Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முலாயம் சிங் குடும்பப் பிரச்னை சமரசமானது எப்படி?

த்தரபிரதேசம் அளவில் பெரிய மாநிலம். எனவே, அங்கு அரசியல்வாதிகளும் அரசியலும் அதிகம். 2017 பிப்ரவரி மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தினந்தோறும் அரசியல் பரபரப்புகள் அரங்கேறி வருகின்றன.


தந்தையுடன் மோதல் காரணமாக அகிலேஷ் தனிக் கட்சி தொடங்கப்போகிறார் என்று  அரசியல் வானில் உச்சகட்ட வெப்பம் எகிறியது. அதிர்ச்சியடைந்த முலாயம், இல்லை, இல்லை எங்களுக்குள் பிரச்னை இல்லை என்று ஒன்று பட்டு விட்டோம் என்று சொல்லி அரசியல் வானிலையை சட் என்று குளிர்படுத்தி விட்டார்.  அகிலேஷ்தான் முதல்வர். அவரை மாற்றும் எண்ணம் இல்லை என்று அறிவித்து பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் முலாயம்.

இதனைத்தொடர்ந்து உ.பி சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு சமாஜ்வாடி கட்சி தொடங்கியது. பிரசார மேடையில் முலாயம் சிங் யாதவ் உடன், முதல்வர் அகிலேஷ் யாதவ், முலாயமின் சகோதர ரும், அகிலேஷின் சித்தப்பாவுமான ஷிவ்பால் யாதவும் இருந்தனர். மூவரும் ஒரே மேடையில் தோன்றி தொண்டர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர். எதிரணியில் இருக்கும் பி.ஜே.பி., காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகளின் முகாமை இது வாயடைத்துப் போகச் செய்து விட்டது விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். 

இதுதவிர கடந்த 5-ம் தேதி சமாஜ்வாடி கட்சியின் ஆண்டு விழா லக்னோவில் நடைபெற்றது. இதில் முலாயம் குடும்பத்தினர் தங்களுக்குள்ளான வேறுபாடுகளை மறந்து ஒன்றாகக் கூடினர்.

மோதல் முடிவுக்கு வந்தது எப்படி?

2017-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாடி கட்சி வெற்றி பெற்றால், யார் முதல்வர் என்பதில்தான் முலாயம் சிங்குக்கும் அவரது குடும்பத்துக்குள்ளும் பிரச்னை வெடித்தது என்கிறார்கள். அகிலேஷ் யாதவை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கவேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். ஆனால், கடந்த 5 ஆண்டு ஆட்சி, தான் சொன்னபடி நடக்கவில்லை என்று முலாயம் அடிக்கடி வெளிப்படையாகவே சொல்லி வந்தார்.


2017 சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாடி வெற்றி பெறும் பட்சத்தில் அகிலேஷ் முதல்வர் ஆகக் கூடாது என்று முலாயம் திட்டமிட்டாராம். அதற்கான வேலைகளில் அவர் ஈடுபட்டதாகத் தெரிகிறது. ஆனால், அவர் எதிர்பார்த்ததற்கு மாறாக சமாஜ்வாடி கட்சிக்குள் அகிலேஷூக்கான ஆதரவு அதிக அளவில் இருந்தது. தனிகட்சி தொடங்க அகிலேஷ் திட்டம் என்றெல்லாம் செய்திகள் வந்தபிறகுதான் அதிர்ந்து போன முலாயம் பிரச்னைக்கு திடீரென முற்றுப்புள்ளி வைத்தார்.
இப்போது ஒற்றுமையாக தேர்தலைச் சந்திப்பது என்றும், தேர்தல் முடிவுக்குப் பின்னர் அடுத்த கட்ட நகர்வைப் பார்த்துக்கொள்ளலாம் என்றும் முலாயம் முடிவு செய்திருக்கிறார். இதனால்தான் சமாஜ்வாடி வெற்றி பெற்றால் முதல்வர் யார் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "தேர்தல் வெற்றிக்குப் பிறகு சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ-க்கள் கூடித்தான் அதை முடிவு செய்வார்கள். இப்போதைக்கு அந்தக் கேள்வி எழவில்லை" என்று சொல்லி இருக்கின்றார். இப்போதைக்கு முலாயம் குடும்பத்தில் சண்டை ஓய்ந்திருக்கிறது. தேர்தல் முடிந்தபிறகு இன்னொரு குஸ்தி இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

-கே.பாலசுப்பிரமணி

எடிட்டர் சாய்ஸ்