Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அடுத்த 3 ஆண்டுகளில் 17 லட்சம் பேர்!- மார்பில் புளி கரைக்கும் அதிர்ச்சி

ந்தியாவில் புற்றுநோயால் உயிரிழக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இந்திய மருத்துவ ஆய்வு கழகம் அதிர்ச்சி புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது. குறிப்பாக மார்பகப் புற்று நோய்.

இந்திய மருத்துவ ஆய்வு கழகம் வெளியிட்ட அந்த அறிக்கையில், 2012–ம் ஆண்டில் 39 ஆயிரத்து 234 பேரும், 2013–ம் ஆண்டில் 40 ஆயிரத்து 509 பேரும் 2014–ம் ஆண்டு 41 ஆயிரத்து 851 பேரும் மார்பக புற்றுநோயால் இறந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015–ம் ஆண்டில் இந்த உயிரிழப்பு எண்ணிக்கை 62 ஆயிரம் என்பது மார்பில் புளியை கரைக்கும் செய்தி. இதில் பொதுவான புற்றுநோய் பாதிப்பினால் உயிரிழந்தவர்கள்  24 சதவீதம் பேர் மட்டுமே.

மார்பகப்புற்றுநோயினால் அடுத்த 3 ஆண்டுகளில் அதாவது 2020–க்குள் புற்று நோயாளிகளின் எண்ணிக்கை 17 லட்சத்தை தாண்டும் என இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் தெரிவித்து இருக்கிறது.

மார்பகப் புற்றுநோய் குறித்த குறித்த விழிப்பு உணர்வு இந்தியப் பெண்களிடம் இல்லாதது, மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிந்து அதை தீர்ப்பதற்கான மேம்பட்ட மருத்துவ வசதிகள் இல்லாதது இந்த துறை தொடர்பான தேர்ந்த வல்லுனர்கள் அதிகளவில் இல்லாதது போன்ற காரணங்களால் இந்தியப்பெண்கள் மார்பகப் புற்றுநோய்க்கு ஆளாகி இறப்பது அதிகரித்துவருகிறது சமீபகாலங்களாக. மார்பகப்புற்றுநோய்க்கு ஆகும் செலவும் இந்நோய் தீவிரமடைய காரணங்களில் ஒன்றாக சொல்லப்படுகிறது.

“பிறக்கும் குழந்தைகளின் எதிர்காலத்தை நிர்ணயிப்பது தாய்ப்பால். பிறக்கும் குழந்தைகள் எதிர்காலத்தில் நோய் எதிர்ப்புத்திறன் அதிகரித்து சமூகத்தில் ஆரோக்கியமாக வாழ அடிப்படையானது தாய்ப்பால். அத்தகைய பாலை சுரக்கும் மார்பகங்கள் பெண்களுக்கு பெண்கள்   அளவு, வடிவ மாற்றங்கள் காலச்சூழலைப் பொறுத்து மாறுபடும். மார்பகங்களின் அளவு வடிவம் இவற்றிற்கும் மார்பகப்புற்றுநோய்க்கும் சம்பந்தமில்லை. அதேபோல் ஒரு பெண் தன் வாழ்நாளில் மார்பகம் தொடர்பான பல்வேறு பாதிப்புக்கு அவ்வப்போது ஆளாகிறாள். இளம்வயதில் ‘ஃபைப்ரோடெனோமா’ கட்டிகள், குழந்தை பிறந்த காலத்தில் கிருமித் தொற்றினால் மார்பகத்தில் சீழ் கட்டுவது, மெனோபாஸ் காலத்தில் உருவாகும் நீர்க்கட்டி உட்பட இப்படி பல பாதிப்புகள் ஏற்படுவது உண்டு. இவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டது மார்பகப்புற்றுநோய் என்கிறார் மருத்துவரும், திருச்சி மருத்துவக்கல்லுாரி உதவிப்பேராசிரியையுமான வி.பி சரசு. மார்பகப் புற்றுநோய் குறித்த பல விஷங்களை அவர் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

மார்பகப்புற்றுநோய் வராமல் தவிர்க்க பெண்கள் தங்களது மார்பகம் குறித்த புரிதல்களை கொண்டிருக்கவேண்டும். ஒவ்வொரு காலகட்டத்திலும் அதில் ஏற்படும் மாற்றங்களை முழுமையாக அறிந்துவைத்திருப்பது அவசியம். தொடர்ச்சியான இந்த செயல்பாடுகளின்மூலம் ஆரம்பத்திலேயே  மார்பகப்புற்றுநோயை கண்டறிய முடியும்.

இந்த அறிகுறிகள் தென்பட்டால்...

மார்பகங்களில் வலி ஏற்படுத்தாத கட்டி, வலியுடன் கூடிய கட்டி, மார்பகம் தடித்துப்போதல், மார்புக்காம்புகளில் ரத்தம் அல்லது திரவம் கசிவது, தோல் தடிப்பது அல்லது இறுக்கமாய் காணப்படுவது, மார்புக்காம்புகள் வழக்கத்துக்கு மாறாக உள்ளிழுத்துக் கொள்வது, அக்குளில் வீக்கம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துகொள்வது அவசியம். .

மார்பகப்புற்றுநோய் வர பொதுவான காரணங்கள்....

 வெகுசீக்கிரம் பூப்படை வது, மாதவிடாய் சுழற்சி 50 வயதுக்கு மேலும் தொடர்வது, முதல் பிரசவம் 30 வயது வரையிலும் நிகழாமல் இருப்பது, குழந்தை பெற்றுக்கொள் ளாமல் இருப்பது, தாய்ப்பால் தராதது அல்லது தர இயலாத நிலை, மிக அதிக எடை ஆகியவை.

