விடாமல் தனது தர்மச்சங்கடமான கேள்விகளை எழுப்புவதாக அர்னாப் மீது குற்றச்சாட்டு இருந்தது.  கடந்த 10 ஆண்டு காலமாக டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் 'பிரைம் டைம் ' அர்னாப்பின் நியூஸ் ஹவர் நிகழ்ச்சிக்குதான் ஒதுக்கப்பட்டிருந்தது. டைம்ஸ் நவ்வின் லாபத்தில் கிட்டத்தட்ட 60 சதவீதத்தை இந்த நிகழ்ச்சிதான் பெற்றுத் தந்ததாகவும் சொல்லப்படுகிறது. டிஆர்பி ரேட்டிங்கும் இந்த நிகழ்ச்சிக்குதான் அதிகமாக இருந்திருக்கிறது. எந்த ஒரு விஷயத்தையும் தீவிரமாக விவாதிப்பதாலும், ஆக்ரோஷமான கருத்துக்களாலும் நாடு முழுவதும் அர்னாப்பின் விவாத மேடையை காண லட்சக்கணக்கான பார்வையாளர்கள் உருவாகியிருந்தனர். இந்தியாவின் மிகவும் பாப்புலரான டி.வி. ஆங்கராக ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டதும் இவருக்குதான்.

இவரது விவாத மேடையைப் பார்த்த பின்னர்தான் பல இந்திய சேனல்களும்  பிரைம் டைம் நேரத்தில் விவாத மேடைகளை அமைத்தன. தமிழில் விவாத மேடையை நடத்துபவர்களைக் கூட, 'அர்னாப் மாதிரி அவர பேசவே விட மாட்டிக்கிறாருனு' பார்வையாளர்கள் விமர்சிப்பதை காண முடியும். நாட்டின் எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் ஒருவர் அடையாளமாக இருப்பார். அமிதாப் திரைத்துறைக்கு ஒரு அடையாளம் என்றால், சச்சின் கிரிக்கெட்டுக்கு ஒரு அடையாளம் என்றால் தொலைக்காட்சிக் துறைக்கு அர்னாப்பும் ஒரு அடையாளம்தான். விவாதிக்கக் கூடியதன்மையில் கருத்து திணிப்பில் வேறுபாடு இருந்தாலும் ஒரு நிகழ்ச்சியை நாடு முழுவதும் கொண்டு போய் சேர்த்ததிலும் வெற்றிகரமாக நடத்திக் காட்டியதிலும் அர்னாப்  ஒரு உதாரணம்தான்.

இப்படியாகப்பட்ட ஒரு டி.வி ஆங்கர் திடீரென்று  டைம்ஸ் நவ் எடிட்டர் பதவியில் இருந்து விலகியுள்ளார். டைம்ஸ் நவ் மற்றும் எக்கனாமிக்ஸ் டைம்ஸ் தொலைக்காட்சிகளுக்கு எடிட்டர் இன் சீப் மற்றும் செய்தி பிரிவு தலைவராக அர்னாப் செயல்பட்டு வந்தார்.  அவரது ராஜினாமா மீடியா உலகில் வியப்பை அளித்துள்ளது. சமூக வலைதளங்களில் அர்னாப்பை விமர்சிப்பவர்களுக்கு கூட அவரது ராஜினாமாவை கண்டு ஆச்சரியப்படுகின்றனர்.

டைம்ஸ் நவ் தொலைக்காட்சி பிரபல 'டைம்ஸ் ஆப் இந்தியா' நாளிதழை நடத்தி வரும் 'பென்னட் அண்டு கோல்மென்' நிறுவனத்துக்கு சொந்தமானது. பென்னட் அண்டு கோல்மென் நிறுவனத்துக்கு குஜராத்தைச் சேர்ந்த வினித் ஜெயின் -ராஜ் ஜெயின் சகோதரர்கள் உரிமையாளர்கள். அர்னாப் பதவி விலகலுக்கு சில காரணங்கள் சொல்லப்படுகின்றன.

