Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மிஸ் இந்தியா யாஷ்மினின் ஜீரோ சைஸ் ரகசியம்!

 

ந்தியன் பாடி பில்டிங் அண்ட் ஃபிட்னெஸ் ஃபெடரேஷன் (Indian Body Building and Fitness Federation - IBBFF), நடத்திய 2016-ம் ஆண்டுக்கான 'மிஸ் இந்தியா' போட்டியில் பட்டத்தை வென்றவர்,  ஹரியானா மாநிலத்தின் குர்கான் நகரத்தைச் சேர்ந்த  யாஷ்மின் சௌஹான் மானக். 'இந்தியாவின் இரும்புப் பெண்' எனப் பாராட்டப்படும் யாஷ்மின், திடகாத்திரமான உடலமைப்பைக் கொண்டிருப்பதற்காக பல பதக்கங்களைப் பெற்றிருக்கிறார். சொந்தமாக ஜிம் ஒன்றை நடத்தி வரும், 36 வயதாகும் யாஷ்மினிடம், 300க்கும் அதிகமான ஆண்கள் பயிற்சி பெறுகிறார்கள்.

 

''எனக்கு இரண்டு வயது இருக்கும்போது எனது தாய் தன் முன்னாள் காதலனைத் திருமணம் செய்துகொண்டார். என் தந்தை வேறு பெண்ணை மறுமணம் புரிந்துகொண்டார். பெற்றோரால் கைவிடப்பட்ட என்னை பாட்டி - தாத்தா வளர்த்தனர். இதனால் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டேன். கூச்சம் மற்றும் பயந்த சுபாவம் உள்ளவளாக வளர்ந்தேன்.

ஏழாம் வகுப்பு படித்தபோது டைஃபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டேன்.  நோய் முற்றிய நிலையில் நான் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, அளவுக்கதிகமாக வீரியமிக்க மருந்துகளைச் செலுத்தினர். இதன் பக்கவிளைவால் என் தலைமுடி எல்லாம் உதிர்ந்து போனது. முகம் முழுக்க பருக்களும், உடல் எடையும் அதிகரித்தது. பள்ளித் தோழிகளும் உறவினர்களும் என்னைக் கேலி செய்து சீண்டுவது வழக்கமாகிப்போனது.

அந்தச் சமயத்தில்தான் நான் படித்த தன்னம்பிக்கை புத்தகங்கள், கடின உழைப்பும் மன உறுதியும் இருந்தால் வாழ்வில் எதையும் சாதிக்க முடியும் என எனக்கு உத்வேகம் தந்தன. புத்தகங்களில் படித்த, தொலைக்காட்சியில் பார்த்த உடற்பயிற்சிகளை செய்து வந்தேன். உடல் இளைக்க வேண்டும் என்பதற்காக காலை உணவைச் சாப்பிடாமல் இரண்டு வேளை மட்டும் உணவு உட்கொண்டேன். எந்தப் பலனும் இல்லை.

பள்ளிப் படிப்பை முடித்த பின் ஏரோபிக்ஸ் கோர்ஸில் சேர்ந்தேன். சீரான உணவு மற்றும் உடற்பயிற்சி குறித்த கருத்தரங்கங்களில் கலந்து கொண்டு அவற்றையெல்லாம் பயிற்சி செய்து நல்ல உடல் கட்டமைப்பைப் படிப்படியாகப் பெற்றேன். நான் பயின்றவற்றை இப்போது என் ஜிம்மில் பயில்பவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறேன்'' என்ற யாஷ்மின், ஜீரோ சைஸ் இடுப்பு மற்றும் அழகான, பொருத்தமான உடற்கட்டமைப்பைப் பெற விரும்பும் பெண்களுக்காக வழங்கிய குறிப்புகள் இங்கே..!

1. காலை உணவை தவறாமல் சாப்பிட வேண்டும்.