சுயபரிசோதனை

குறிப்பிட்ட (30 வயதுக்கு மேல்) வயதில் பெண்கள் மார்பக சுய பரிசோதனை செய்துகொள்வது நலம். இந்த பரிசோதனை மார்பகப் புற்றுநோயை  ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதிலிருந்து முழுமையாக  குணம் பெற வழிவகுக்கும் என்கிறார் மருத்துவர் சரசு. மாதவிலக்கு முடிந்த பிறகு பெண்கள் மார்பக சுயபரிசோதனையை பின்வரும் வழிமுறைகளை மேற்கொண்டு செய்யலாம்.
கண்ணாடி முன் நின்று மார்பகங்கள் அளவில், நிறத்தில், வடிவத்தில் கண்ணுக்குப் புலனாகும் வகையில் ஏதேனும் மாறுபாடு, அல்லது வீக்கம் தெரிகிறதா நன்கு கவனிக்கவும். இதை நின்றபடி, உட்கார்ந்தபடி மல்லாந்து படுத்தபடி என பல நிலைகளில் கவனித்து அறிய வேண்டும்.

கைவிரல்களில் ஏதாவதொரு வழவழப்பான க்ரீமை தடவிக்கொண்டு, வலது கையால் இடது மார்பகத்தையும், இடது கையால் வலது மார்பகத்தையும் தடவிப் பார்க்கவும். அக்குள் பகுதியிலிருந்து ஆரம்பித்து மார்பகம் முழுக்கப் பரிசோதிக்க வேண்டும். மார்பகக் காம்புகளை மெதுவாக அழுத்தி பால் போன்ற, மஞ்சள் நிற திரவம் அல்லது ரத்தம் போன்ற திரவம் ஏதாவது கசிகிறதா என்பதைக் கவனிக்கவேண்டும். கைகளை அசைக்கும்போது மடிப்புகள் அல்லது குழிவு போல் தென்படுவது. (மார்பகத்தோலில் குழிவு, சுருக்கம், புடைப்பு. மார்பகத்தில் வலி தொடர்ந்து சில வாரங்களுக்கு நீடிப்பது).

மார்பகங்களில் ஒன்றை மற்றதிலிருந்து வித்தியாசப்படுத்திக்காட்டும் ஏதேனும் மாற்றம், மார்பகக் காம்பைச் சுற்றிய பகுதி சிவந்து தடித்துக் காணப்படுவது, செந்நிறம், வெம்புண், தோல் பகுதியில் வெடிப்பு மற்றும் வீக்கம். இந்த அறிகுறிகளில் பெரும்பாலானவை தென்பட்டால், உடனடியாக மருத்து வரை அணுகவேண்டும்.

மேமோகிராம் பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை, மூலம் மேற்சொன்ன அறிகுறிகள் மார்புக புற்றுநோய்க்கானதா என கண்டறியப்படுகிறது. இதை மார்பக பயாப்ஸி டெஸ்ட் மூலம் உறுதிசெய்கின்றனர் மருத்துவர்கள்.

இப்படி மார்பகப்புற்றுநோய் இருப்பது உறுதியானால் ஆரம்பநிலையிலேயே உடனடியாக சிகிச்சையை தொடங்கலாம். இந்த அறிகுறிகள் இருந்தால்தான் மேற்சொன்ன பரிசோதனைகளை மேற்கொள்ளவேண்டும் என்பதில்லை. வருமுன் காப்பதே சிறந்தது என்பது மருத்துவத்துறைக்கான ஆதார முழுக்கம். இதனால் 30 பிளஸ் பெண்கள் கண்டிப்பாக இந்த டெஸ்ட்டுகளை ஆண்டுக்கு ஒருமுறை செய்துகொள்வது நல்லது.

நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் இதற்காக பெரிய செலவு ஆகும் என்று கவலைகொள்ளவேண்டாம். தமிழக அரசின் அம்மா முழு உடல் பரிசோதனை திட்டத்தின் கீழ் செயல்படும் பரிசோதனை மையங்களில் மிக குறைந்த செலவில் இந்த பரிசோதனைகளை  செய்துகொள்ளலாம். இதில் 3 வித பேக்கேஜ்கள் உள்ளன.

அம்மா கோல்ட் என்ற பேக்கேஜில் எக்ஸ் - ரே, இ.ஜி.சி., ஸ்கேனிங்' உட்பட, முழு உடல் அடிப்படை பரிசோதனைகளுக்கு, 1,000 ரூபாய் கட்டணமும், இவற்றுடன் கல்லீரல், நீரிழிவு பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், மஞ்சள் காமாலை, தைராய்டு, ரத்தம் உள்ளிட்ட பரிசோதனைகளுக்கு, அம்மா டைமண்ட் பேக்கேஜில் 2,000 ரூபாய் கட்டணமும்,  அம்மா பிளாட்டினம் என்ற மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனையில்,மேற்சொன்ன இரண்டு கட்ட பரிசோதனைகளுடன், கருப்பை, மார்பக புற்றுநோய் கண்டறிதல், எலும்பு அடர்த்தி திறனாய்வு, ரத்த வைட்டமின் - டி, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் பாரா தைராய்டு ஹார்மோன் பரிசோதனைகளுக்கு, 3,000 ரூபாய் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.

நவீன மருத்துவ உபகரணங்களுடன் ஏ.சி வசதி செய்யப்பட்டுள்ள இந்த பரிசோதனைக்கூடங்களை பொதுமக்கள் தங்கள் பொருளாதார சூழலுக்கு ஏற்றபடி பயன்படுத்தி வருமுன் காத்துக்கொள்ளலாம்.

- எஸ்.கிருபாகரன்

எடிட்டர் சாய்ஸ்