Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

2000 ரூபாய் இந்திய கரன்ஸி... - உண்மையா...?

கடந்த அக்டோபரில் இருந்து இந்திய ரிசர்வ் வங்கி '2000' ரூபாய் தாள்களை வெளியிட இருப்பதாக செய்திகள் வெளியானபடியே இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் சமூக வலைதளங்களில் 'இதுதான் வரப்போகும் புதிய 2000 ரூபாய் தாள்' என பிங்க் நிற ரூபாய்தாள்களின் படங்கள் பகிரப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே கருப்பு பண பதுக்கலைத் தடுக்க வேண்டி புழக்கத்தில் உள்ள 1000 ரூபாய் தாள்களை வாபஸ் வாங்க வேண்டும் என பொருளாதார நிபுணர்கள் குரல் கொடுத்துவருகிறார்கள். 

2000

நாசிக்,தேவாஸ், ஹாசிங்காபாத் ஆகிய ஊர்களில் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் அரசு அச்சகம் இருந்தாலும், இந்த 2000 ரூபாய் தாள்களை மட்டும் மைசூரில் உள்ள இந்திய அரசு ரூபாய் அச்சடிக்கும் புதிய அச்சகத்தில் அச்சாகியுள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அச்சகம் கடந்த 2015-ம் ஆண்டு நவம்பரில் தொடங்கப்பட்டு,  2016 ஏப்ரல் முதல் செயல்படதொடங்கியது. அதன் முதல் வேலையாக இந்த புதிய 2000 ரூபாய் தாளினை அச்சடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. 

2000

உண்மையில் இப்படி ஒரு தாள் வரபோகிறதா? என மத்திய ஆளுங்கட்சியான பா.ஜ.க.வின் தமிழக தலைவர் திருமதி.தமிழிசை அவர்களிடம் கேட்டபோது " அப்படி ஒரு தாள் வரப்போவதாக சோசியல் மீடியா மூலமாகவே தெரிந்து கொண்டேன். இனிமேல்தான் அது குறித்து விசாரிக்க வேண்டும். அதன் பின்னரே இது பற்றிய கருத்து தெரிவிக்க முடியும்" என்றார். 

பிரபல பொருளாதார ஆய்வாளர் ஜெ.ஜெயரஞ்சனிடம் கேட்டபோது " நாட்டின் பொருளாதார நிலை உயர உயர அனைத்து வித பணபரிமாற்றத்தையும் வங்கிகளின் மூலமாக செயல்படுத்தத்தான் மற்ற நாடுகள் விரும்புகின்றன, ஆனால் இங்கு இப்படி அதிக மதிப்புடைய ரூபாய் வர இருப்பதாக செய்திகள் வருகின்றன. என்னைப்பொறுத்தவரை இது நல்லதாக படவில்லை. பணப்பதுக்கலுக்கே இது வழிவகுக்கும். நேரடி பணப்பரிமாற்றத்தை குறைத்து வங்கி அட்டைகள் மூலம் வர்த்தகம் செய்ய வலியுறுத்துகிறார்கள். அதே நேரம் அந்த பரிமாற்றத்துக்கு என வரி விதிக்கிறார்கள். நான் எனது பணத்தை குறிப்பிட்ட வங்கியின் அட்டை கொண்டு மற்றொரு வங்கியில் கணக்கு வைத்திருக்கும் கடைக்காரரிடம் வெளிப்படையாக்க பணம் செலுத்தினால் அதற்கும் வரி விதித்து பணம் பிடிக்கிறார்கள். மற்றொரு பக்கம் கறுப்பு பணப் பதுக்கலுக்கு வழிவகுக்கும் தாள்களை வெளியிடும் முயற்சியில் இருக்கிறார்கள். ரிசர்வ் வங்கி டெபிட் கார்ட் பரிவர்த்தனைக்கு வரி விதிக்ககூடாது என அறிவுறுத்த வேண்டும். அமெரிக்காவில் எல்லாம் பெரும்பாலும் 10 டாலர்களுக்கு மேல் யாரும் கையில் வைத்துக்கொள்வதில்லை. அனைத்தும் கார்டுகளின் மூலம்தான் செலவு செய்கிறார்கள். எப்படியோ குறைந்த இடத்தில் அதிகப்பணத்தை வைக்க மட்டுமே இது உதவும்" என்று தெரிவித்தார். 

2000

 

உண்மையில் இப்படி ஒரு தாள் வரத்தான் போகிறதா என ரிசர்வ் வங்கி உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது " எங்களுக்கு மத்திய அரசிடம் இருந்து இன்னும் க்ளியரன்ஸ் வரவில்லை. வரும். ஆனால் எப்போது புழக்கத்தில் வரும் என்று உறுதியாக தேதி சொல்லமுடியாது" என்றார். 

"இப்பவே டாஸ்மாக்கில் மட்டுமே ஆயிரம் ரூபாய் தாளுக்கு சில்லறை கிடைக்கிறது. இனி இரண்டாயிரம் ரூபாய் தாளும் வந்துவிட்டால் பேங்க் வாசலில்தான் தேவுடு காக்கவேண்டும் என்கிறார் அந்த ஏழை விவசாயி" என இப்போதே கலாய்க்க தொடங்கிவிட்டனர் நெட்டிசன்கள். 

- வரவனை செந்தில்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close