2. இருவேளை சாப்பாடு என்ற பெயரில் அதிகம் உண்பதை தவிர்க்க வேண்டும். மாறாக, போஷாக்கான உணவை, காலை, மதியம், இரவு என்றில்லாமல், நாலைந்து உணவு இடைவேளைகளாகப் பிரித்துச் சாப்பிடலாம்.

3. நீண்ட நேரம் பசியோடு இருக்கக் கூடாது.

4. உடலுக்கு ஒவ்வாத உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

5. பின்பற்ற முடியாத கடினமான டயட்களைத் தவிர்க்க வேண்டும்.

6. அஜீரணம் ஏற்படும் வகையில் சாப்பிடக் கூடாது.

7. டயட்டீஷியனின் ஆலோசனையின் பேரில் கால்சியம் மற்றும் வைட்டமின் D3 இருக்கும் உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.

8. உணவுப் பழக்கத்தை வாழ்க்கை முறையாகப் பின்பற்ற வேண்டும்.

9. தரையில் சப்பணமிட்டு உட்காரப் பழக வேண்டும். இதனால் வயிற்றுக்குக் கீழ் உள்ள பாகங்கள் உறுதியடையும்.

10. பிரணாயமப் பயிற்சி உடலையும் மனதையும் சீராக்கும்.

11. உடம்பின் எல்லா உறுப்புகளும் இயங்கும் வகையிலான உடற்பயிற்சிகளை செய்யலாம். இதனால் கணிசமாக கலோரிகள் குறையும்.

12. உடல் இளைக்க மாத்திரைகள், ஊசிகள், பிரத்யேக சிகிச்சைகள் என குறுக்கு வழிகளைப் பின்பற்ற வேண்டாம். ஏமாற்றத்துடன் பக்கவிளைவுகளே மிஞ்சும்.

13. உடற்பயிற்சியைப்போல, உணவுக் கட்டுப்பாடும் மிகவும் முக்கியம்.

14. எடை குறைப்பு மற்றும் கொழுப்பு குறைப்பு இரண்டும் வெவ்வேறானவை.

தசை, எலும்பு, உடல் உறுப்புகள், இரத்தம், கொழுப்பு மற்றும் தண்ணீர் இவை எல்லாம் உடல் எடையைத் தீர்மானிக்கின்றன.

தோலின் கீழ்பகுதியில் உடல் முழுவதும் பரவி இருப்பது கொழுப்பு. இந்தக் கொழுப்பு பாரம் தாங்காமல் வளைந்து தொய்ந்து இடுப்புச் சதையாக தொங்குகிறது. படிப்படியாக குடல், ஜீரண உறுப்புகள் மற்றும் இரத்தத்திலும் இந்தக் கொழுப்பு கலந்துவிடும்.

15. சிலருக்கு பிறவியிலேயே அகன்ற உடல்வாகு, எலும்பின் அதிக எடை மற்றும் உடலில் உள்ள தண்ணீரின் அளவினால் உடல் எடை அதிகமாக இருக்கும். இவர்கள் உடல் எடையைப் பற்றிக் கவலைப்படாமல் உடல் கட்டமைப்பைக் குறைக்க பயிற்சி செய்ய வேண்டும்.

16. உடற்பயிற்சியும் உணவுக் கட்டுப்பாடும் ஆரம்பத்தில் பின்பற்ற கடினமாக இருக்கும். ஆனால் இவையே நீண்டகால நிரந்தரமான ஆரோக்கியத்தையும் அழகையும் தரும் என்பதை உணர வேண்டும்.

மனோதிடம், தன்னம்பிக்கை, இச்சையை அடக்கும் சக்தி இருந்தால் நோய்கள் அண்டாத ஆரோக்கியமான வாழ்வையும், வலுவான, அழகான உடலையும் பெறலாம்!" என்கிறார் யாஷ்மின் சௌஹான் மானக்.

- ஶ்ரீலோபாமுத்ரா

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close