அண்மை காலமாக காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் அர்னாப் குறித்து, ஜெயின் சகோதரர்களிடம் தொடர்ந்த புகார் கூறி வந்துள்ளனர். ஒரு சார்பு நிலை எடுத்து பேசுவதாகவும் குறை கூறியுள்ளனர். இது தவிர அர்னாப்புக்கு டைம்ஸ் நவ் அளித்திருந்த சில பொறுப்புகளிலும் கருத்து வேறுபாடு இருந்துள்ளது. எல்லாவற்றையும் விட  'பிராண்டை விட தான் முக்கியமானவன் ' என்ற போக்கு அர்னாப்பிடம் தலைதூக்கியதாகவும் கூறப்படுகிறது.

இவைகள் நிர்வாகத் தரப்பில் சொல்லப்படும் குற்றச்சாட்டுகளாக இருந்தாலும் அர்னாப்புக்கே தனியாக சேனல் ஒன்றை தொடங்கி நடத்த வேண்டும் என்ற எண்ணம் சில ஆண்டு காலமாகவே இருந்துள்ளது. டெல்லியில் கடந்த மாதத்தில் சிஐஐ சார்பாக நடந்த கருத்தரங்கில் பங்கேற்ற அர்னாப், ''தன்னை  பத்திரிகைத்துறையை மீட்க வேந்த தேவதூதன்'' என பேசியது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. ''இந்திய பத்திரிகைத்துறையில் வெளிநாட்டு முதலீட்டை அதிகரிப்பது அவசியம் '' என்ற கருத்தை வலியுறுத்தி  அந்த மேடையில் பேசியதும் பலரது புருவத்தை உயரச் செய்தது. ''இனிமேல் செய்தித்துறையின் தலைமையகமாக டெல்லி இருக்காது. டெல்லியில் இருந்து வெளியே அதனை எடுத்துச் செல்வோம்'' என்றும்  அர்னாப் அப்போது பேசியிருந்தார்.தனக்கு நெருக்கனமானவர்களிடம் தனியாக நிறுவனம் தொடங்க வேண்டும் என்றும் அடிக்கடி கூறியுள்ளார்.

அர்னாப் கோஸ்வாமி ராஜினாமா செய்து விட்டதாக கூறப்பட்டு விட்டாலும், டைம்ஸ் நவ் நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வமாக அலுவலகரீதியிலான உள் அறிவிப்பை வெளியிடவில்லை. இதனால் அர்னாப் திரும்ப வருவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் வதந்தி இருக்கிறது. அதேவேளையில். டைம்ஸ் நவ்வில் இருந்து அர்னாப் வெளியேறியதையடுத்து அவரைக் கொத்திக் கொண்டு போக , போட்டிப் போட்டுக் கொண்டு செய்தி நிறுவனங்கள் கிளம்பியுள்ளன. அதில் மிக முக்கியமானது ராபர்ட் முர்டோக்கின் ஹாங்காங்கை தலைமையிடமாக கொண்டு செயல்படும் 'பாக்ஸ் நியூஸ்.

அர்னாப்பை இந்திய பார்ட்னராக கொண்டு,  33 சதவீதம் வரை முதலீடு செய்ய பாக்ஸ் நியூஸ் முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. தெற்காசியாவின் அசைக்க முடியாத தொலைக்காட்சியாக வலம் வரும் 'டைம்ஸ் நவ் ' வை வீழ்த்தி விட வேண்டுமென்ற நோக்கில் பாக்ஸ் நியூஸ் இருக்கிறதாம். அது மட்டுமல்லாமல் வெளிநாட்டில் வசித்து வரும் ஒரு கோடியே 60 லட்சம் இந்தியர்களும் கூட பாக்ஸ் நியூசின் இலக்கு. ஆனால், தற்போதைய இந்திய சட்டப்படி வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய மீடியா நிறுவனங்களில் 26 சதவீதம் மட்டுமே முதலீடு செய்ய முடியும். சுதத்திரத்தின் போது வகுத்த சட்டம் இது.

இது தவிர அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் ட்ரம்பிற்கு தேர்தல் நிதியாக, 1.1 மில்லியன் டாலர்கள் வழங்கிய  சிகாகோ இந்திய தொழில் அதிபர் சாலப் குமார், இன்போசிஸ் முன்னாள் தலைவர் மோகன்தாஸ் பாய், வெளிநாட்டு வாழ் தொழிலதிபர் அனில் மோங்கா உள்ளிட்ட ஒரு பட்டாளமே மும்பை, டெல்லி நகரங்களில் அர்னாப்பிற்கு ஆதரவாக தொலைக்காட்சித் தொடங்குவ்தற்கு நிதி திரட்ட களத்தில் குதித்திருக்கிறதாம்.

மத்திய அரசின் ஆதரவும் அர்னாப்பிற்கு தாராளமாக கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.  கடந்த  2ம் தேதி, பிரதமர் மோடி ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், 'இந்திய மீடியாக்கள் உலகத் தரத்துக்கு உயர வேண்டும். சர்வதேச தரத்திலான நிகழ்வுகளை ஒளிபரப்ப வேண்டும்' என்றார். இதே மோடியின் அரசுதான் அர்னாப்பிற்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பும் அளித்துள்ளது. 'ஒரு தொலைக்காட்சி சேனலைத் தொடங்குவது என்பது சாதாரண விஷயம் அல்ல. பெரிய தலைவலி பிடித்த விஷயம்தான். ஆனால் அர்னாப்பை பொறுத்த வரை,எல்லா அனுமதியும் மிக எளிதாகவே கிடைக்கும் '' என்கின்றனர் விஷயம் தெரிந்தவர்கள்.

டைம்ஸ் நவ்வில் இருந்து அர்னாப் விலகியது அறிந்ததுமே ஜி டெலிவிசார்ட்ஸ் நிறுவனம் நடத்தி வரும் 'வியான்' என்று அழைக்கப்படும் (உலகம் ஒரே நாடு) டி.வியில் பொறுப்பேற்குமாறு அழைத்திருக்கிறது. ஆனால் முடிவு ஏற்படவில்லை. மேலும் இரு  ஆங்கில தொலைக்காட்சிகள் அர்னாப்பிற்கு வலை விரித்திருக்கின்றன.

இதற்கிடையே நேற்று டைம்ஸ் நவ் அலுவலகத்துக்கு வந்த அர்னாப், 'நியூஸ் ஹவர் ' நிகழ்ச்சியில் தன்னுடன் பணியாற்றியவர்களுடன் சிறிது நேரம் உரையாற்றினார். உணர்ச்சி பெருக்குடன் காணப்பட்ட அர்னாப், பேசிய 3 நிமிட வீடியோ காட்சி இணையங்களில் வெளியாகியுள்ளது. அவரது பேச்சில், ''சுதந்திரமான ஊடகத்தை என்னால் இங்கு நடத்த முடிந்தது என்றால் அதற்கு காரணம் நீங்கள்தான். இந்த சேனலை முதலிடத்துக் கொண்டு வருவதற்காகத்தான் இது போல நான் செயல்பட்டேன் . இப்போது புதிய கேம் தொடங்கியிருக்கிறது' என பேசியுள்ளது ஊகங்களை உறுதி செய்கிறது.

''டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் அர்னாப் சாதித்தது போல புதிய தொலைக்காட்சிகளில் உடனடியாக மந்திரம் நிகழ்த்தி விட முடியாது. வியூவர்ஷிப் இந்த விஷயத்தில் முக்கிய கேம் ஆடும் '' என்கின்றனர் நிபுணர்கள்.

அர்னாப் எங்கு சென்றாலும் ரசிக்கப்படுவார், விரும்பப்படுவார், திட்டப்படுவார், கேலி செய்யப்படுவார். எது எப்படியானாலும் அர்னாப் திரும்பும் வரை களம் அமைதியாக இருக்கும்.!

-எம்.குமரேசன்

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close